குருப்பெயர்ச்சி பலன்கள் – 2010-2011
ரிஷபம்:
குரு பகவான் உங்களின் தொழில் ஸ்தான ராசியான கும்ப ராசியிலிருந்து லாப ஸ்தான ராசியான மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
இந்த சஞ்சாரத்தினால் பொருளாதாரத்திலும், குடும்பத்திலும் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். வருமானம் சீராக வந்து கொண்டிருக்கும். உங்களின் புகழும், செல்வாக்கும் உயரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். முன்பு உங்களுக்கு உதவி செய்வதாக வாக்களித்து, “மறந்து’ போனவர்கள், தற்போது உங்களைத் தேடி வந்து உதவுவார்கள். உங்களின் புத்திசாலித்தனமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எந்த விஷயத்தையும் பதற்றப்படாமல் சுலபமாக அனுகுவீர்கள்.
குரு பகவானின் ஐந்தாம் பார்வை, உங்களின் தைரிய ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் புதிய முயற்சிகளைத் துவக்குவீர்கள். கடினமான விஷயங்களை பெரியோர்களின் ஆலோசனையைக் கேட்டு நடத்தி முடித்துவிடுவீர்கள். அசாதாரண சூழ்நிலைகளை சாதகமாக மாற்றிக் கொள்வீர்கள். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும்.
குரு பகவானின் ஏழாம் பார்வை உங்களின் பூர்வ புண்ய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் சனி பகவானின் மீதும் படிகிறது. இதனால் போட்டிகளைச் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். இக்கட்டான சூழல்களில் மாட்டிக்கொண்டாலும் உங்களின் சமயோஜித புத்தியால் அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்வீர்கள். பள்ளிப் படிப்பை முடிக்கும் பருவத்திலுள்ள உங்கள் குழந்தைகளுக்கு விரும்பிய கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இடமும், விரும்பிய பாடப் பிரிவும் கிடைத்துவிடும்.உங்களின் உடல் உழைப்புக்கு இரு மடங்கு பலன் கிடைக்கும்.
குரு பகவான் சப்தம ஸ்தானமான களத்ர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் அனைத்தையும் பற்றி சிந்தித்து முடிவெடுப்பீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும்.
வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல செய்தி வரும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
உத்யோகஸ்தர்கள், எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றத் தொடங்குவார்கள். அலுவலகத்தில் சகஜமான சூழ்நிலையைக் காண்பீர்கள். அதேநேரம் கடமை தவறாமல் உழைக்கவும். நீங்கள் தலை நிமிர்ந்து தன்னம்பிக்கையுடன் உலா வரும் கால கட்டம் இது என்றால் மிகையாகாது.
வியாபாரிகள் இந்தக் காலத்தில் கடுமையாக உழைப்பீர்கள். உங்களின் உழைப்பு இரு மடங்காக லாபம் தரும். கூட்டாளிகளிடம் வரவு – செலவுக் கணக்குகளை சரியாகக் காட்டி நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்குவதற்காக பல இடங்களுக்குப் பிரயாணம் செய்வீர்கள். கூட்டாளிகளுடன் சேர்ந்து புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல விளைச்சலைக் காண்பீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டுவீர்கள். வங்கியில் கடன் வாங்கி, புதிய பயிர்களைப் பயிரிடுவீர்கள். கொள்முதல் லாபம் இந்தப் பெயர்ச்சி காலம் முழுவதும் தொடரும்.
அரசியல்வாதிகளின் அந்தஸ்து உயரும். சோதனைகள் மறையும். கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். மேலிடத்தின் கட்டளைகளைத் தீவிரமாக நிறைவேற்றி நற்பெயர் எடுப்பீர்கள். உங்களை எதிர்ப்பவர்களும் பணிந்து போகும் காலகட்டம் இது.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். உங்களின் முகத்தில் மலர்ச்சியும், பொலிவும் அதிகரிக்கும். கடினமாக உழைத்து அரிய சாதனைகளைச் செய்வீர்கள். சிறிய வாய்ப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்துப் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களின் தனித்தன்மையை செயல்களில் வெளிப்படுத்துவீர்கள். சிலருக்கு தக்க இடங்களிலிருந்து விருதுகள் கிடைக்கும்.
பெண்மணிகள் மாற்றங்களையும், ஏற்றங்களையும் காண்பீர்கள். வருமானம் சீராக இருக்கும். குடும்பத்தினரிடையே உங்கள் செல்வாக்கு உயரும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்திலுள்ள மூத்தோர்களிடம் விட்டுக் கொடுத்துப் பழகுவதன் மூலம் மேலும் வளர்ச்சி அடையலாம்.
மாணவமணிகள் கல்வியில் முன்னேறுவதற்காகச் செய்யும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சிலருக்குக் கல்வி கற்பதற்கான இட மாற்றமும் கிடைக்கும். சிறிய முயற்சிகளால் பெரிய வெற்றிகளை அடைவீர்கள். மேலும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவு, உங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும்.
பரிகாரம்: பெருமாளையும், தாயாரையும் வழிபட்டுச் சிறப்படையவும். இயன்றவர்கள், திருப்பதி மற்றும் காளஹஸ்திக்கு ஒரு முறை சென்று வழிபாடு செய்துவிட்டு வரவும்.