682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

இருமுடி கட்டி சபரிமலை வந்த, தனி தபால் பின் கோடு உள்ள இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முதல்முறையாக தனக்கென தனி அஞ்சல் பின் கோடு கொண்ட சபரிமலை ஐயப்பனை கண்குளிர தரிசனம் செய்தார்.
அவர் பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய் கிழமை கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் உள்ள விமானப்படை தொழில்நுட்பப் பகுதிக்கு வந்த குடியரசுத் தலைவரை, ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன், மத்திய இணையமைச்சர் ஜார்ஜ் குரியன், மேயர் ஆர்யராஜேந்திரன், அந்தோணி ராஜு எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ. ஜெயதிலக் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் குடியரசுத் தலைவர் ராஜ்பவனுக்குச் சென்று தங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு 4 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று கேரளா வந்தார். சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லுதல், ராஜ்பவனில் முன்னாள் ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றல், வர்க்கலா சிவகிரி மடத்தில் நடக்கும் ஸ்ரீ நாராயணகுரு மகா சமாதி நூற்றாண்டு விழாவை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விதமாக அவரது பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்றார். இதற்காக அவர் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இன்று காலை விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அவரது ஹெலிகாப்டர் முதலில் நிலக்கல்லில் தரையிறங்குவதாக இருந்தது.ஆனால் மழை உள்ளிட்ட பாதகமான வானிலை காரணமாக அவரது ஹெலிகாப்டர் இறங்கும் இடம் பத்தினம்திட்டா மல்லசேரி அருகே உள்ள பிரமடம் மைதானத்திற்கு மாற்றப்பட்டது.
இதற்காக அந்த மைதானத்தில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டர் தளத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணித்த ஹெலிகாப்டர் இன்று காலை தரையிறக்கப்பட்டது. அப்போது ஜனாதிபதி வந்த ஹெலிகாப்டரின் சக்கரம் கான்கிரீட் தளத்தில் பதிந்து லேசாக சரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஹெலிகாப்டர் சக்கரம் சிக்கி லேசாக சரிந்தபடி இருந்ததால் ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி உடனடியாக இறங்கவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் ஜனாதிபதியின் ஹெலிகாப்டரை தள்ளி சமமான பகுதிக்கு கொண்டு சென்றனர்.
அதன்பிறகு ஹெலிகாப்டரில் இருந்து ஜனாதிபதி இறங்கிவந்தார்.
அவரை தேவசம்போர்டு மந்திரி வாசவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதன்பிறகு அங்கிருந்து ஜனாதிபதி திரவுபதி முர்மு கார் மூலமாக சபரிமலை கோவிலுக்கு புறப்பட்டார்.
சபரிமலைக்கு செல்லும் முன் ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பை நதியில் புனித நீராட வசதியாக திரிவேணி சங்கமம் பகுதியில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அந்த இடத்துக்கு சென்று பம்பை நதியில் கால்களை நனைத்துவிட்டு ஜனாதிபதி திரும்பினார். பின்பு பம்பையில் வைத்து இருமுடி கட்டிய ஜனாதிபதி, சபரிமலை யாத்திரையை தொடங்கினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு சுவாமி ஐயப்பன் சாலை மற்றும் பாரம்பரிய மலையேற்றப் பாதை வழியாக சிறப்பு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். பகல் 11.55 மணி முதல் 12.25 மணி வரை ஜனாதிபதி சாமி தரிசனம் மற்றும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி பதினெட்டாம் படிகளில் இருமுடியுடன் ஏறிச்சென்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ஜனாதிபதிக்கு கோவில் தந்திரி கண்டரரு மகேஷ்மோகனரு மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி தலைமையில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது.
18 படிகளில் பக்தியுடன் ஏறி சென்ற ஜனாதிபதி சபரிமலையில் ஐயப்பனுக்கு இருமுடி காணிக்கை செலுத்தி சாமி தரிசனம் செய்துவிட்டு நெய்யபிஷேகம் செய்து வழிபட்டு மளிகபுறம் கோயிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேவசம் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார். பின்பு பிற்பகலில் சபரிமலையில் இருந்து பம்பைக்கு திரும்பினார் .ஜனாதிபதி வருகையை முன்னிட்டு சபரிமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.