குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

 

 

 

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

மீனம்

குரு பகவான் உங்களின் அயன, மோட்ச ராசியான கும்ப ராசியிலிருந்து உங்களின் ஜன்ம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்தக் காலகட்டத்தில் உங்களின் தயாள குணமும், தர்ம குணமும் வளரும். மன நெருக்கடியிலிருந்து மீண்டு தெளிவடைவீர்கள். தெய்வ வழிபாட்டைத் தவறாது மேற்கொள்வீர்கள். உங்களின் திறமையால் புதிய நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். தேகத்தில் பொலிவு ஏற்படும். மிடுக்காக இருப்பீர்கள்.

இந்தக் காலகட்டத்தில் குரு பகவான் உங்களின் பூர்வ புண்ய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். புத்திரகாரகர், புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் குழந்தைகளால் பெருமை ஏற்படும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும். உங்களுக்கு விருப்பமான துறைகளில் ஈடுபட்டு, சாதனை செய்வீர்கள். எந்த விஷயத்தையும் நுனிப் புல் மேயாமல் அடி வரை சென்று ஆராய்ந்து செய்து முடிப்பீர்கள். பெரியோர்களை வணங்கிப் போற்றுவீர்கள்.

குரு பகவான், தன் ஏழாம் பார்வையினால் உங்களின் ஏழாம் இடத்தையும் அங்கு அமர்ந்துள்ள திக் பலம் பெற்றுள்ள சனி பகவானையும் பார்வை செய்வதால் நெடுநாட்களாக திருமணத் தடையால் அவதிப்பட்டவர்கள், இந்த சஞ்சார காலத்தில், “சம்சாரி’களாக ஆவார்கள். நண்பர்களையும் உற்றார், உறவினர்களையும் உங்களின் நகைச்சுவைப் பேச்சினால் சந்தோஷப்படுத்துவீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களுக்குத் தக்க நேரத்தில் தேவையான உதவிகளை செய்வீர்கள். அதேநேரம் திடீர் திடீரென்று செயல் திட்டங்களை மாற்றிக்கொண்டே இருப்பதால் சரியான இலக்கை அடையத் தாமதமாகும். எனவே, எண்ணித் துணிக கருமம்!

குரு பகவானின் ஒன்பதாம் பார்வை, உங்களின் பாக்ய ஸ்தான ராசியின் மீது படிவதால் பெற்றோர் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்கும். அவர்களுக்கும் நீங்கள் உதவி செய்வீர்கள். தொலை தூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிரிகளையும் வசப்படுத்திவிடுவீர்கள். குடும்பத்தில் அமைதி பூத்துக் குலுங்கும். மன நலமும், உடல் நலமும் சீராகவே இருக்கும். உங்களின் ஆன்மீக பலம் சிறப்படையும்.

உத்யோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவினால் வேலைப் பளு குறையும். ஊதிய உயர்வு எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் கிடைத்ததை ஏற்றுக்கொண்டு பொறுமையாக இருக்கவும். மற்றபடி உங்கள் எண்ணங்களைப் பக்குவமாக  மேலதிகாரிகளிடம் எடுத்துக் கூறி, பாராட்டு பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு போட்டியாளர்களால் சில எதிர்ப்புகள் தோன்றினாலும் அவற்றை சமாளிப்பீர்கள்.  வியாபாரத்திற்காகக் கடன் வாங்க நேரிடும். பொருட்களை கடனுக்கு விற்பதையும் தவிர்க்க முடியாது. ஆயினும் உங்கள் நண்பர்கள் சாதகமாக இருப்பார்கள். அதனால் சமாளித்துவிட முடியும்.  புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்க வாய்ப்புண்டாகும். உங்கள் செல்வாக்குக்கு எந்தக் குறைவும் வராது.

விவசாயிகள் கூடுதல் விளைச்சலைக் காண்பீர்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். தரமான விதைகளை வாங்கி மகசூலை இரு மடங்காக்கும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உபரி வருமானங்களுக்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும்.

அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். தொண்டர்களின் நலனில் கூடுதல் அக்கறை செலுத்தவும். உட்கட்சிப் பூசலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய பொறுப்புகள் உங்களை வந்தடையும். அரசு அதிகாரிகளிடம் செல்வாக்கு அதிகரிக்கும்.

கலைத்துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும், புகழும் உண்டாகும். ஆயினும் கடின முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்களைக் குறை சொல்லும் சக கலைஞர்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.

பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் பிரிந்தவர்கள் கூடுவார்கள். அதேநேரம் பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகள் செய்ய வேண்டிவரும். மேலும் சகோதர, சகோதரிகளிடம் எல்லா “உண்மைகளையும்’ போட்டு உடைப்பதைத் தவிர்த்துவிடுங்களேன்!

மாணவமணிகள் பாடுபட்டுப் படித்தால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். பெற்றோர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள்.

பரிகாரம்:  முருகப் பெருமானை வழிபட்டு வரவும். செவ்வாய்க்கிழமையன்று “கந்த சஷ்டிகவசம்’ பாராயணம் செய்யவும்.

(தினமணி – வெள்ளிமணியில் கே.சி.எஸ்.ஐயர் எழுதிய குருபெயர்ச்சி

https://www.dinamani.com/edition/asthome1.aspx)

Leave a Reply