மூன்றாம் திருமொழி – உருப்பிணிநங்கை
(திருமாலிருஞ்சோலைமலையின் சிறப்பு)
கலிநிலைத்துறை
3 49:
உருப்பிணிநங்கைதன்னைமீட்பான் தொடர்ந்தோடிச்சென்ற
உருப்பனையோட்டிக்கொண்டிட்டு உறைத்திட்டஉறைப்பன்மலை
பொருப்பிடைக்கொன்றைநின்று முறியாழியும்காசும்கொண்டு
விருப்பொடுபொன்வழங்கும் வியன்மாலிருஞ்சோலையதே. (2) 1.
350:
கஞ்சனும்காளியனும் களிறும்மருதும்எருதும்
வஞ்சனையில்மடிய வளர்ந்தமணிவண்ணன்மலை
நஞ்சுமிழ்நாகமெழுந்தணவி நளிர்மாமதியை
செஞ்சுடர்நாவளைக்கும் திருமாலிருஞ்சோலையதே. 2.
351:
மன்னுநரகன்தன்னைச் சூழ்போகிவளைத்தெறிந்து
கன்னிமகளிர்தம்மைக் கவர்ந்தகடல்வண்ணன்மலை
புன்னைசெருந்தியொடு புனவேங்கையும்கோங்கும்நின்று
பொன்னரிமாலைகள்சூழ் பொழில்மாலிருஞ்சோலையதே. 3.
352:
மாவலிதன்னுடைய மகன்வாணன்மகளிருந்த
காவலைக்கட்டழித்த தனிக்காளைகருதும்மலை
கோவலர்கோவிந்தனைக் குறமாதர்கள் பண்குறிஞ்சிப்
பாவொலிபாடிநடம்பயில் மாலிருஞ்சோலையதே. 4.
353:
பலபலநாழம்சொல்லிப்பழித்த சிசுபாலன்தன்னை
அலவலைமைதவிர்த்த அழகன்அலங்காரன்மலை
குலமலைகோலமலை குளிர்மாமலைகொற்றமலை
நிலமலைநீண்டமலை திருமாலிருஞ்சோலையதே. (2) 5.
354:
பாண்டவர்தம்முடைய பாஞ்சாலிமறுக்கமெல்லாம்
ஆண்டுஅங்குநூற்றுவர்தம் பெண்டிர்மேல்வைத்தஅப்பன்மலை
பாண்தகுவண்டினங்கள் பண்கள்பாடிமதுப்பருக
தோண்டலுடையமலை தொல்லைமாலிருஞ்சோலையதே. 6.
355:
கனங்குழையாள்பொருட்டாக் கணைபாரித்து அரக்கர்தங்கள்
இனம்கழுவேற்றுவித்த எழில்தோள்எம்மிராமன்மலை
கனம்கொழிதெள்ளருவி வந்துசூழ்ந்துஅகல்ஞாலமெல்லாம்
இனம்குழுவாடும்மலை எழில்மாலிருஞ்சோலையதே. 7.
356:
எரிசிதறும்சரத்தால் இலங்கையினை தன்னுடைய
வரிசிலைவாயில்பெய்து வாய்க்கோட்டம்தவிர்த்துகந்த
அரையனமரும்மலை அமரரொடுகோனும்சென்று
திரிசுடர்சூழும்மலை திருமாலிருஞ்சோலையதே. 8.
357:
கோட்டுமண்கொண்டிடந்து குடங்கையில்மண்கொண்டளந்து
மீட்டுமதுண்டுமிழ்ந்து விளையாடுவிமலன்மலை
ஈட்டியபல்பொருள்கள் எம்பிரானுக்குஅடியுறையென்று
ஓட்டரும்தண்சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே. 9.
358:
ஆயிரம்தோள்பரப்பி முடியாயிரம்மின்னிலக
ஆயிரம்பைந்தலைய அனந்தசயனன்ஆளும்மலை
ஆயிரமாறுகளும் சுனைகள்பலவாயிரமும்
ஆயிரம்பூம்பொழிலுமுடை மாலிருஞ்சோலையதே. (2) 10.
359:
மாலிருஞ்சோலையென்னும் மலையையுடையமலையை
நாலிருமூர்த்திதன்னை நால்வேதக்கடலமுதை
மேலிருங்கற்பகத்தை வேதாந்தவிழுப்பொருளில்
மேலிருந்தவிளக்கை விட்டுசித்தன்விரித்தனவே. (2) 11.