ஆறாம் திருமொழி – காசுங்கறையுடை
(பெற்றபிள்ளைகளுக்குப் பரமபுருஷனுடைய திருநாமங்களை
இட்டழைக்கும்படி மனம்திருந்தாதார்க்கு உபதேசித்தல்)
கலித்துறை
3 81:
காசும்கறையுடைக்கூறைக்கும் அங்கோர்கற்றைக்கும்
ஆசையினால் அங்கவத்தப்பேரிடும் ஆதர்காள்.
கேசவன்பேரிட்டு நீங்கள்தேனித்திருமினோ
நாயகன்நாரணன் தம்அன்னைநரகம்புகாள். (2) 1.
382:
அங்கொருகூறை அரைக்குடுப்பதனாசையால்
மங்கியமானிடசாதியின் பேரிடும்ஆதர்காள்.
செங்கணெடுமால். சிரீதரா. என்றுஅழைத்தக்கால்
நங்கைகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 2.
383:
உச்சியில்எண்ணெயும் சுட்டியும்வளையும்உகந்து
எச்சம்பொலிந்தீர்காள். எஞ்செய்வான்பிறர்பேரிட்டீர்?
பிச்சைபுக்காகிலும் எம்பிரான்திருநாமமே
நச்சுமின் நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 3.
384:
மானிடசாதியில்தோன்றிற்று ஓர்மானிடசாதியை
மானிடசாதியின்பேரிட்டால் மறுமைக்கில்லை
வானுடைமாதவா. கோவிந்தா. என்றுஅழைத்தக்கால்
நானுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 4.
385:
மலமுடையூத்தையில்தோன்றிற்று ஓர்மலவூத்தையை
மலமுடையூத்தையின்பேரிட்டால் மறுமைக்கில்லை
குலமுடைக்கோவிந்தா. கோவிந்தா. என்றுவழைத்தக்கால்
நலமுடைநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 5.
386:
நாடும்நகரும்அறிய மானிடப்பேரிட்டு
கூடியழுங்கிக் குழியில்வீழ்ந்துவழுக்கதே
சாடிறப்பாய்ந்ததலைவா. தாமோதரா. என்று
நாடுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 6.
387:
மண்ணில்பிறந்துமண்ணாகும் மானிடப்பேரிட்டு அங்கு
எண்ணமொன்றின்றியிருக்கும் ஏழைமனிசர்காள்.
கண்ணுக்கினிய கருமுகில்வண்ணன்நாமமே
நண்ணுமின் நாரணன்தம்அன்னைநரகம்புகாள். 7.
388:
நம்பிநம்பியென்று நாட்டுமானிடப்பேரிட்டால்
நம்பும்பிம்புமெல்லாம் நாலுநாளில்அழுங்கிப்போம்
செம்பெருந்தாமரைக்கண்ணன் பேரிட்டழைத்தக்கால்
நம்பிகாள். நாரணன் தம்அன்னைநரகம்புகாள். 8.
389:
ஊத்தைக்குழியில் அமுதம்பாய்வதுபோல் உங்கள்
மூத்திரப்பிள்ளையை என்முகில்வண்ணன்பேரிட்டு
கோத்துக்குழைத்துக் குணாலமாடித்திரிமினோ
நாத்தகுநாரணன் தம்அன்னைநரகம்புகாள். 9.
390:
சீரணிமால் திருநாமமேயிடத்தேற்றிய
வீரணிதொல்புகழ் விட்டுசித்தன்விரித்த
ஓரணியொண்தமிழ் ஒன்பதோடொன்றும்வல்லவர்
பேரணிவைகுந்தத்து என்றும்பேணியிருப்பரே. (2) 10.