குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2010/12/gurupeyarchi_5_simmam.jpg" border="0" align="left" width="83" height="87" />சிம்மம்:

குரு பகவான், உங்களின் சப்தம ராசியான கும்ப ராசியிலிருந்து அஷ்டம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த அஷ்டம ராசி சஞ்சாரம் அவ்வளவு சிறப்பில்லையென்றாலும் ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான் பெரும்பாலும் நற்பலன்களையே தரப் போகிறார் என்பதே உண்மை. இந்தக் காலகட்டத்தில் உங்கள் காரியங்களை அவசரப்படாமல் விவேகத்துடன் செய்யத் தொடங்குவீர்கள். நண்பர்கள் உங்களை நம்பிக்கையான விசுவாசியாக எண்ணி உங்களிடம் தங்கள் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.

தாமதமாகவே வருமானம் கிடைத்தாலும் பொருளாதாரத்தில் சிரமம் ஏற்படாது. உங்களை அலைக்கழித்தவர்கள் உங்களின் முன்னேற்றத்திற்கு துணை புரிவார்கள். உங்களின் பேச்சுக்கு பிரத்யேக மரியாதை கிடைக்கும்.

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக அயன, சயன, விரய ராசியைப் பார்வை செய்வதால் பெற்றோர் வழியில் சிறு மருத்துவச் செலவுகள் உண்டாகும். காரணம் புரியாத புதிய வியாதிக்கு ஆளாகி செலவு செய்ய நேரிடும். ஆனால் அஞ்சத் தேவையில்லை. உங்களை நம்பி வந்து உதவி கேட்பவர்களுக்குத் தக்க உதவிகளைச் செய்வீர்கள். ஆலய தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் குடும்ப ஸ்தான ராசியின் மீது படிவதால் உங்களின் மதி நுட்பமும், பேச்சு சாதுர்யமும் அதிகரிக்கும். புதிய தொழில் நுட்பங்களையும், கலைகளையும் கற்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் திரும்பி வந்து சேர்வார்கள். கல்வியில் சாதனை செய்வீர்கள்.

குரு பகவான் சுக ஸ்தானத்தை, தன் ஒன்பதாம் பார்வையால் பார்வை செய்வதால் குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வழக்கு விவகாரங்களில் தற்காலிகத் தீர்வைக் காண்பீர்கள். அதேநேரம் பூர்வீகச் சொத்துக்களைப் பராமரிக்க சிறிது செலவு செய்ய நேரிடும். இந்தக் கால கட்டத்தில் அவசர முடிவுகள் எதையும் எடுக்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு, உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கும். வேலைப் பளு அதிகரிப்பதால் “உத்யோகத்தை மாற்றலாமா…?’ என்கிற எண்ணம் அவ்வப்போது தோன்றும். அதேநேரம் உத்யோகத்தை விட்டு விடக்கூடிய நிலைமையும் ஏற்படாது. சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்கும். அதை ஏற்றுக் கொண்டு பொறுமையுடன் உழைப்பீர்கள். உங்கள் வருமானத்திற்கு எந்தக் குறைவும் ஏற்படாது. பிறகென்ன கவலை?

வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் லாபகரமாக இருக்கும். அனாவசிய செலவுகளைச் செய்ய விடாது கோள்களே தடுத்துவிடும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களைக் காண்பீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் நட்புடன் நடந்து கொள்வார்கள். அதேநேரம் எல்லா முடிவுகளையும் கூட்டாளிகளைக் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கவும்.

விவசாயிகள் திருப்திகரமான மகசூலைக் காண்பீர்கள். பண வரவு நன்றாக இருக்கும். பழைய கடன்களை அடைக்க நினைப்பீர்கள். விவசாய உதவியாளர்கள் உங்களுக்குப் பயன்படுவார்கள். மாற்றுப் பயிர்களையும் பயிரிட்டுப் பலனடைவீர்கள்.

இந்த ராசி அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். கட்சியில் மதிப்பும், மரியாதையும் உயரும். பலவழிகளிலும் வருமானம் பெருகும். அரசு அதிகாரிகள் உங்களுக்குத் தேவையான உதவிகளை செய்வார்கள். அதேநேரம் தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்கு வருமானம் சீராக இருக்கும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ளும் புதிய பயிற்சிகளில் ஈடுபடுவீர்கள். சக கலைஞர்களை எந்தக்  காரணத்துக்காகவும் பகைத்துக் கொள்ளாமல் இருக்கவும். முக்கிய முடிவுகளை உயர்ந்தவர்களோடு ஆலோசித்து எடுக்கவும்.

பெண்மணிகள் இந்தக் காலகட்டம் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் உங்களின் மதிப்பும், மரியாதையும் குறையாது. குடும்பத்தில் இருந்த பிணக்குகள் சீராகும். கணவரின் அன்புப் பரிசாக புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் கூடுவார்கள்.

மாணவமணிகள் இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவீர்கள். எனவே பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும். மற்றபடி வருங்காலக் கனவுகள் நிறைவேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன! பெற்றோரிடம் எதிர்பார்த்த ஆதரவைப் பெறுவீர்கள்.

பரிகாரம்: அடிக்கடி “சிவாலயம்’ செல்வது மிகவும் நல்லது. இயன்றவர்கள், உத்திர மேரூர், காஞ்சிபுரம் சாலையில், உத்திரமேரூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள “திருப்புலிவனம்’ என்ற தலத்தில் கோயில் கொண்டுள்ள தக்ஷிணாமூர்த்தியை அவசியம் தரிசிக்கவும். சிம்ம ராசிக்காரர்களுக்கான சிறந்த பரிகாரத் தலமிது. இங்கு தக்ஷிணாமூர்த்தி, சிம்மத்தின் மீதுகாலூன்றி இருப்பது விசேஷம்.

 

Leave a Reply