குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

 

 

 

 

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

மகரம்:

குரு பகவான் உங்களின் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து இளைய சகோதர தைரிய ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த தைரிய ஸ்தான சஞ்சாரத்தினால் கடினமான செயல்களையும் தைரியத்துடன் செய்து முடித்துவிடுவீர்கள். இந்தச் சூழ்நிலையில் உங்களின் சமயோஜித புத்தி உங்களுக்குக் கைகொடுக்கும். அமைதியாகவும், சீரிய ஒழுக்கத்துடனும் செயலாற்றுவீர்கள். சுயநலமில்லாமல் அனைவருக்கும் உதவி செய்வீர்கள். வறியோர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளை செய்வீர்கள். வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் உங்களை வந்தடையும்.

குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தினருடன் இணக்கமாக வாழ்வீர்கள். அதேநேரம் இந்தக் காலகட்டத்தில் மனதில் பட்டதையெல்லாம் வெளியில் சொல்லிவிட வேண்டாம்.

குரு பகவானின் ஐந்தாம் பார்வை உங்களின் சப்தம ராசியின் மீது படிவதால் மனதிற்கினிய பயணங்கள் ஏற்படும். உற்றார் உறவினர்கள், நண்பர்களால் ஏற்பட்ட தொல்லைகள் மறையும். பல ஆண்டுகளாகப் பார்க்காமல் இருந்த நண்பர்கள் சிலரை சந்தித்து மகிழ்வீர்கள். விழாக்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உங்களின் மீது அபாண்டமாகப் பழி சுமத்தியவர்கள், உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள்.

குரு பகவானின் பார்வை உங்களின் பாக்ய ஸ்தானத்தின் மீது படிவதால் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உங்களின் புத்திசாலித்தனத்தால் பிறரிடம் நன்மதிப்பைப் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து தன்னம்பிக்கையுடன் சிந்திக்கத் தொடங்குவீர்கள். பாதியில் நின்றுபோன வீட்டைக் கட்டி முடிப்பீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தானத்தின் மீது படிவதால்  பயத்துடன் அனுகிய விஷயங்கள் சாதகமாக முடிவடையும். தனிமையில் வருந்திய உங்களின் மனம் தெளிவடையும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து ஆதாயங்கள் கிடைக்கும். விட்டதைப் பிடிக்கும் காலமாகவும், புதியவற்றைத் தொடங்கும் காலமாகவும் இந்த குரு பெயர்ச்சி அமையும் என்றால் மிகையில்லை.

உத்யோகஸ்தர்களுக்கு எதிர்பாராத நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். சக ஊழியர்களும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கொடுப்பார்கள். தற்காலிகப் பணி நீக்கத்தில் இருந்தவர்கள், “குற்றமற்றவர்கள்’ என்று நிரூபிக்கப்பட்டு வேலையில் சேர்ந்துவிடுவார்கள்.

வியாபாரிகளுக்கு புதிய முயற்சிகள் கைகூடும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களை சார்ந்து செய்து வந்த தொழிலை தனித்து நின்று நடத்த முயல்வீர்கள். விற்பனை விறுவிறுப்பாக நடக்கும். கூடுதலாக உழைத்து, மன உறுதியுடன் செயல்பட்டு வருமானத்தைப் பெருக்க முனைவீர்கள்.

விவசாயிகள் புதிய சாதனங்களை வாங்கி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். திடீரென்று கடன் பிரச்சினைகள் முளைத்தாலும் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். சந்தையில் உங்களின் விளைபொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். விவசாயக் கூலிகளுக்கு உதவிகளை செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்குக் கட்சியில் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். அதோடு “உட்பகை’யால் போட்டிகளையும் சந்திக்க நேரிடும். உங்கள் திட்டங்களைப் பொறுமையுடன் செயல்படுத்தவும். இருப்பினும் போராட்டங்களில் புதிய வேகத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சி ரீதியான பயணங்களை மேற்கொள்வீர்கள்.

கலைத்துறையினரைப் பொறுத்தவரை புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய பாணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். சக கலைஞர்களின் ஆதரவைப் பெற்று மகிழ்வீர்கள். சந்தர்ப்பங்களை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வளர்ச்சி அடைவீர்கள்.

பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்குவீர்கள். கணவரோடு ஒற்றுமையாகப் பழகுவீர்கள். அதேநேரம் மனதில் காரணமில்லாமல் அமைதி குறையும். அப்போதெல்லாம் திருமகளை தியானம் செய்யவும்.

மாணவமணிகள் படிப்பில் கவனம் சிதறாமல் இருப்பீர்கள். பாடங்களை மனப்பாடம் செய்து நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு உந்து சக்தியாக அமையும்.

பரிகாரம்: மஹாலட்சுமியை வழிபடுங்கள். நவகிரகத்தில் ராகு பகவானுக்கு தீபமேற்றுங்கள்.

 

Leave a Reply