நான்காம்பத்து
முதல் திருமொழி – கதிராயிரம்
(ஸர்வேஸ்வரனைக் காணவேணுமென்று தேடுவார் சிலரும்,
கண்டார் சிலருமாகக் கூறுதல்)
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
3 28:
கதிராயிரமிரவி கலந்தெரித்தாலொத்தநீள்முடியன்
எதிரில்பெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
அதிரும்கழற்பொருதோள் இரணியனாகம்பிளந்துஅரியாய்
உதிரமளைந்தகையோடிருந்தானை உள்ளவாகண்டாருளர். (2) 1.
329:
நாந்தகம்சங்குதண்டு நாணொலிச்சார்ங்கம்திருச்சக்கரம்
ஏந்துபெருமைஇராமனை இருக்குமிடம்நாடுதிரேல்
காந்தள்முகிழ்விரல்சீதைக்காகிக் கடுஞ்சிலைசென்றிறுக்க
வேந்தர்தலைவஞ்சனகராசன்தன் வேள்வியில்கண்டாருளர். 2.
330:
கொலையானைக்கொம்புபறித்துக் கூடலர்சேனைபொருதழிய
சிலையால்மராமரமெய்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
தலையால்குரக்கினம்தாங்கிச்சென்று தடவரைகொண்டடைப்ப
அலையார்கடற்கரைவீற்றிருந்தானை அங்குத்தைக்கண்டாருளர். 3.
331:
தோயம்பரந்தநடுவுசூழலில் தொல்லைவடிவுகொண்ட
மாயக்குழவியதனைநாடுறில் வம்மின்சுவடுரைக்கேன்
ஆயர்மடமகள்பின்னைக்காகி அடல்விடையேழினையும்
வீயப்பொருதுவியர்த்துநின்றானை மெய்ம்மையேகண்டாருளர். 4.
332:
நீரேறுசெஞ்சடைநீலகண்டனும் நான்முகனும் முறையால்
சீரேறுவாசகஞ்செய்யநின்ற திருமாலைநாடுதிரேல்
வாரேறுகொங்கைஉருப்பிணியை வலியப்பிடித்துக்கொண்டு
தேரேற்றி சேனைநடுவுபோர்செய்யச் சிக்கெனக்கண்டாருளர். 5.
333:
பொல்லாவடிவுடைப்பேய்ச்சிதுஞ்சப் புணர்முலைவாய்மடுக்க
வல்லானை மாமணிவண்ணனை மருவுமிடம்நாடுதிரேல்
பல்லாயிரம்பெருந்தேவிமாரொடு பௌவம்ஏறிதுவரை
எல்லாரும்சூழச்சிங்காசனத்தே இருந்தானைக்கண்டாருளர். 6.
334:
வெள்ளைவிளிசங்குவெஞ்சுடர்த்திருச்சக்கரம் ஏந்துகையன்
உள்ளவிடம்வினவில் உமக்குஇறைவம்மின்சுவடுரைக்கேன்
வெள்ளைப்புரவிக்குரக்குவெல்கொடித் தேர்மிசைமுன்புநின்று
கள்ளப்படைத்துணையாகிப் பாரதம்கைசெய்யக்கண்டாருளர். 7.
335:
நாழிகைகூறிட்டுக்காத்துநின்ற அரசர்கள்தம்முகப்பே
நாழிகைபோகப்படைபொருதவன் தேவகிதன்சிறுவன்
ஆழிகொண்டுஅன்றுஇரவிமறைப்பச் சயத்திரதன்தலையை
பாழிலுருளப்படைபொருதவன் பக்கமேகண்டாருளர். 8.
336:
மண்ணும்மலையும்மறிகடல்களும் மற்றும்யாவுமெல்லாம்
திண்ணம்விழுங்கியுமிழ்ந்ததேவனைச் சிக்கெனநாடுதிரேல்
எண்ணற்கரியதோரேனமாகி இருநிலம்புக்கிடந்து
வண்ணக்கருங்குழல்மாதரோடு மணந்தானைக்கண்டாருளர். 9.
337:
கரியமுகில்புரைமேனிமாயனைக் கண்டசுவடுரைத்து
புரவிமுகம்செய்துசெந்நெலோங்கி விளைகழனிப்புதுவை
திருவிற்பொலிமறைவாணன்பட்டர்பிரான் சொன்னமாலைபத்தும்
பரவுமனமுடைப்பத்தருள்ளார் பரமனடிசேர்வர்களே. (2) 10.