குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011
" height="88" />விருச்சிகம்
குரு பகவான் உங்களின் சுக ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து பூர்வபுண்ய புத்திர புத்தி ஸ்தானமான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
பூர்வபுண்ய ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான், குடத்திற்குள் இட்ட விளக்காக இருந்த உங்களை, இனி வெளிச்சத்திற்குக் கொண்டு வருவார். புதுப்புது வழிகளில் வருமானம் வரும். எடுத்த காரியங்கள் குறித்த காலத்திற்கு முன்பாகவே முடிவடையும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். குழந்தைகள் பாராட்டுகளும், விருதுகளும் பெறுவார்கள். தீயவர்கள் உங்களிடமிருந்து தானாகவே விலகிவிடுவார்கள். உங்களின் தெய்வ பலம் அதிகரிக்கும்.
குரு பகவானின் அருள்பார்வை உங்களின் பாக்ய ஸ்தானத்தின் மீது படிவதால் பூர்வீகச் சொத்துக்கள் வழியில் வருமானம் வரத் தொடங்கும். வழக்குகள் வெற்றியடையும். அரசு வழியில் நன்மைகள் உண்டாகும். திருடு போயிருந்த பொருட்கள் திரும்பக் கிடைக்கும். சமுதாயத்தில் உங்கள் பெயரும், புகழும் உயரும். சிலருக்கு முக்கியப் பதவிகள் கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடபுடலாக நடக்கும்.
குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தானத்தின் மீதும், அங்கு பலமாக அமர்ந்துள்ள சனி பகவானின் மீதும் படிவதால், “பருத்தி புடவையாய்க் காய்த்தது’ என்பார்களே… அதுபோல் தேடாமலேயே விரும்பியவை கிடைக்கும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல் எந்த விஷயத்திலும் லாபத்தை இரட்டிப்பாகக் காண்பீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் தேடி வரும்.
குரு பகவானின் அதிர்ஷ்டப் பார்வை உங்களின் ராசியின் மீது விழுவதால் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். வாசனை திரவியங்களைப் பூசிக் கொண்டு புத்துணர்ச்சியோடு காட்சியளிப்பீர்கள். எதிர்பாராத சில அற்புதங்கள் நடக்கும். அனுகூலம் தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். வாகனம், நிலம், வீடு ஆகியவற்றை வாங்குவீர்கள். தேக ஆரோக்யம் சிறப்பாக இருக்கும்.
உத்யோகஸ்தர்கள், அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த ஊதிய உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்துவிடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். தைரியமாக அனுபவம் இல்லாத தொழிலில்கூட ஈடுபடுவீர்கள்; அதில் வெற்றியும் காண்பீர்கள். சிலருக்கு வியாபாரிகள் சங்கங்களில் பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் சொல்லுக்கு மதிப்பு கூடும். வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். விவசாயத்தைப் பெருக்க புதிய உபகரணங்களை வாங்குவீர்கள். மேலும் கூடுதல் வருமானத்தைப் பெறக் காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் எனப் பயிர் செய்து பலன் பெற வழி கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க உதவிகளை செய்யவும்.
அரசியல்வாதிகள் தங்களின் எண்ணங்களை சரியாக வெளிப்படுத்தவும். ஏனென்றால் உங்கள் எண்ணங்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படலாம். மேலும் முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக் கொள்ள வேண்டாம். மற்றபடி கடந்த கால உழைப்புகளுக்கு இந்தக் காலகட்டத்தில் பலன் கிடைக்கும். பிரச்சாரத்திற்கு அதிக நேரம் ஒதுக்குவீர்கள்.
கலைத்துறையினருக்குப் புகழும், பொருளும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக நீங்கள் செய்யும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவு பெருகும். உங்களின் வசீகரப் பேச்சினால் அனுகூலங்களைக் காண்பீர்கள். மற்றவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.
பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பீர்கள். கணவரிடம் பாசம் அதிகரிக்கும். பிள்ளைப் பேறில்லாதோர்க்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். எப்போதும் உங்களின் தகுதிக்கு மீறி ஆசைப்பட வேண்டாம்.
மாணவமணிகள் புதிய உற்சாகத்துடன் பாடங்களைப் படிப்பீர்கள். ஓய்வு எடுப்பதைக் குறைத்துக் கொண்டு பாடங்களை மனப்பாடம் செய்தால் இன்னும் அதிக மதிப்பெண்களை அள்ளலாம். மற்றபடி விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடி பள்ளிக்குப் பெருமை சேர்ப்பீர்கள்.
பரிகாரம்: முடிந்த போதெல்லாம் “ராம’ நாமத்தை ஜபிக்கவும். அதுவே சிறந்த பரிகாரம்.