பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

 

இரண்டாம்பத்து

முதல்திருமொழி – மெச்சூது

(பூச்சிகாட்டி விளையாடுதல்.)

கலித்தாழிசை

 

118:

மெச்சூதுசங்கம்இடத்தான் நல்வேயூதி

பொய்ச்சூதில்தோற்ற பொறையுடைமன்னர்க்காய்

பத்தூர்பெறாதுஅன்று பாரதம்கைசெய்த

அத்தூதன்அப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். (2) 1.

 

119:

மலைபுரைதோள்மன்னவரும் மாரதரும்மற்றும்

பலர்குலைய நூற்றுவரும்பட்டழிய பார்த்தன்

சிலைவளையத் திண்தேர்மேல்முன்னின்ற செங்கண்

அலவலைவந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 2.

 

120:

காயும்நீர்புக்குக் கடம்பேறி காளியன்

தீயபணத்தில் சிலம்பார்க்கப்பாய்ந்தாடி

வேயிங்குழலூதி வித்தகனாய்நின்ற

ஆயன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 3 .

 

121:

இருட்டில்பிறந்துபோய் ஏழைவல்லாயர்

மருட்டைத்தவிர்ப்பித்து வன்கஞ்சன்மாளப்

புரட்டி அந்நாள்எங்கள் பூம்பட்டுக்கொண்ட

அரட்டன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 4.

 

122:

சேப்பூண்ட சாடுசிதறி திருடிநெய்க்கு

ஆப்பூண்டு நந்தன்மனைவிகடைதாம்பால்

சோப்பூண்டு துள்ளித்துடிக்க அன்று

ஆப்பூண்டான்அப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 5.

 

123:

செப்பிளமென்முலைத் தேவகிநங்கைக்கு

சொப்படத்தோன்றித் தொறுப்பாடியோம்வைத்த

துப்பமும்பாலும் தயிரும்விழுங்கிய

அப்பன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 6.

 

124:

தத்துக்கொண்டாள்கொலோ? தானேபெற்றாள்கொலோ?

சித்தமனையாள் அசோதையிளஞ்சிங்கம்

கொத்தார்கருங்குழல் கோபாலகோளரி

அத்தன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 7.

 

125:

கொங்கை வன்கூனிசொற்கொண்டு குவலயத்

துங்கக்கரியும் பரியும்இராச்சியமும்

எங்கும்பரதற்கருளி வன்கானடை

அங்கண்ணன்அப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 8.

 

126:

பதகமுதலைவாய்ப் பட்டகளிறு

கதறிக்கைகூப்பி என்கண்ணா. கண்ணா. என்ன

உதவப்புள்ளூர்ந்து அங்குஉறுதுயர்தீர்த்த

அதகன்வந்துஅப்பூச்சிகாட்டுகின்றான்

அம்மனே. அப்பூச்சிகாட்டுகின்றான். 9.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

127:

வல்லாளிலங்கைமலங்கச் சரந்துரந்த

வில்லாளனை விட்டுசித்தன் விரித்த

சொல்லார்ந்த அப்பூச்சிப்பாடல்இவைபத்தும்

வல்லார்போய் வைகுந்தம் மன்னியிருப்பரே. (2) 10.

 

 

 

Leave a Reply