contact us

செய்திகள்

50" height="80" />

 

அன்பு நண்பர்களே, நலம் விரும்பிகளே, தெய்வத் தமிழ் வாசகர்களே!

ஒருமுறை பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் தபோவனம் ஸ்வாமிஜி அடியேனிடம் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளைக் கூறினார். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறையடியாரும், ஆன்மிகப் பெண்கவியும், ஞானியுமான செங்கோட்டை ஆவுடையக்காள் பற்றிய நூல் மற்றும் ஒலிநாடா கடந்த 2004இல் சென்னை நாரத கான சபாவில் வெளியிடப்பட்டது. தபோவனம் ஸ்வாமிஜியும் ஸ்ரீஅண்ணா கிருஷ்ணப்ரேமி ஸ்வாமியும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியை அடியேன் தொகுத்து வழங்கினேன். அப்போது தபோவனம் ஸ்வாமி, உலகளாவிய வலைத்தளங்களில் ஹிந்து சமூகத்துக்கு எதிராக திட்டமிட்ட வகையில் செய்யப்படும் அவதூறான விஷயங்களைச் சொல்லி, ”படித்த இளைஞர்கள் வெறுமனே வேலை வேலை என்று மட்டும் பார்க்காமல், சமுதாயப் பொறுப்புணர்வோடு ஏதாவது செய்ய வேண்டும்” என்றும் அறிவுறுத்தினார்.

எத்தனையோ வலைத்தளங்களில் நமது கலாசாரத்தோடு இயைந்த நல்ல தகவல்களை வெளிப்படுத்தி, நமது இளைய சமுதாய நண்பர்கள் நற்பணியில் ஈடுபடுவதைப் பார்க்கும்போது மகிழ்வாக இருக்கிறது. அந்த வகையில் அடியேனுக்கும் ஒரு கடமை உள்ளது. அது – ஒன்றாகச் சிந்திக்கும் மக்களை ஒருங்கிணைக்கும் பணி. எனவே இதை உங்களுக்கான கருத்துத் தளமாக எடுத்துக் கொள்ளலாம்.


சம்ஸ்க்ருதத்தை தேவ பாஷை என்றுதான் சொன்னார்கள். ஆனால் செம்மொழியான நம் தமிழ் மொழியோ தெய்வத் தமிழ் என்ற சிறப்பினைப் பெற்ற ஒன்று. இப்படி, நம் தமிழுக்கு தெய்வத் தமிழ் என்ற சிறப்பைப் பெற்றுத் தந்தவர்கள், ஐம்பெரும் நிலம் வகுத்து, அவற்றுக்கு தெய்வங்களையும் வகுத்த நம் சங்ககால முன்னோர்கள் என்றாலும், ஆழ்வார்களும், தேவார மூவரும், இன்னும் சைவ இலக்கியங்கள் கண்ட சான்றோர்களுமே முக்கிய இடம் பெறுகிறார்கள்.


எனவே, இந்த வலைத்தளத்தில் தெய்வத் தமிழ் பரப்பும் பிரபந்தப் பாசுரங்கள், சைவத் திருமுறைகள், அவற்றின் வாழ்வியல் சங்கதிகள், வழிகாட்டும் தகவல்கள், சமுதாயக் கருத்துகள், தமிழிலக்கியங்கள் காட்டும் நல்ல சங்கதிகள், நமது உண்மை வரலாறு, வாசகர் கட்டுரைகள், அபூர்வமான கோயில்கள் என்று பலவற்றை இடம்பெறச் செய்யும் எண்ணம் உண்டு.

நிச்சயமாக எந்தவிதமான அவதூறுகளையும் மோசமான மொழிகளையும் தாங்கி வரும் எந்தக் கட்டுரைக்கும் கருத்துக்கும் இங்கே இடமில்லை. குறிப்பாக, நம் தெய்வத் தமிழை  ‘காட்டுமிராண்டிகளின் பாஷை’ என்று திட்டுபவர்களுக்கு இங்கே இடம் இல்லை. 

ஒரு பத்திரிகையாளனாக, பத்திரிகை ஆசிரியராக பழம்பெருமை வாய்ந்த மஞ்சரி டைஜஸ்ட்டில் பணிபுரிந்தபோது, கடைசி பக்கக் கட்டுரைகளை நம் பழம்பெருமையும் இன்றைய நவீனமும் கலந்த மொழியில் வடித்தேன். நல்லதை நல்லோர் விரும்பி ஏற்பர் என்பதற்கேற்ப நிறைய நல்ல நெஞ்சங்கள் அடியேனின் கருத்துகளுக்கு ஆதரவளித்து உற்சாகமூட்டினர். (அந்தப் பெரியவர்களுக்கு அடியேனின் சிரம் பணிந்த வணக்கங்கள்).

 

அதே உற்சாகத்தோடு இந்தத் தளத்திலும் நேர்மறையான எண்ணங்களை முன் வைக்க ஆசை. ஆனாலும் நம் பண்பாட்டை இழுவுபடுத்துவோருக்கு தகுந்த வாதத்தை முன்வைத்து சாட்டையடி கொடுக்கும் எண்ணமும் உண்டு. இது குறித்த உங்களின் அனுபவ யோசனைகளை எழுதுங்கள். வலைத்தளத்தின் நோக்கம் முழுமை பெறுவது உங்கள் உதவியில் உள்ளது. தெய்வத் தமிழின் பெருமையை வெளிப்படுத்தும் கட்டுரைகள் ஆங்கிலத்திலும் தொடர்ந்து வெளிவரும்.

தமிழில் unicode format-ல் அனைவரும் படிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. எழுத்துரு (font) பிரச்னை வராது என்று எண்ணுகிறேன். 

உங்கள் கருத்துகளை எதிர்பார்த்து….


செங்கோட்டை ஸ்ரீராம்
sriram@journalist.com

செல் எண்: +91 988 404 9 108 / 9444 55 45 00

Leave a Reply