மூன்றாம்பத்து- 1ஆம் திருமொழி
முதல்திருமொழி – தன்னேராயிரம்
(யசோதைப் பிராட்டி கண்ணனது அதிமாநுஷ சேஷ்டிதங்களைக்
கண்டு முலைகொடுக்க அஞ்சுதல்)
எழுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
223 :
தன்னேராயிரம்பிள்ளைகளோடு தளர்நடையிட்டுவருவான்
பொன்னேய்நெய்யொடுபாலமுதுண்டு ஒருபுள்ளுவன்பொய்யேதவழும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகள்கொங்கைதுஞ்ச வாய்வைத்தபிரானே.
அன்னே. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. (2) 1.
224:
பொன்போல்மஞ்சனமாட்டிஅமுதூட்டிப்போனேன் வருமளவுஇப்பால்
வன்பாரச்சகடம்இறச்சாடி வடக்கிலகம்புக்கிருந்து
மின்போல் நுண்ணிடையால்ஒருகன்னியை வேற்றுருவம்செய்துவைத்த
அன்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 2.
225:
கும்மாயத்தொடுவெண்ணெய்விழுங்கிக் குடத்தயிர்சாய்த்துப்பருகி
பொய்ம்மாயமருதானஅசுரரைப் பொன்றுவித்துஇன்றுநீவந்தாய்
இம்மாயம்வல்லபிள்ளைநம்பீ. உன்னைஎன்மகனேயென்பர்நின்றார்
அம்மா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 3.
226:
மையார்கண்டமடவாய்ச்சியர்மக்களை மையன்மைசெய்துஅவர்பின்போய்
கொய்யார்பூந்துகில்பற்றித்தனிநின்று குற்றம்பலபலசெய்தாய்
பொய்யா. உன்னைப்புறம்பலபேசுவ புத்தகத்துக்குளகேட்டேன்
ஐயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 4.
227:
முப்போதும்கடைந்தீண்டியவெண்ணெயினோடு தயிரும்விழுங்கி
கப்பாலாயர்கள்காவிற்கொணர்ந்த கலத்தொடுசாய்த்துப்பருகி
மெய்ப்பாலுண்டழுபிள்ளைகள்போல நீவிம்மிவிம்மியழுகின்ற
அப்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 5.
228:
கரும்பார்நீள்வயல்காய்கதிர்ச்செந்நெலைக் கற்றாநிறைமண்டித்தின்ன
விரும்பாக்கன்றொன்றுகொண்டு விளங்கனிவீழஎறிந்தபிரானே.
சுரும்பார்மென்குழல்கன்னியொருத்திக்குச் சூழ்வலைவைத்துத்திரியும்
அரம்பா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 6.
229:
மருட்டார்மென்குழல்கொண்டுபொழில்புக்கு வாய்வைத்துஅவ்வாயர்தம்பாடி
சுருட்டார்மென்குழல்கன்னியர்வந்துஉன்னைச் சுற்றும்தொழநின்றசோதி.
பொருட்டாயமிலேன்எம்பெருமான். உன்னைப்பெற்றகுற்றமல்லால் மற்றிங்கு
அரட்டா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 7.
230:
வாளாவாகிலும்காணகில்லார் பிறர்மக்களைமையன்மைசெய்து
தோளாலிட்டுஅவரோடுதிளைத்து நீசொல்லப்படாதனசெய்தாய்
கேளார்ஆயர்குலத்தவர்இப்பழி கெட்டேன். வாழ்வில்லை நந்தன்
காளாய். உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 8.
231:
தாய்மோர்விற்கப்போவர் தமப்பன்மார்கற்றாநிறைப்பின்புபோவர்
நீ ஆய்ப்பாடிஇளங்கன்னிமார்களைநேர்படவேகொண்டுபோதி
காய்வார்க்குஎன்றும்உகப்பனவேசெய்து கண்டார்கழறத்திரியும்
ஆயா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 9.
232:
தொத்தார்பூங்குழல்கன்னியொருத்தியைச் சோலைத்தடம்கொண்டுபுக்கு
முத்தார்கொங்கைபுணர்ந்துஇராநாழிகை மூவேழுசென்றபின்வந்தாய்
ஒத்தார்க்குஒத்தனபேசுவர்உன்னை உரப்பவேநான்ஒன்றும்மாட்டேன்
அத்தா. உன்னைஅறிந்துகொண்டேன் உனக்குஅஞ்சுவன்அம்மம்தரவே. 10.
233:
கரார்மேனிநிறத்தெம்பிரானைக் கடிகமழ்பூங்குழலாய்ச்சி
ஆராஇன்னமுதுண்ணத்தருவன்நான் அம்மம்தாரேனென்றமாற்றம்
பாரார்தொல்புகழான்புதுவைமன்னன் பட்டர்பிரான்சொன்னபாடல்
ஏராரின்னிசைமாலைவல்லார் இருடீகேசனடியாரே. 11.