குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

குரு பகவான்

ஒன்பது கிரகங்களில் சூரிய பகவானுக்கு அடுத்தபடியான பெரிய கிரகம் குரு. “நவகிரகங்களில் முதல்வன்’ என்றழைக்கப்படும் சூரிய பகவானுக்கு ஆத்ம நண்பர். இவர் முழு சுபக்கிரகம். ஒருவருக்கு தெய்வ பக்தி, நல்ல மனம், பண வசதி, நல்ல அறிவு, புத்திர பாக்கியம் முதலியவற்றை குரு பகவான் கொடுப்பார். மேலும் இவரின் அருளால் திருக்கோயில்களில் கும்பாபிஷேகம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மதத் தலைவர்கள், ஜோதிடர்கள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு உயர்வு ஆகியவை உண்டாகும். குரு பகவான் இருக்கும் ராசியைவிட பார்க்கப்படும் ராசிகள் வளமை அடைகின்றன. இவர் ஒருவர்தான் தன் மூன்று பார்வைகளான ஐந்தாம் பார்வை, ஏழாம் பார்வை மற்றும் ஒன்பதாம் பார்வைகளால் சரம், ஸ்திரம் மற்றும் உபய ராசிகளைப் பார்வையிடுவார். குரு பகவான் ஒரு ராசியிலிருந்து 2, 4, 7, 9, 11 ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும் காலத்திலும், மற்ற ராசிகளில் சஞ்சரிக்கும் காலங்களில் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கும் காலமான சுமார் நான்கரை மாதங்களிலும், “குரு பலம் வந்துவிட்டது’ என்று கொண்டு திருமண முயற்சிகளை செய்வது மரபு. “பொன்னன்’ என்கிற பெயரே இவரது உலோகம் “தங்கம்’ என்பதைத் தெரிவிக்கின்றது.

ஹம்ஸ யோகம்

இது பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றாகும். குரு பகவான் லக்னத்திற்கோ, ராசிக்கோ 1, 4, 7, 10ஆம் இடங்களில் ஆட்சி, உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் உண்டாவது இது.

கஜகேசரி யோகம்

குரு பகவான் ராசிக்கு 4, 7, 10ஆம் இடங்களில் அமர்ந்திருப்பதால் உண்டாகிறது. ராசிக்கு 7ஆம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருக்கும்போது முழு கஜகேசரி யோகம் ஏற்படுகிறது.

குரு சந்திரயோகம்

குரு பகவான் ராசிக்கு 1, 5, 9ஆம் இடங்களில் அமர்ந்திருப்பதால் உண்டாவது குரு சந்திரயோகம்.

சிவராஜயோகம்

குரு பகவான் சூரிய பகவானுடன் இணைந்தோ அல்லது சமசப்தமாக அமர்ந்திருப்பதாலோ உண்டாவது சிவ ராஜயோகம். குரு பகவான் சம்பந்தம் பெற்ற இந்த யோகங்களில் ஏதாவது ஒன்று, ஜாதகத்தில் அமைந்திருந்தாலும் அரசாங்கம் மூலமாக திடீர் அதிர்ஷ்டம், ஆன்மீகம் – ஜோதிடம் ஆகியவற்றில் சிறப்பான தேர்ச்சி, நல்ல வீடு-வாகனம் வாங்குதல் போன்ற நன்மைகள் கிடைக்கும். குரு பகவான் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் அல்லது நீச்சபங்க ராஜயோகம் பெற்று, அதற்கேற்ற தசா புக்திகள் நடக்கும் காலங்களில், எதிர்பாராத விதத்தில் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம். பொதுவாக ஒரு ராசியில் சேர்ந்திருக்கும் கிரகங்களில் குரு பகவான் பலம் பெற்றிருந்தால் தெய்வீகமான அணிகலன்கள் அணிந்துகொள்ளும் பாக்கியம் கிடைக்கும். தெய்வீக வித்தைகளில், குறிப்பாக ஜோதிடத்தில் தேர்ச்சி அடையலாம். பொன், பொருள் சேர்க்கையோடு புகழோடு வாழும் சூழ்நிலை உருவாகும். நல்ல விஷயங்களை உலக மக்களுக்குப் போதிக்கும் ஆற்றலும், அதன் மூலம் புகழ் பெறும் வாய்ப்பும் கிடைக்கும்.

குரு பகவானின் தன்மைகள்

ஆட்சி வீடுகள் – தனுசு, மீனம்

உச்ச வீடு – கடகம்

நீச்ச வீடு – மகரம்

உகந்த நட்சத்திரங்கள் – புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தசையின் காலம் – 16 வருடங்கள்

பார்வைகள் – 5,7,9ஆம் பார்வைகள்

நிறம் – மஞ்சள்

சுவை – இனிப்பு

உலோகம் – தங்கம்

வாகனம் – யானை

நட்புக் கிரகங்கள் – சூரியன், சந்திரன், செவ்வாய்

தானியம் – கொண்டைக் கடலை.

ரத்தினம் – புஷ்பராகம்

திசை – வடக்கு

பஞ்ச பூதங்களில்… – ஆகாயம்

பரிகார ஸ்தலங்கள் – ஆலங்குடி, தென்குடித் திட்டை, திருச்செந்தூர், திருப்புலிவனம், திருவலிதாயம், இலம்பையங் கோட்டூர்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் – சராசரியாக ஒரு வருடம்

மலர் – முல்லை.

 

Leave a Reply