திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

திருவாய் மொழி ஒன்பதாம் பத்து

9ஆம் பத்து 1ஆம் திருவாய்மொழி

3673

கொண்ட பெண்டிர் மக்களுற்றார் சுற்றத் தவர்பிறரும்,

கண்ட தோடு பட்டதல்லால் காதல்மற்று யாதுமில்லை,

எண்டி சையும் கீழும்மேலும் முற்றவு முண்டபிரான்,

தொண்ட ரோமா யுய்யலல்லா லில்லைகண் டீர்துணையே. (2) 9.1.1

 

3674

துணையும் சார்வு மாகுவார்போல் சுற்றத் தவர்பிறரும்,

அணையவந்த ஆக்கமுண்டேல் அட்டைகள்போல்சுவைப்பர்,

கணையொன் ராலே யேழ்மாமரமு மெய்தேங் கார்முகிலை,

புணையென் றுய்யப் போகிலல்லா லில்லைகண் டீர்பொருளே. 9.1.2

 

3675

பொருள்கை யுண்டாய்ச் செல்லக் காணில் போற்றியென் றேற்றெழுவர்,

இருள்கொள் துன்பத் தின்மை காணில் என்னேஎன் பாருமில்லை,

மருள்கொள் செய்கை யசுரர் மங்க வடமது ரைப்பிறந்தாற்கு

அருள்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லைகண் டீரரணே. 9.1.3

 

3676

அரணம் ஆவர் அற்ற காலைக் கென்றென் றமைக்கப்பட்டார்,

இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றியிட் டாலுமஃஅதே,

வருணித் தென்னே வடமது ரைப்பி றந்தவன் வண்புகழே,

சரணென் றுய்யப் போகல் அல்லால் இல்லைகண் டீர்சதிரே. 9.1.4

 

3677

சதுரம் என்று தம்மைத் தாமே சம்மதித் தின்மொழியார்,

மதுர போக மதுவுற் றவரே வைகிமற் றொன்றுறுவர்,

அதிர்கொள் செய்கை யசுரர் மங்க வடமது ரைப்பிறந்தாற்கு,

எதிர்கொள் ஆளாய் உய்யல் அல்லால் இல்லைகண் டீரின்பமே. 9.1.5

 

3678

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ. உள்ளது நினையாதே,

தொல்லை யார்க ளெத்த னைவர் தோன்றிக் கழிந்தொழிந்தார்?

மல்லை மூதூர் வடம துரைப்பி றந்தவன் வண்புகழே,

சொல்லி யுய்யப் போகல் அல்லால் மற்றொன்றில் லைசுருக்கே. 9.1.6

 

3679

மற்றொன் றில்லை சுருங்கச் சொன்னோம் மாநிலத் தெவ்வுயிர்க்கும்,

சிற்ற வேண்டா சிந்திப் பேயமை யும்கண் டீர்களந்தோ.

குற்றமன் றெங்கள் பெற்றத் தாயன் வடமது ரைப்பிறந்தான்,

குற்ற மில்சீர் கற்று வைகல் வாழ்தல்கண் டீர்குணமே. 9.1.7

 

3680

வாழ்தல் கண்டீர் குணமி தந்தோ. மாயவன் அடிபரவி,

போழ்து போக வுள்ள கிற்கும் புன்மையி லாதவர்க்கு,

வாழ்து ணையா வடம துரைப்பி றந்தவன் வண்புகழே,

வீழ்து ணையாய்ப் போமி தனில்யா துமில்லை மிக்கதே. 9.1.8

 

3681

யாது மில்லை மிக்க தனிலென் றன்ற துகருதி,

காது செய்வான் கூதை செய்து கடைமுறை வாழ்கையும்போம்,

மாது கிலிங்கொ டிக்கொள் மாட வடமது ரைப்பிறந்த,

தாது சேர்தாள் கண்ணன் அல்லால் இல்லைகண் டீரிசரணே. 9.1.9

 

3682

கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரணது நிற்கவந்து,

மண்ணின் பாரம் நீக்கு தற்கே வடமது ரைப்பிறந்தான்,

திண்ண மாநும் முடைமை யுண்டேல் அவனடி சேர்ந்துய்ம்மினோ,

எண்ண வேண்டா நும்ம தாதும் அவனன்றி மற்றில்லையே. 9.1.10

 

3683

ஆதும் இல்லை மற்ற வனிலென் றதுவே துணிந்து,

தாது சேர்தோள் கண்ண னைக்குரு கூர்ச்சடகோபன்fசொன்ன,

தீதி லாத வொண்தமிழ் கள் இவை ஆயிரத்து ளிப்பத்தும்,

ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடை யார்கள்பண்டே. (2) 9.1.11

Leave a Reply