பெரியாழ்வார் சரிதம்

பெரியாழ்வார்
style="text-align: center;">பெரியாழ்வாரின் திருச்சரிதம்

வடவேங்கடம் முதல் குமரி வரை எல்லையாகக் கொண்ட திராவிட நாட்டில், பாண்டிய தேசம் அக்காலம் முதலே சிறப்புற இருந்து வந்தது. அங்கே முத்தும் முத்தமிழும் பொலிவுற்று விளங்குவதாய் இருந்தது. அந்தப் பாண்டிய நாட்டில் காட்டுப் பகுதில் வாழ்ந்து வந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் பிறந்தார்கள். அவர்கள் இருவரும் குல வழக்கப்படி, வேட்டையாடுவதில் வல்லவர்களாக விளங்கினார்கள்.

ஒரு நாள் வில்லியும், கண்டனும் அடர்ந்த காட்டுப் பகுதியில் வேட்டையாடப் புறப்பட்டுச் சென்றார்கள். இருவரும் தனித்தனியே சென்றபோது, கண்டன் முன்னே ஒரு புலி வந்து நின்றது. அவன் அப் புலியைப் பின்தொடர்ந்து சென்று அம்புகள் ஏவினான். ஆனால் அந்த அம்பு மழைக்குத் தப்பிய புலி, கண்டனைக் கொன்றது. இதை அறியாத வில்லி, தன் சகோதரனான கண்டனைத் தேடிக்கொண்டு காடு முழுதும் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியில் களைப்பின் மிகுதியால் அவன் மரத்தின் அடியில் அயர்ந்து அமர்ந்தான். அப்படியே நித்திரை கண்களைத் தழுவ உறங்கிப் போனான்.

திருமகள்கேள்வனான திருமால் அவன் கனவில் தோன்றினார். கண்டனின் விதியைப் பற்றிக் கூறி, அதற்காக வருந்த வேண்டாம் என்றார். முன்னொரு காலத்தில் காலநேமி என்ற அசுரனை வதம் செய்வதற்காக தாம் அங்கே எழுந்தருளியதாகவும், பின்னர் அந்த ஆலமரத்தின் அடியில் உள்ள புதர்களுக்கு நடுவே வடபத்ர சாயி என்ற திருநாமத்தோடு, விமலாக்ருதி விமானத்தினுள் சயனத் திருக்கோலத்தில் இருப்பதாகவும் காட்டி, இந்தக் காட்டை அகந்து நாடாக்கி, தமக்குக் கோயில் கட்டி ஆராதித்து வருமாறும் கூறினார்.

அவ்வண்ணமே கனவு நிலையிலிருந்து விழித்தெழுந்த வில்லி, வடபெருங்கோயிலுடையானைக் கண்டெடுத்து, அவனுக்கு அங்கே ஒரு கோயில் எழுப்பி, அழகிய தெருக்களை அமைத்து நகர் அமைத்தான். அந்த நகரம் புதிதாக உருவாகியதால் அதற்கு புத்தூர் என்று பெயர் ஏற்பட்டது. வில்லியால் அந்த நகரம் அமைக்கப்பட்டதால், வில்லிபுத்தூர் என்று பெயர் வழங்கலாயிற்று.

இப்படித் தோற்றம் பெற்ற வில்லிபுத்தூரில் குடியேறிய அந்தணர்களுள் வேயர் என்ற வகுப்பினர் இருந்தனர். அவர்களுள் முன்குடுமிச் சோழிய அந்தணர் மரபில் முகுந்த பட்டர் என்னும் பெரியவர் ஒருவர் இருந்தார். அவர் பத்மவல்லி என்னும் மங்கை நல்லாளை மணந்து, இல்லற தர்மத்தைக் குறைவற நடத்திவந்தார். அவர்கள் இருவரும் வடபெருங்கோயிலுடையானிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார்கள். அவனுக்கு அநேகக் கைங்கர்யங்களைச் செய்து வந்தார்கள். அவர்களுக்கு அநேக பிள்ளைச் செல்வங்கள் இருந்தார்கள். அவர்களில் வடபெருங்கோயிலுடையான் அருளால் ஐந்தாவதாக ஓர் ஆண் மகவு பிறந்தது.

குரோதன வருடத்தில் ஆனி மாதம், சுக்ல பட்ச ஏகாதசி திதியில் ஞாயிற்றுக் கிழமை அன்று சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீகருடாம்சராய் அவதரித்த அந்தக் குழந்தையே பரமனைப் பூமாலையோடு பாமாலையும் சூடித் தொழுத பெரியாழ்வார்.

பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தன் என்பது. விட்டுசித்தன் என்ற அந்தப் பெயராலே பெற்றோர் அவரை அழைத்தனர். அவருக்குக் தக்க வயதில் கல்வி கற்பிக்கத் தொடங்கினர். அந்தணச் சிறுவனுக்குரிய உயநயனமும் குடுமி வைத்தலும், வேதப் பயிற்சியும் நடைபெற்றன.

நாட்கள் செல்லச்செல்ல விட்டுசித்தருக்குத் திருமால் தொண்டே சிறந்தது எனத் தோன்றியது. பிரகலாதனைப் போல குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ண பக்தியில் சிறந்து விளங்கினார் விஷ்ணுசித்தர். கண்ணனுக்கே இவ்வுயிரும் உடலும் அடிமை என்று உணர்ந்து கிருஷ்ண தியானத்தில் வாழ்ந்து வரலானார். பரமனுக்கு அடிமை செய்வதில் அவனுக்கு உகப்பான விஷயம் எது என்று ஆராய்ந்தார். இறுதியில் ஒரு முடிவுக்கு வந்தார்.

முன்பு கண்ணன் யசோதை இளஞ்சிங்கமாய் ஆய்ப்பாடியில் வளர்ந்து வரும்போது, கம்சனின் அழைப்பாலே அவனை வதம் செய்தற்பொருட்டு தன் தமையனான பலராமனுடன் மதுராபுரிக்கு எழுந்தருளினார் அல்லவா. அப்போது கம்சனுக்கு மாலை கட்டும் மாலாகாரனின் இல்லத்துக்குச் சென்று தனக்கும் ஒரு மாலை வேண்டும் என்று இரந்து நின்றார்.

அந்த மாலாகாரனும் மிகவும் மனம் உகப்புற்று, எத்தனையோ யோகிகளும் மகான்களும் உன் திவ்விய அழகு தரிசனத்துக்காக ஏங்கிக் கிடக்கிறார்கள்… நீயோ அடியேனின் இல்லத்துக்கே வந்து அருள் புரிகிறார். நான் என்ன கைமாறு செய்வேன் என்று அழகிய மாலையை அவனுக்குக் கொடுத்தான்.

பெரியாழ்வார் கண்ணனின் இந்த லீலையில் மனம் அனுபவித்து, அவன் விரும்புவது அழகிய மாலைகள் சூட்டி அழகு பார்த்தலே என்ற முடிவுக்கு வருகிறார்.

அதனால் மூதாதையர் ஈட்டி வைத்திருந்த பொற்குவியலிலிருந்து ஒரு பெரும் பகுதியைக் கொண்டு நீர்ப் பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, வேலி வளைத்து அதில் பலவகை மலர்ச் செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் அழகிய மாலைகளைக் கட்டி, வில்லிபுத்தூர் பதியில் உள்ள வடபெருங்கோயிலில் எழுந்தருளியிருக்கும் பள்ளிகொண்டபிரானுக்கு சாத்தி வரலானார். அந்த நந்தவனத்திலே, துளசி, தாமரை, செங்கழுநீர், நீலோற்பலம், மல்லிகை, முல்லை, மாதவி முதலிய பூக்கள் நிறைந்து பொலியும்படி செய்தார். அதிகாலை துயில் எழுந்து, நித்ய அனுஷ்டானங்களை முடித்து, நந்தவனத்துக்குச் சென்று, பரமனுக்கே உரிய வாசனையை தாம் முகர்ந்து விடாமல் இருக்க, சிறிய ஆடையொன்றை மூக்கைச் சுற்றிக் கட்டிக்கொண்டு, தூய்மையான கரங்களால் அம்மலர்களைக் கொய்து, கூடைகளில் சேர்த்து மாலை கட்டி, மாலவனுக்குச் சார்த்துவார்.

 

Leave a Reply