குருப் பெயர்ச்சி பலன்கள் 2010-2011
99" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/12/gurupeyarchi_1_mesham.jpg" border="0" align="left" width="88" height="87" />
மேஷம்:
இந்த விக்ருதி ஆண்டு, கார்த்திகை மாதம், 20ஆம் தேதி (06.12.2010), திங்கள் கிழமை, காலை 9.06 மணிக்கு குரு பகவான் உங்களின் லாபஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து அயன, விரய ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான் அனாவசிய செலவுகளை ஏற்படுத்தினாலும், உங்கள் ராசிக்கு பாக்யாதிபதியம் பெற்று விரய ஸ்தானத்தில் ஆட்சி பெறுவதால் சுபச் செலவுகளையே பெரிதும் உண்டாக்குவார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்களை ஆரவாரம் இல்லாமல் ஆற்றுவீர்கள். பல வகையிலும் முயன்று வருமானத்தைப் பெருக்குவீர்கள். விழிப்புடன் இருந்து சேமிப்பைக் கூட்டிக் கொள்வீர்கள். குறிப்பாக பரஸ்பர நிதித் திட்டங்களில் சிறுகச் சிறுக சேமிக்கத் தொடங்குவீர்கள்.
குரு பகவானின் ஐந்தாம் இடப்பார்வை உங்களின் சுக ஸ்தான நான்காம் வீட்டின் மீது படிகிறது. இதனால் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வீர்கள். பாகுபாடு காட்டாமல் அனைவரிடமும் நன்றாகப் பழகுவீர்கள். முரண்டு பிடித்த நண்பர்களையும், உற்றார், உறவினர்களையும் உங்கள் வழிக்குக் கொண்டு வருவீர்கள். சிலர் சொந்த வீடு வாங்குவார்கள்.
குரு பகவானின் ஏழாம் இடப் பார்வை உங்களின் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தின் மீதும், அங்கு சுப பலத்துடன் அமர்ந்துள்ள சனி பகவானின் மீதும் படிகிறது. இதனால் உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். இதுவரை நிலவி வந்த நேர்முக, மறைமுக எதிர்ப்புகள் மறையும். போட்டி, பந்தயங்களிலும், ஏஜென்ஸி, கமிஷன் போன்றவற்றிலும் ஆதாயம் கிடைக்கும்.
குரு பகவான் அஷ்டம ராசியைப் பார்வை செய்வதால் நெடுநாட்களாக சர்க்கரை நோய், உப்பு நோய், ரத்தம் கெடுதல் ஆகிய உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அவற்றிலிருந்து நலம் பெறுவார்கள். கடன்கள் வாங்கியிருந்தாலும் அதனால் தொல்லைகள் ஏற்படாது. “முடிந்தபோது கொடுங்கள்’ என்று கடன் கொடுத்தவர்கள், உங்கள் மனம் கோணாமல் கூறுவார்கள். பெற்றோர்களுக்கு மருத்துவச் செலவுகள் குறையும்.
அரசாங்கத்தால் ஏற்பட்ட கெடுபிடிகள் நீங்கும். அதேநேரம் வண்டி, வாகனங்களைப் பராமரிப்பதற்கும், இருக்கும் வீட்டைப் பழுது பார்ப்பதற்கும் சிறிது செலவு செய்ய நேரிடும்.
உத்யோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். எனவே கொடுத்த வேலைகளைக் கச்சிதமாக முடிக்க முடியும். சக ஊழியர்களின் அன்பும், ஆதரவும் தொடர்ந்து கிடைக்கும் என்பதால் எடுத்த காரியங்கள் அனைத்தும் பிரச்சினையின்றி நிறைவேறும். தெளிவான மனதுடன் பணியாற்றுவீர்கள். என்றாலும் சிலர் அலுவலக ரீதியான பயணங்களை விருப்பமில்லாமல் செய்ய வேண்டிவரும்.
வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் படிப்படியாக நீங்கிவிடும். எனவே விட்டதைப் பிடிக்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தை சிறிது சீர்திருத்தம் செய்தாலே நல்ல நிலைக்கு வந்துவிடுவீர்கள். செய்தொழிலில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் எப்படியும் இலக்குகளை எட்டிவிடுவீர்கள். அதேசமயம் கூட்டாளிகளைக் கலந்தாலோசிக்காமல் எதையும் செய்ய வேண்டாம்.
விவசாயிகளுக்கு மகசூல் நன்றாக இருக்கும். ஆனாலும் பயிர்களில் புழு, பூச்சிகளின் பாதிப்புண்டாவதாகத் தெரியவந்தால் உடனே தகுந்த நிவாரணம் காண்க! விவசாய உபகரணங்களை வாங்கி மேலும் முன்னேற்றமடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அரசியல்வாதிகள் மீது எதிர்கட்சியினர் வீண் அவதூறுகளைச் சுமத்த நினைப்பார்கள். அதனால் இந்த குரு பெயர்ச்சிக் காலத்தில் சற்று எச்சரிக்கையுடன், நிலைமைக்குத் தகுந்தவாறு நடந்து கொள்ளவும். அதேசமயம் உங்களின் பெயரும், புகழும் உயரும். தொண்டர்களை அரவணைத்துச் சென்று உங்களின் காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.
கலைத்துறையினர் ஏற்ற இறக்கங்களைக் காண்பீர்கள். துறையில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படாவிட்டாலும் ஓரளவு புகழ் கிடைக்கும். எனினும் ஏதேனும் ஒரு வகையில் வருமானத்திற்குக் குறைவு ஏற்படாது. சக கலைஞர்களின் உதவி உங்களை உற்சாகப்படுத்தும்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார், உறவினர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல செய்தி வரும். உத்யோகத்திற்கு செல்லும் பெண்களுக்கு பண வரவுடன் விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். எனினும் அதிகம் பழகாதவர்களின் பேச்சை நம்ப வேண்டாம்.
மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். அதிக மதிப்பெண்களை அள்ளுவீர்கள். தேவையில்லாத வீண் பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுங்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.
பரிகாரம்: விநாயகப் பெருமானை அருகம் புல் மாலை அணிவித்து வழிபட்டு வரவும். சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தியன்று கணபதிக்கு தேங்காய் உடைத்து, “விநாயகர் அகவல்’ பாராயணம் செய்யவும்.