குருபெயர்ச்சி பலன்கள் 2010

விழாக்கள் விசேஷங்கள்

குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011

கன்னி:

குரு பகவான், உங்களின் சஷ்டம ராசியான கும்ப ராசியிலிருந்து சப்தம ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

சப்தம ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் சிறப்பான பலன்களை உங்களுக்கு வழங்குவார். விட முடியாமலும், பிடித்துக் கொண்டிருக்க முடியாமலும் தவித்த விஷயங்கள் நல்லபடியாக முடியும். நண்பர்கள் நாடி வந்து உதவிகளைச் செய்வார்கள்.

எதிர்காலத்திற்கான அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். உங்களை எதிர்த்தவர்கள் காணாமல் போய்விடுவார்கள். படிப்படியாக வருமானம் உயரும். வெளிநாடு செல்ல விசாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விசா கிடைத்து வெளிநாடு செல்வார்கள். நீண்ட நாட்களாகத் துன்புறுத்தி வந்த உடல் உபாதைகளிலிருந்து விடுதலை ஆவீர்கள். விரக்தி மனப்பான்மையை விட்டொழித்து, நம்பிக்கைச் சின்னமாக வலம் வருவீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் லாப ஸ்தான ராசியின் மீது படிகிறது.  இதனால் உங்கள் திட்டங்கள் சரியான இலக்கைச் சென்றடையும். “ஸ்பெகுலேஷன்’ துறைகளிலும் ஆதாயம் கிடைக்கும். சரியான நேரத்தில் ஆகாரத்தை உட்கொள்வீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். ஆலயத் திருப்பணிக்கு செலவு செய்து இறைவனின் அருளைப் பெறுவீர்கள்.

குரு பகவானின் ஏழாம் பார்வையான அருட்பார்வை உங்களின் ஜன்ம ராசியின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும் படிவதால் மனதில் வைராக்யம் கூடும். “நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று சிந்தித்துத் தெளிவுடன் செயல்படுவீர்கள்.  அவ்வப்போது ஏற்படும் சிறு சிறு தோல்விகளைக் கண்டு துவண்டு விடமாட்டீர்கள். புதிய சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். சில காலமாக புரியாமல் இருந்த விஷயங்களின் மர்ம முடிச்சுகள் அவிழும்.

குரு பகவான், உங்களின் தைரிய ஸ்தான ராசியைப் பார்வை செய்வதால் சகோதர, சகோதரி வழியில் நன்மைகளை அடைவீர்கள். விலகியிருந்த உற்றார், உறவினர்கள் திரும்ப வந்து இணைவார்கள். அதேநேரம் புதிய நண்பர்களிடம் தாமரை இலைத் தண்ணீர் போல் பழகி வரவும். அகலக் கால் வைக்க வேண்டாம். எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ, உங்கள் பெயரில் கடன் வாங்கிக் கொடுப்பதோ கூடாது.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு குறையும். உங்களின் மேலதிகாரிகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். இருப்பினும் உங்கள் வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டுச் செய்தால் குழப்பங்களிலிருந்து தப்பிக்கலாம். மேலும் நிதானமாகப் பேசவும். மற்றபடி பொருளாதார வசதி மேம்படும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும்.

வியாபாரிகள் எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவீர்கள். புதிய யுக்திகளைப் புகுத்தி விற்பனையைப் பெருக்குவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணம் உங்கள் கை வந்து சேரும். புதிய கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனால் எதிலும் கவனம் தேவை.

விவசாயிகள், ஆதாயங்களைப் பெறக் கடினமாக உழைக்க வேண்டிவரும். நீர்வரத்து அதிகமாக உள்ளதால் நீரைத் தேக்கி வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சந்தையில் அதிகப் போட்டிகளை சந்திக்க நேரிடும். என்றாலும் கால்நடைகளாலும், பால் வியாபாரத்தாலும் பலன் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமான சூழ்நிலை அமையும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொண்டர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். அதேநேரம் கோர்ட் விவகாரங்களில் விட்டுக் கொடுத்துச் செல்லவும்.

கலைத்துறையினருக்குப் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அதன் மூலம் பெயரும், புகழும் பெறுவீர்கள். துறையில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சமுதாயப் பணி செய்து நற்பெயர் வாங்குவீர்கள். சக கலைஞர்களுடன் தூர தேசப் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

பெண்மணிகள் ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். தந்தை வழி உறவினர்களால் நன்மை உண்டாகும். உற்றார், உறவினர்களைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள். குழந்தைகளின் எதிர்காலத்தில் மிகுந்த கவனம் செலுத்துவீர்கள்.

மாணவமணிகள் தினமும் நன்றாகப் படித்துத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவீர்கள். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடப்பீர்கள். உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். என்றாலும் கடினமான பயிற்சிகள் வேண்டாம்.

பரிகாரம்: இந்தக் காலகட்டம் முழுவதும் “ஜெயஜெய துர்கா’ என்று ஜபித்து வரவும். கழுத்தில் எப்போதும் ஒரு “ஐந்து முக ருத்ராக்ஷம்’ அணிந்திருப்பது, திருஷ்டி தோஷங்களைப்பொசுக்கிவிடும்.

 

Leave a Reply