பெரியாழ்வார் திருமொழி நான்காம் பத்து

பெரியாழ்வார்

ஏழாம் திருமொழி – தங்கையைமூக்கும்

(தேவப்ரயாகை என்று வழங்கும் கண்டமென்னுந்திருப்பதியின் பெருமை)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

3 91:

தங்கையைமூக்கும்தமையனைத்தலையும்தடிந்த எம்தாசரதிபோய்

எங்கும்தன்புகழாவிருந்துஅரசாண்ட எம்புருடோ த்தமனிருக்கை

கங்கைகங்கையென்றவாசகத்தாலே கடுவினைகளைந்திடுகிற்கும்

கங்கையின்கரைமேல்கைதொழநின்ற கண்டமென்னும்கடிநகரே. (2) 1.

 

392:

சலம்பொதியுடம்பின்தழலுமிழ்பேழ்வாய்ச் சந்திரன்வெங்கதிர்அஞ்ச

மலர்ந்தெழுந்தணவுமணிவண்ணவுருவின் மால்புருடோ த்தமன்வாழ்வு

நலம்திகழ்சடையான்முடிக்கொன்றைமலரும் நாரணன்பாதத்துழாயும்

கலந்திழிபுனலால்புகர்படுகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 2.

 

393:

அதிர்முகமுடையவலம்புரிகுமிழ்த்தி அழலுமிழ்ஆழிகொண்டெறிந்து அங்கு

எதிர்முகவசுரர்தலைகளையிடறும் எம்புருடோ த்தமனிருக்கை

சதுமுகன்கையில்சதுப்புயன்தாளில் சங்கரன்சடையினில்தங்கி

கதிர்முகமணிகொண்டிழிபுனல்கங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 3.

 

394:

இமையவர்இறுமாந்திருந்தரசாள ஏற்றுவந்தெதிர்பொருசேனை

நமபுரம்நணுகநாந்தகம்விசிறும் நம்புருடோ த்தமன்நகர்தான்

இமவந்தம்தொடங்கிஇருங்கடலளவும் இருகரைஉலகிரைத்தாட

கமையுடைப்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 4.

 

395:

உழுவதோர்படையும்உலக்கையும்வில்லும் ஒண்சுடராழியும்சங்கும்

மழுவொடுவாளும்படைக்கலமுடைய மால்புருடோ த்தமன்வாழ்வு

எழுமையும்கூடிஈண்டியபாவம் இறைப்பொழுதளவினில்எல்லாம்

கழுவிடும்பெருமைக்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 5.

 

396:

தலைப்பெய்துகுமுறிச்சலம்பொதிமேகம் சலசலபொழிந்திடக்கண்டு

மலைப்பெருங்குடையால்மறைத்தவன்மதுரை மால்புருடோ த்தமன்வாழ்வு

அலைப்புடைத்திரைவாய்அருந்தவமுனிவர் அவபிரதம்குடைந்தாட

கலப்பைகள்கொழிக்கும்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. 6.

 

397:

விற்பிடித்திறுத்துவேழத்தைமுருக்கி மேலிருந்தவன்தலைசாடி

மற்பொருதெழப்பாய்ந்துஅரையனயுதைத்த மால்புருடோ த்தமன்வாழ்வு

அற்புதமுடையஅயிராவதமதமும் அவரிளம்படியரொண்சாந்தும்

கற்பகமலரும்கலந்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. 7.

 

398:

திரைபொருகடல்சூழ்திண்மதிள்துவரைவேந்து தன்மைத்துனன்மார்க்காய்

அரசினையவியஅரசினையருளும் அரிபுருடோ த்தமனமர்வு

நிரைநிரையாகநெடியனயூபம் நிரந்தரம்ஒழுக்குவிட்டு இரண்டு

கரைபுரைவேள்விப்புகைகமழ்கங்கை கண்டமென்னும்கடிநகரே. 8.

 

399:

வடதிசைமதுரைசாளக்கிராமம் வைகுந்தம்துவரைஅயோத்தி

இடமுடைவதரியிடவகையுடைய எம்புருடோ த்தமனிருக்கை

தடவரையதிரத்தரணிவிண்டிடியத் தலைப்பற்றிக்கரைமரம்சாடி

கடலினைக்கலங்கக்கடுத்திழிகங்கைக் கண்டமென்னும்கடிநகரே. (2) 9.

 

400:

மூன்றெழுத்ததனைமூன்றெழுத்ததனால் மூன்றெழுத்தாக்கி மூன்றெழுத்தை

ஏன்றுகொண்டிருப்பார்க்குஇரக்கம்நன்குடைய எம்புருடோ த்தமனிருக்கை

மூன்றடிநிமிர்த்துமூன்றினில்தோன்றி மூன்றினில்மூன்றுருவானான்

கான்தடம்பொழில்சூழ்கங்கையின்கரைமேல் கண்டமென்னும்கடிநகரே. (2) 10.

 

401:

பொங்கொலிகங்கைக்கரைமலிகண்டத்து உறைபுருடோ த்தமனடிமேல்

வெங்கலிநலியாவில்லிபுத்தூர்க்கோன் விட்டுசித்தன்விருப்புற்று

தங்கியஅன்பால்செய்ததமிழ்மாலை தங்கியநாவுடையார்க்கு

கங்கையில்திருமால்கழலிணைக்கீழே குளித்திருந்தகணக்காமே. (2) 11.

Leave a Reply