9ஆம் பத்து 2ஆம் திருவாய்மொழி
3684
பண்டைநா ளாலே நிந்திரு வருளும் பங்கயத் தாள்திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப்பல் படிகால் குடிகுடி வழிவந்தாட் செய்யும்,
தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன் தாமரைக் கண்களால் நோக்காய்,
தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த திருபுளிங் குடிக்கிடந் தானே. (2) 9.2.1
3685
குடிகிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்
அடிக்கட வாதே வழிவரு கின்ற அடியரோர்க் கருளி,நீ யொருநாள்
படிக்கள வாக நிமிர்த்தநின் பாத பங்கய மேதலைக் கணியாய்,
கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத் திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.2
3686
கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தியுன் திருவுடம் பசைய,
தொடர்ந்துகுற் றவேல் செய்துதொல் லடிமை வழிவரும் தொண்டரோர்க் கருளி,
தடந்தோள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன் தாமரை மங்கையும் நீயும்,
இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய் திருபுளிங் குடிக்கிடந் தானே. 9.2.3
3687
புளிகுடிக் கிடந்து வரகுண மங்கை இருந்துவை குந்தத்துள் நின்று,
தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே என்னையாள் வாயெனக் கருளி,
நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,
பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காணவா ராயே. 9.2.4
3688
பவளம் போல் கனிவாய் சிவப்பநீ காண வந்துநின் பன்னிலா முத்தம்,
தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண் டாமரை தயங்குநின் றருளாய்,
பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல் தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
கவளமா களிற்றி னிடர்கெடத் தடத்துக் காய்சினப் பறவையூர்ந் தானே. 9.2.5
3689
காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின் மீமிசைக் கார்முகில் போல,
மாசின மாலி மாலிமான் என்றங் கவர்படக் கனன்றுமுன் னின்ற,
காய்சின வேந்தே. கதிர்முடி யானே. கலிவயல் திருபுளிங் குடியாய்,
காய்சின ஆழி சங்குவாள் வில்தண் டேந்தியெம் இடர்கடி வானே. 9.2.6
3690
எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே. இமையவர் தமக்குமாங் கனையாய்,
செம்மடல் மலரும் தாமரைப் பழனத் தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,
நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து நாம்களித் துளநலம் கூர,
இம்மட வுலகர் காணநீ யொருநாள் இருந்திடாய் எங்கள்கண் முகப்பே. 9.2.7
3691
எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம் இணையடி தொழுதெழுந் திறைஞ்சி
தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால் தலைதலைச் சிறந்தபூ சிப்ப,
திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய். திருவைகுந் தத்துள்ளாய். தேவா,
இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள் இருந்திடாய் வீற்றிடங் கொண்டே. 9.2.8
3692
வீற்றிடங் கொண்டு வியங்கொள்மா ஞாலத் திதனுளு மிருந்திடாய், அடியோம்
போற்றியோ வாதே கண்ணினை குளிரப் புதுமலர் ஆகத்தைப் பருக,
சேற்றிள வாளை செந்நெலூ டுகளும் செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,
கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த கொடுவினைப் படைகள்வல் லானே. 9.2.9
3693
கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க் கிடர்கெட, அசுரர்கட் கிடர்செய்,
கடுவினை நஞ்சே. என்னுடை அமுதே. கலிவயல் திருப்புளிங் குடியாய்,
வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,
கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள் கூவுதல் வருதல்செய் யாயே. 9.2.10
3694
கூவுதல் வருதல் செய்திடாய் என்று குரைகடல் கடைந்தவன் தன்னை,
மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல் வழுதிநா டஞ்சட கோபன்,
நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும் இவையுமோர் பத்தும்வல் லார்கள்,
ஓவுத லின்றி யுலகம்மூன் றளந்தான் அடியிணை யுள்ளத்தோர் வாரே. (2) 9.2.11