682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

இன்று ஆனி மூலம்: ஸ்ரீசைலேச அவதாரத் திருநாள்!
ஓராண்டுகாலம் திருவாய்மொழியின் ஆழ்பொருளை நம்பெருமாளுக்கு ஸ்ரீ மணவாளமாமுனிகள் விவரித்து அதற்கு நம்பெருமாள் தந்த பரிசான ஸ்ரீசைலேசத் தனியன் அவதரித்தது ப்ரமாதீச ஆண்டு ஆனி மாதம் மூல நக்ஷத்திரத்தில் (9-7-1433).
எம்பெருமானாரிடம் ஸச்சிஷ்யனாக நின்று மந்த்ரோப தேசம் பெற்றும், ‘ஸ்ரீவைஷ்ணவ நம்பி’ என்ற தாஸ்ய நாமம் பெற்று இருந்தும், ஆசார்யனுக்கு குருதக்ஷிணையாக ஒன்றும் ஸமர்ப்பிக்கவில்லையே என்றும், ஆழ்வார் முகேந அருளிச் செய்த திருவாய்மொழிக்கு (பகவத் விஷயம்) வ்யாக்யானங் களை, ஈட்டின் ஸ்ரீஸூக்திகளை கேட்க வில்லையே” என்றும் ஸ்ரீரங்கநாதன் திருவுள்ளத்திலே குறையிருந்தது.
ஆண்டுதோறும் திருவாய்மொழி பாசுரங்களை மட்டும் செவிசாய்த்து ஏற்று மகிழும் ஸ்ரீரங்கநாதன், அக்குறையையும் அர்ச்சாவதாரத்திலேயே தீர்த்துக் கொள்ள, எம்பெருமானாரின் புனரவதாரமாக அவதரித்து ஆசார்யபூர்த்தியுள்ள ‘பொய்யில்லாத மணவாள மாமுனி கள்’ என்கிறபடியே ஜ்ஞாநக்கடலாகவும், வழுவில்லா அநுஷ்டாநபரராயும் உள்ள பெரியஜீயர் (ஸ்ரீமணவாளமா முனிகள்) பக்கத்தில் அர்த்தித்து (யாசித்து) பகவத் விஷய மான ஈடுகேட்டருளத் (செவிசாய்த்தருள) திருவுள்ளங் கொண்டார்.
ஒரு சமயம் பரிதாபீ வருஷத்தில் திருப்பவித்ர உத்ஸவம் நடந்து கொண்டிருந்தது. சாற்றுமுறையன்று நம்பெருமாள் புறப்பட்டருளி, திருப்பவித்திர மண்டபத்திலே பாகவதப் பெருங்குழுவோடு எழுந்தருளியிருந்தார். அச் சமயம் அடியார்கள் குழாங்கள் சூழ மணவாளமாமுனிகள் பெருமாளை மங்களா சாஸநம் செய்ய அவ்விடம் எழுந் தருளினார். அணியரங்கன் திருமுற்றத்தடியார்கள், ஆசார்ய புருஷர்கள், ஜீயர்கள், ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைத்துக் கொத்துக்கும் அருளப்பாடு ஸாதித்தருளி (அர்ச்சகமுகேந கூவியழைத்தருளி) ஜீயரும் முதலிகளுடன் கூடப் பெருமாளை மங்களா சாஸநம் பண்ணியருளி, திருவாராதநம் முடிந்தபிறகு மணவாளமாமுனிகளைத் தனித்து அருள்பாடிட்டருளி ஸ்ரீசட கோபனையும் ஸாதித்தருளி, “நாளை முதல் நம்முடைய பெரிய திருமண்டபத்திலே (சந்தன மண்டபத்திலே) பெரிய வண் குருகூர்நம்பியான ஆழ்வாருடைய திருவாய்மொழிப் பொருளை ஈடு முப்பத்தாறாயிரத்துடனே நடத்தும்”, என்ன, ஜீயரும் பெருமகிழ்ச்சியுற்று, மறுநாளே தொடங்குவதாக விண்ணப்பித்து மடத்திற்கு எழுந்தருளினார்.
மறுநாள் நம்பெருமாள் நாச்சிமார்களுடனே புறப்பட்டருளி பெரியதிருமண்டபத்திலே திவ்ய ஸிம்ஹா ஸநத்திலே அமர்ந்து திவ்யகோஷ்டியை போரவுகந்து, அந்த கோஷ்டியை அந்தர்பூதராய் சேர்த்தியை அநுபவிக்கிற, அயர்வறுமமரர்களான திருவனந்தாழ்வான், பெரியதிருவடி (கருடாழ்வார்), ஸேநாபதியாழ்வான் (விஷ்வக்ஸேநர்) என்கிற நித்யயசூரிகளோடும் வைகுந்தத்து முனிவரான நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் பதின்மரோடும், நாதமுனி, யதிவரர் முதலான ஆசார்யர்களனைவரோடும் ஸ்ரீரங்க நாராயணஜீயர், திருமலைதந்தபட்டர் தொடக்கமானாரோ டும், அணியரங்கன் திருமுற்றத்து அடியார் தங்களின்பமிகு பெருங்குழுவோடும் கூடப் பேரோலக்கமாக (மஹா ஸபையாக) எழுந்தருளியிருக்க, பெரிய ஜீயராகிய மணவாள மாமுனிகள் எழுந்தருளிக் காலக்ஷேபம் ஸாதித்தருளத் தொடங் கினர். இவ்வாறு பேரோலக்கமாக இருந்து நம்பெருமாள் பத்துமாத காலம் திருவாய் மொழியின் ஆழ்பொருளைக் கேட்டருளினார்.
திருவாய்மொழி விரிவுரை முடிவுற்ற நாளன்று நம்பெருமாள் நாச்சிமார்களுடனும், நித்யசூரிகளுடனும், ஆழ்வார்கள் பதின்மருடனும் கூடிப்பெரிய குழுவாக பெரிய திருமண்டபத்திலே எழுந்தருளியிருக்க சாற்றுமுறையும் நடை பெற்றது.
நம்பெருமாளும் ஜீயரிடம் கொண்ட அளவுகடந்த மகிழ்ச்சியால் திவ்யப்பிரபந்தம் மற்றும் அதன் வ்யாக்யான வைபவங்களையும் ஜீயருடைய வைபவங்களையும் ப்ரகாசஞ் செய்தருளவேணுமென்றும் தாம் அநுஷ்டித்துக் காட்டவேணு மென்றும் திருவுள்ளமாய் ஜீயருக்கு ஆசார்ய ஸம்பா வனையாக, சில த்ரவ்யங்களும் ஏல லவங்க கர்ப்பூராதிகளும், திருப்பரியட்டங்களும் தாம்பூலமும் பழங்களும் ஸமர்ப் பிக்க, அழகியமணவாளபட்டர் என்ற திருநாமத்தையுடைய அர்ச்சக ருடைய குமாரராய், ஐந்து வயதுடைய ‘ரங்க நாயகம்’ என்கிற திருநாமத்தையுடையரான சிறுபிள்ளை, ஸம்பா வனைத் தட்டுக்களுக்கும் நம்பெருமாளுக் கும் நடுவே வந்து நின்றான்.
பெரியோர்கள், குழந்தை இடையே நிற்கின்றதே என்று அப்பாற்கொண்டு விட்டனர். அப்பாலே விட விட மறுபடியும் மறுபடியும் அங்கே வந்து நின்றான். கோஷ் டியினர் அக்குழந்தையைப் பார்த்து “நீர் நிற்கிற கார்யமே” தென்ன, அக்குழந்தை மாமுனிகளின் பக்கமாகக் கைகளைக் கூப்பிக் கொண்டு பயப்படாமல் ‘ ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்’ என்ன, பின்னுமே தென்ன, “யதீந்த்ரப்ரவணம் வந்தே ரம்யஜா மாதரம் முநிம்” என்று சொல்லி ஓடிப்போக பெரியோர்களெல்லோரும் ஆச்சர்யப்பட்டு இந்த ஸ்லோகத் தைப் பட்டோலைக் கொண்டு மஞ்சட்காப்புச் சாற்றி பெரிய பெருமாள் திருவடிகளில் சேர்ப்பித்து ரங்கநாயகத்தை வெகு வாகக் கொண்டாடினர். அழகியமணவாள பட்டருடைய குமாரரான ரங்கநாயகத்திடம் இதுபற்றிக்கேட்க அந்தக் குழந்தை தனக்கேதும் தெரியாதென்று பதிலளிக்க அனை வரும் நம்பெருமாளே ரங்கநாயகனாகிய குழந்தைவடிவில் வந்து இந்தத் தனியனை அருளிச்செய்தாரென்று அறுதி யிட்டனர்.
பெரியபெருமாளும் உகந்தருளி அவரை க்ருபை பண்ணியருளி, வரிசைகளும் ஸாதித்து, உடனே திருமலை, பெருமாள் கோயில் தொடக்கமான திருப்பதிகளுக்கு எல்லாம், ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதிகுணார்ணவம் – யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்” என்று அநுஸந் தித்துத் தொடங்கவும், ப்ரபந்தம் சாற்றி, “வாழி திருவாய் மொழிப்பிள்ளை” என்று தொடங்கி “மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்” என்று அநுஸந்தித்துத் தலைக்கட்டவும் என்று ஜீயருக்கு ஸம்பாவனையுஞ் செய்தருளி வரிசையுடன் மடத்திற்கு அனுப்பியருளினார்.
583 ஆண்டுகளாக இந்தத் தனியன் அவதார உத்ஸவம் ஸ்ரீமணவாளமாமுனிகள் ஸந்நிதியில் நடைபெறுகிறது. அன்று மாலை ஸந்நிதியில், ஸந்நிதி ஆதீன கர்த்தரால் அப் பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகை, பரவாதி கேசரியார் அருளிச்செய்த ஸ்ரீ சைல வைபவம் ஆகியவை ஸேவிக்கப்படும்.
- நல்லதோர் பரிதாபி வருடம் தன்னில்
நலமான ஆவணியின் முப்பத்தொன்றில்,
சொல்லரிய சோதியுடன் விளங்கு வெள்ளித்
தொல்கிழமை வளர்பக்கம் நாலாம் நாளில்,
செல்வம்மிகு பெரியதிரு மண்டபத்தில்
செழுந்திருவாய் மொழிபொருளைச் செப்பும் என்று,
வல்லியுறை மணவாளர் அரங்கர் நங்கள்
மணவாள மாமுனிக்கு வழங்கினாரே. - ஆனந்த வருடத்தின் கீழ்மை ஆண்டில் (ப்ரமாதீச)
அழகான ஆனிதனின் மூலநாளில்,
பானுவாரம் கொண்ட பகலில் செய்ய
பௌரணையின் நாளிட்டுப் பொருந்தி வைத்தே,
ஆனந்த மயமான மண்டபத்தில்
அழகாக மணவாளர் ஈடு சாத்தி,
வானவரும் நீர்இட்ட வழக்கே என்ன
மணவாள மாமுனிகள் களித்திட்டாரே.
என்று மணவாளமாமுனிகள் விஷயமாக இந்தத் தனியன் அவதரித்த வைபவம், அப்பிள்ளார் அருளிச்செய்த ஸம்ப்ரதாய சந்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது