திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">9ஆம் பத்து 4ஆம் திருவாய்மொழி

3706

மையார் கருங்கண்ணி கமல மலர்மேல்

செய்யாள், திருமார் வினில்சேர் திருமாலே,

வெய்யார் சுடராழி சுரிசங்க மேந்தும்

கையா, உனைக்காணக் கருதுமென் கண்ணே. 9.4.1

 

3707

கண்ணே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சம்

எண்ணே கொண்ட சிந்தையதாய் நின்றியம்பும்,

விண்ணோர் முனிவர்க் கென்றும்காண் பரியாயை,

நண்ணா தொழியே னென்றுநான் அழைப்பனே. 9.4.2

 

3708

அழைக்கின்ற வடிநாயேன் நாய்கூழை வாலால்,

குழைக்கின் றதுபோல் என்னுள்ளம் குழையும்,

மழைக்கன்று குன்றமெடுத்த தாநிரை காத்தாய்,

பிழைக்கின்ற தருளென்று பேதுறு வேனே. 9.4.3

 

3709

உறுவதிது வென்றுனக் காட்பட்டு, நின்கண்

பெறுவ தெதுகொலென்று பேதையேன் நெஞ்சம்,

மறுகல்செய்யும் வானவர் தானவர்க் கென்றும்,

அறிவ தரிய அரியாய அம்மானே. 9.4.4

 

3710

அரியாய அம்மானை அமரர் பிரானை,

பெரியானைப் பிரமனை முன்படைத் தானை,

வரிவாள் அரவின் அணைப்பள்ளி கொள்கின்ற,

கரியான் கழல்காணக் கருதும் கருத்தே. 9.4.5

 

3711

கருத்தே யுனைக்காணக் கருதி,என் னெஞ்சத்

திருத்தாக இருத்தினேன் தேவர்கட் கெல்லாம்

விருத்தா, விளங்கும் சுடர்ச்சோதி யுயரத்

தொருத்தா, உனையுள்ளும் என்னுள்ளம் உகந்தே. 9.4.6

 

3712

உகந்தே யுனையுள்ளு மென்னுள்ளத்து,

அகம்பால் அகந்தான் அமர்ந்தே யிடங்கொண்ட அமலா,

மிகுந்தான வன்மார் வகலம் இருகூறா

நகந்தாய், நரசிங் கமதாய வுருவே. 9.4.7

 

3713

உருவா கியாஅறு சமயங்கட் கெல்லாம்,

பொருவாகி நின்றான் அவனெல்லாப்

பொருட்கும், அருவாகிய ஆதியைத் தேவர்கட் கெல்லாம்,

கருவாகிய கண்ணனைக் கண்டுகொண் டேனே. 9.4.8

 

3714

கண்டுகொண் டேனேகண் ணிணையாரக் களித்து,

பண்டை வினையாயின பற்றோ டறுத்து,

தொண்டர்க் கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்,

அண்டத் தமரர் பெருமான். அடியேனே. 9.4.9

 

3715

அடியா னிவனென் றெனக்கா ரருள்செய்யும்

நெடியானை, நிறைபுகழ் அஞ்சிறைப் புள்ளின்

கொடியானை, குன்றாமல் உலகம் அளந்த

அடியானை, அடைந்தடி யேனுய்ந்த வாறே. 9.4.10

 

3716

ஆற மதயானை அடர்த்தவன் றன்னை,

சேறார் வயல்தென் குருகூர்ச் சடகோபன்,

நூறே சொன்னவோ ராயிரத்து ளிப்பத்தும்,

ஏறே தரும்வா னவர்தமின் னுயிர்க்கே. (2) 9.4.11

Leave a Reply