பக்தருக்கு இதம் தரும் பாகவதம்!

செய்திகள்
srimadbhagavatham - 1 3146" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeaae0ae95e0af8de0aea4e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81-e0ae87e0aea4e0aeaee0af8d-e0aea4e0aeb0e0af81e0aeaee0af8d-e0aeaae0aebe.jpg 478w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/12/e0aeaae0ae95e0af8de0aea4e0aeb0e0af81e0ae95e0af8de0ae95e0af81-e0ae87e0aea4e0aeaee0af8d-e0aea4e0aeb0e0af81e0aeaee0af8d-e0aeaae0aebe-4.jpg 219w" sizes="(max-width: 478px) 100vw, 478px" title="பக்தருக்கு இதம் தரும் பாகவதம்! 1" data-recalc-dims="1">

வேதத்திற்கு வலிமை சேர்ப்பதற்காகவும், வேதத்தில் கூறப்பட்ட கருத்துகளை மேலும் விரித்து உரைத்து, விவரித்து, அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசவும்தான் இதிஹாஸங்களும், புராணங்களும் வந்தன. புராணங்கள் பதினெட்டு ஒரு புராணம் என்றால், அது சில அடையாளங்களுடன் இருக்க வேண்டும். முக்கியமாக ஐந்து அடையாளங்கள் இருக்கும்.

ஸர்கஸ்ச, ப்ரதி ஸர்கஸ்ச, வம்சோ, மந்வந்தராணிச, வம்சானுசரிதஞ்சேதி – புராணம் பஞ்ச லக்ஷணம்.

– இது அதற்குரிய ச்லோகம். ஐந்து அடையாளங்கள் புராணத்தில் இருக்கும்.

ஸர்க:ச – இவ்வுலகம் எப்படிப் படைக்கப்படுகின்றது – என்ற படைப்பு கூறப்படும்.

ப்ரதி ஸர்க:ச – எப்படி இவை அனைத்தும் பகவானிடத்தில் லயிக்கிறது என்பது கூறப்படும்.

வம்ச: – சூர்ய வம்சத்தில் யார் யார் பிறந்தார்கள்? என்ன செய்தார்கள்? சந்திர வம்சத்தில் யார் யார் பிறந்தார்கள்? யாது செய்தார்கள்? என்ற கதையெல்லாம் கூறப்படும்.

மந்வந்தராணி ச – ஒவ்வொரு மனுவும் எப்படி இந்த பூலோகத்தை ஆட்சி செய்தார்? ஸ்வாயம்புவ மனு என்ன செய்தார்? ரைவத மனு என்ன செய்தார்? சாக்ருத மனு என்ன செய்தார்? – என்று ஒவ்வொரு மனுவின் காலத்தில் நடந்த வரலாறுகள் இருக்கின்றனவே – அவற்றைச் சொல்வதுதான் ‘மந்வந்தரங்கள்’.

வம்சானுசரிதம் ச இதி – அந்தந்த வம்சம், அவற்றில் பிறந்த அரசர்களைப் பற்றிய கிளைக் கதைகள், பகவானைப் பற்றிய கிளைக் கதைகள். – ஆக, இவை ஐந்தும் சேர்ந்து இருப்பதுதான் ஒரு புராணத்தின் அமைப்பு இலக்கணம்.

எல்லாப் புராணங்களிலும் இந்த ஐந்து அடையாளங்களும் நிறைவாக இருக்கும் என்று கூற இயலாது. ஒவ்வொன்று குறைந்து இருக்கலாம். ஆனால், பாகவத புராணத்திலும், ஸ்ரீவிஷ்ணு புராணத்திலும் இந்த ஐந்து அடையாளங்களும் நிறைந்திருக்கும்.

ஆகையால், இவற்றைப் பரிபூரணமான புராணங்கள் என்று சொல்கிறோம்.

‘பாகவதம்’ என்ற சொல்லுக்குப் பொருள் யாது? பகவத இதம் – பாகவதம். பகவானைப் பற்றியது இது – அதனால் பாகவதம்.

பகவானைப் பற்றி உள்ள உயர்ந்த செய்திகள், ஆழ்ந்த கருத்துகள் – ஆகியவற்றைக் கொண்டதுதான் பாகவதம்.

இந்தப் புராணம் எவ்வளவு பெரியது? அனைத்துப் புராணங்களும் சேர்ந்து மொத்தம் நான்கு லட்சம் ச்லோகங்கள். கேட்டால் வியப்பாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இதிஹாஸத்தில் ஒன்றான பாரதம் மட்டுமே ஒண்ணேகால் லட்சம் ச்லோகங்கள்! அதோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பதினெட்டு புராணங்களும் சேர்ந்துதானே நாலு லட்சம் ச்லோகங்கள்!

அதில் பாகவத புராணத்தில் மொத்தம் பதினெட்டாயிரம் ச்லோகங்கள். பன்னிரண்டு ஸ்கந்தங்கள். சுமார் 335 அத்தியாயங்கள். இது புராணத்தின் சிறப்பு. பகவானுடைய அவதாரங்கள்; நாம் வாழ்க்கை வாழ வேண்டிய முறை; நாம் கடைப்பிடிக்க வேண்டிய பண்புகள்; வளர்த்துக் கொள்ள வேண்டிய உயர்ந்த குணங்கள் – இவற்றை எல்லாம் பாகவதம் கூறும். பாகவதத்தை எழுதியவர் யார்? இந்த ச்லோகம் அனைவரும் அறிந்ததே.

வ்யாஸம் வஸிஷ்ட நப்தாரம்
சக்தே: பௌத்ரம் அகல்மஷம்
பராசராத்மஜம் வந்தே
சுகதாதம் தபோநிதிம்

விஷ்ணு ஸஹஸ்ர நாமம் ஓதும்போது, ஒவ்வொரு நாளும் இதை முதலில் சொல்கிறோம். ப்ரம்மா பல ரிஷிகளைப் படைத்தார். அவர்களில் ப்ரம்மாவுக்குப் புதல்வனாகவே கொண்டாடப்படுபவர் வஸிஷ்டர். வஸிஷ்ட ரிஷி ப்ரம்ம ரிஷி. அவருடைய புதல்வர் சக்தி. சக்தியுடைய புதல்வர் பராசர மஹரிஷி. அவரே விஷ்ணு புராணம் இயற்றியவர். பராசரருடைய திருக்குமாரர் வேத வியாஸர்.

வேத வியாஸர்தான் மஹாபாரதத்தையும் எழுதினார். வேத வியாஸர்தான் பாகவத புராணத்தையும் எழுதினார். அதாவது ஒரு இதிஹாஸத்தையும் எழுதியுள்ளார்; புராணங்களில் பாகவத புராணத்தையும் எழுதியுள்ளார். அந்த வியாஸருடைய திருக்குமாரர்தான் சுகாச்சாரியார்.

சுகாச்சாரியார்தான் பாகவத புராணத்தைப் பிரசாரம் செய்தார். பரீக்ஷித் என்னும் அரசனுக்கு உபதேசித்தார். எப்பேர்ப்பட்ட குரு பரம்பரை! வஸிஷ்டர், சக்தி, பராசரர், வியாஸர், சுகர்! ஒருவரிடமாவது ஏதேனும் குறை உண்டா? தன்னலத்துக்காக எதையாவது செய்திருப்பார்களா? மக்களுடைய முன்னேற்றத்துக்காகவே வாழ்ந்தவர்கள். அதற்கென்றே பெரிய பெரிய காவியங்களை நமக்குக் கொடுத்தவர்கள். அதனால் கண்டிப்பாக அவர்களுடைய வார்த்தைகளை நம்பலாம் அல்லவா? சிலருக்குத் தந்தையால் ஏற்றம் இருக்கும், வேறு சிலருக்கு மகனால் ஏற்றம் இருக்கும்.

ஆனால் வியாஸருக்கோ, தன் தந்தையான பராசர ரிஷியாலும் ஏற்றம், தன் மகனான சுகாச்சாரியாராலும் ஏற்றம். இருவராலும் ஏற்றம் வியாஸருக்கு. வியாஸர்தான் பாகவத புராணத்தை இயற்றியவர். அவரை கிருஷ்ண த்வைபாயனர் என்று கொண்டாடுவார்கள். கண்ணனே வியாஸராகப் பிறந்தாராம். அதாவது நாராயணனே வியாஸராக இவ்வுலகில் தோன்றினார்.

வியாஸாய விஷ்ணு ரூபாய
வியாஸ ரூபாய விஷ்ணவே
நமோவை ப்ரஹ்மநிதயே
வாஸிஷ்டாய நமோ நம:

வஸிஷ்ட குலத்தில் தோன்றிய வியாஸருக்கு வணக்கம். விஷ்ணு வடிவாயுள்ள வியாஸராகவும், வியாஸர் வடிவம் கொண்ட விஷ்ணுவாகவும், வேதத்தின் பொக்கிஷமாகவுமுள்ள அவருக்கு மீண்டும் மீண்டும் வணக்கம்.

அவரை வணங்கிக் கொண்டுதான் பாகவத புராணத்தை நாம் கேட்கத் தொடங்க வேண்டும். நம்மை வழி நடத்தும் ஆசிரியராகிய அவரை வணங்கி, நன்றி செலுத்தினாலே ஒழிய, அவர் எழுதிய நூல் நமக்குப் புரியாது. இது ஏதோ கறுப்பு வெள்ளையில் அச்சுப் போடப்பட்டது மட்டும் அல்ல.

srimatbhagavatham - 2

இது, அந்த ஆசார்யனின் திருவுள்ளம். அவருடைய உபதேசம். அவர், நமக்கென்று விட்டுச் சென்றிருக்கும் சொத்து. அப்படிப்பட்ட வேத வியாஸர், ‘கிருஷ்ண த்வைபாயனர்’, ‘பகவத் பாதராயணர்’ என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். அவர் பாகவதம் எழுதியதே ஒரு சுவையான செய்தி.

மஹாபாரதத்தை ஒண்ணேகால் லட்சம் ச்லோகங்களோடு எழுதினார். படித்துப் பார்த்தால், மிக உயர்ந்த நூல். ஆனால், இந்த விரிவான நூலை அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன் கொள்வார்களா – என்பதே ஐயத்திற்கிடமாயிருக்கிறது. இதே வியாஸர் ‘ப்ரஹ்ம் ஸூத்ரம்’ என்ற உயர்ந்த நூலை எழுதினார். உபநிஷத்தின் கருத்துகள் அத்தனையும் இருக்கக் கூடிய நூல். ஆனால், படித்துப் புரிந்து கொள்வது என்பது சுலபமான செயல் அல்ல.

வியாஸர் யோசித்தார். நாம் இத்தனை கடினமான நூல்களாகவே எழுதி விட்டோமே; எதை எதையோ பற்றிப் பேசி விட்டோமே; அனைவரும் புரிந்து கொள்ளும்படி, படித்து ஆனந்தப்படும்படி, எளிமையான நூல் ஒன்று எழுத வேண்டும்; அதனால் நம் மனக்குறையைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து – பாரதத்தையும், ப்ரஹ்ம ஸூத்ரத்தையும் எழுதின வியாஸர், அதனால் இன்பப்படாமல், மேற்கொண்டு பாகவத புராணத்தை இயற்றினார்; அதனால் மாந்தர் உயர்வடைவதைக் கண்டு இன்பம் எய்தினார்.

ஏன்? இந்தப் புராணம் முழுவதும் பகவானுடைய கதை. அனைத்தும் அவனுடைய செய்தி. அவனைப் பற்றி எதைப் பேசினாலும் ஆனந்தம் வரும் – என்று முன்பே கூறினேன் அல்லவா? அதனால்தான் வேத வியாஸருக்கு இன்பம் ஏற்பட்டது. ஆக, பாகவத புராணம் பிறந்தது எப்படி என்று பார்த்தோம். வியாஸர்தான் எழுதினார். அவருக்கே இவ்வளவு பெருமை என்றால், அவருடைய திருக்குமாரரான சுகாச்சாரியாரைப் பற்றி சொல்லவே வேண்டாம். எப்போதும் இளமையுடன் கூடியவர், பற்றற்றவர், வைராக்கிய நிதி.

அவரைப் பற்றி ஒரு கதை உண்டு.

ஒருமுறை, தந்தையான வேத வியாஸரும், தனயனான சுகாச்சாரியாரும் ஒரு குளத்துக்கு அருகே சென்று கொண்டிருந்தார்கள். அங்கே, இளமையான பல பெண்கள் நீராடிக் கொண்டிருந்தார்கள். வயது முதிர்ந்த வேத வியாஸர் முன்னே சென்றார். அவரைப் பார்த்தவுடன் பெண்கள் வெட்கப்பட்டு ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு, தங்களை மறைத்துக் கொண்டார்கள். வியாஸர் முன்னே சென்று விட்டார். பின்னால் சுகர் வந்தார். அவரைப் பார்த்து பெண்கள் வெட்கமே படவில்லை. தங்களை மறைத்துக் கொள்ளவும் இல்லை.

சுகரும் நடந்து முன்னேறினார். சற்று தூரம் சென்ற பிற்பாடு, வியாஸருக்கு ஐயம் ஏற்பட்டது. ‘நானோ வயது முதிர்ந்தவன்; நம்மைப் பார்த்து இளம் பெண்கள் வெட்கப்படுகிறார்கள். ஆனால், என் பிள்ளையோ கட்டிளங்காளை; அவனைப் பார்த்து அவர்கள் வெட்கப்படவே இல்லை. இது என்ன நேர்மாறாக இருக்கிறதே!’ என்று நினைத்தவர், திரும்பி நடந்து பெண்களிடத்தில் வந்தார்.

“பெண்களே! ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்? வயது முதிர்ந்த என்னைப் பார்த்து ஏன் வெட்கம்? இளைஞனான என் பிள்ளையைப் பார்த்து ஏன் வெட்கப்படவில்லை?” என்று வினவினார்.

பெண்கள் சிரித்துக் கொண்டே பதில் கூறினார்கள்:

“இந்தக் கேள்வியையும் நீர் வந்து கேட்கிறீரே தவிர, உமது பிள்ளை வந்து கேட்கவில்லையே! நாங்கள் பெண்கள், ஆடையை அவிழ்த்து குளித்துக் கொண்டிருக்கிறோம், அதை எடுத்து மறைத்துக் கொண்டோம் – இது அத்தனையும் உமது கண்ணுக்குப் பட்டதே தவிர, உம்முடைய மகன் கண்ணுக்குப் படவில்லையே! ஏனெனில், அவர் கண்ணுக்கு ஆணோ, பெண்ணோ, மரமோ, சிங்கமோ, ஆறோ எல்லாமே சமம். அவர் உடலைப் பார்ப்பவர் அல்ல. ஆத்மாவை மட்டுமே பார்ப்பவர். ஆனால், வியாஸரே! நீர் நம்மைப் பார்த்தபடியால்தானே புரிந்து கொண்டீர்!” என்று கூற, விதிர்த்துப் போனார் வியாஸர்.

‘ஓ! நம் மகனுக்குத்தான் என்ன வைராக்கியம்! என்ன பற்றற்ற தன்மை!’ என்று இப்படிப்பட்ட மகனைப் பெற்றதற்கே வியாஸர் சந்தோஷப்பட்டாராம். இது சுகாச்சாரியாருடைய வைபவம்.

பகவானுடைய அவதாரங்களைப் பற்றி இப்புராணம் சொல்லும் என்று சொன்னேன். அது இந்த பாகவத புராணத்துக்கு இருக்கிற முதல் பெருமை.

இரண்டாவது, அதைப் பாடிய வியாஸருக்கும், சுகருக்கும் இருக்கின்ற பெருமை. மூன்றாவது, எந்த ஒரு நூலிலும் ‘என்ன கருத்து உள்ளது? எது பாட்டுடைச் செய்தி?’ என்பது முக்கியம். கண்ணனேதான் பாகவதத்துக்கு செய்தி. கண்ணனுடைய அனைத்து அவதாரங்கள்; அவனைப் பற்றிய தர்மம்; நாம் கடைபிடிக்க வேண்டிய பக்தி; மோக்ஷத்துக்கு வேண்டிய வழிமுறைகள் – இவை அத்தனையும் பாகவத புராணத்தில் இருக்கிறபடியால், அது பெரும் சிறப்பு வாய்ந்த நூல்.

ஆக, நூலின் பயனைப் பார்த்தாலும், நூலின் அமைப்பைப் பார்த்தாலும், நூலை எழுதியவரைப் பார்த்தாலும் – எவ்வகையிலும் சிறப்புடைய நூல், பாகவத புராணம். இந்தப் புராணத்தின் சிறப்புக் கூறும் சில ச்லோகங்கள் உண்டு.

ஸ்ரீமத் பாகவதம் நாம
புராணம் லோக விச்ருதம்
ச்ருணுயாத் ச்ரத்தயா யுக்தா
மம சந்தோஷ காரணம்

இது பகவானே தெரிவிப்பது. “இந்த பாகவத புராணம் இருக்கிறதே, உலகத்திலேயே பெருமை வாய்ந்தது. இதை எவன் எவனெல்லாம் கூறுகிறானோ, பாராயணம் பண்ணுகிறானோ, இதன் பொருளை உணர்ந்து கடைபிடிக்கிறானோ, அத்தனை பேரும் எனக்கு இன்பத்தை அளிக்கிறார்கள்” என்று பெருமாளே கூறுகிறார்.

முதலாளிக்கு விருப்பம் ஏற்பட்டு, அவர் சந்தோஷப்பட்டால் நமக்கு எதுதான் கிடைக்காது? பகவானோ அனைவருக்கும் முதலாளி. அவரை சந்தோஷப்படுத்துவதுதானே நமக்குக் கடமை. அதற்கு எளிய வழி உண்டா என்று தேடினால், பாகவத புராணம்தான் அதற்கு எளிய வழி. அதைப் படிக்கப் படிக்க, கண்ணன் திருமுக மண்டலம் மலர்கிறது. மலர்ந்தால், நமக்கு எவையெவை நன்மையோ அனைத்தையும் கொடுக்கப் போகிறார். மற்றொரு ஸ்லோகம்:

யத்ர யத்ர சதுர் வக்த்ர
ஸ்ரீமத் பாகவதம் பவேத்
கச்சாமி தத்ர தத்ராஹம்
கௌர்யதா சுகவத்ஸயா.

இதுவும் பகவானே கூறுவதுதான். ஒரு பசு மாடு, தன் கன்றுக் குட்டியிடம் இருக்கும் விருப்பத்தாலே, அது போகும் இடத்திற்கெல்லாம் பின் தொடர்ந்து செல்லும். அதைப் போல், கண்ணன்தான் பசு மாடு. யாரெல்லாம் பாகவத புராணத்தைச் சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் கன்றுக் குட்டி. பாகவதத்தைப் படிப்பவனைக் கன்றாகக் கொண்டு, அவன் மேல் இருக்கிற ஆசையாலே, பகவான் எனும் பசு, பின் தொடர்ந்து வருவானாம்.

bhagavatham - 3

இப்படி, நம்மைப் பின் தொடர்ந்து கண்ணன் வந்தால், அது எவ்வளவு பெரிய பேறு! மஹா பாக்கியம் அல்லவா? அதை அடைவதற்கு ஒரே வழி பாகவத புராணத்தை வாசிப்பதே!

சரி! மேலும் மேலும் பாகவத புராணம் சிறப்புடையது என்று சொல்கிறோமே! எதனால் அதற்கு இவ்வளவு சிறப்பு ஏற்பட்டது? அது ஒரு சுவையான செய்தி.

கண்ணன் பூவுலகத்தில் பிறந்து, நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்திருந்து, மறுபடியும் வைகுண்டத்துக்குச் செல்லப் போகிறார். கண்ணனுடைய மிகுந்த பிரியத்திற்குரிய சிஷ்யர், உத்தவர் என்று பெயர் பெற்றவர்; சான்றோர்; மெத்தப் படித்தவர்; பரம பக்தர்.

உத்தவருக்குக் கண்ணனை விட்டுப் பிரிய மனதில்லை. கண்ணனுடைய திருவடிகளைக் கட்டிக் கொண்டு,

த்வத் வியோகேன தே பக்தா: கதம்

ஸ்தாஸ்யந்தி பூதலே?

– என்று கேட்கிறார். “உன்னை விட்டுப் பிரிந்தால், உன் சீடர்கள், உன் நண்பர்கள், எப்படி உயிர் வாழ்வார்கள்? கண்ணா! திடீரென்று ‘புறப்பட்டுப் போகிறேன்’ என்று சொல்லாதே! எங்களுக்கு ஒரு வழி காட்டி விட்டுப் போ!” என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது, கண்ணன் தெரிவித்தார். “நான் போய்த்தான் தீர வேண்டும். வந்த வேலை முடிந்து விட்டது. ஆனால், உனக்கு ஒரு வழி கூறுகிறேன். நான் பாகவத புராணச் சொற்களில் இனி தங்கி விடுகிறேன். துவாபர யுகம் வரை நான் நானாக இங்கு மக்களிடையே நடமாடினேன். துவாபர யுகத்தின் இறுதியில், வைகுண்டத்தைச் சென்று அடைகிறேன். கலியுகம் முழுவதும், பாகவத புராணச் சொற்களிலேயே நான் வசிக்கப் போகிறேன். யாரெல்லாம் என்னை தரிசிக்க விருப்பம் கொள்கிறார்களோ, என்னை அடைய ஆசைப்படுகிறார்களோ, அவர்கள் எல்லாம் இங்கேயே கலியுகத்தில் பாகவத புராணத்தைப் படித்துக் கொண்டிருக்கட்டும்” என்றார்.

கையால், இப்புராணம் ஏதோ சில ச்லோகங்களின் தொகுப்பு அல்ல. ஏதோ சில ச்லோகங்களின் கூட்டம் அல்ல. இவை ‘கண்ணனே’! இந்த ஒவ்வொரு ச்லோகமும் ‘கண்ணனே’! ஒவ்வொரு சொல்லும் ‘கண்ணனே’! இதன் பொருளும் ‘கண்ணனே’! அப்படி இருக்கும்போது கண்ணனே நம்மோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் – ஒரே வழி, பாகவத புராணத்தைப் படிப்பதுதான்! அதில் சொன்ன கருத்துகளின்படி நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான்!

யாருக்குத்தான் குழந்தை கண்ணன் தன் வீட்டில் ஓடி ஆட வேண்டும் என்ற ஆசை இருக்காது? பெருமான் கண்ணனே நம் வீட்டுக்கு வந்தால் அது திருப்தி தரும், சந்தோஷத்தைக் கொடுக்கும், நாம் ஆசைப்பட்டதை எல்லாம் கொடுக்கும், சாந்தி நிலவும். அதற்கு ஒரே வழி, பாகவத புராணத்தை படிப்பது.

Leave a Reply