9ஆம் பத்து 3ஆம் திருவாய்மொழி
3695
ஓரா யிரமாய் உலகேழ் அளிக்கும்
பேரா யிரம்கொண் டதோர்பீ டுடையன்
காரா யினகா ளநன்மே னியினன்,
நாரா யணன்நங் கள்பிரான் அவனே. (2) 9.3.1
3696
அவனே அகல்ஞா லம்படைத் திடந்தான்,
அவனே யஃதுண் டுமிழ்ந்தான் அளந்தான்,
அவனே யவனும் அவனும் அவனும்,
அவனே மற்றெல்லா மும் அறிந் தனமே. 9.3.2
3697
அறிந்தன வேத அரும்பொருள் நூல்கள்,
அறிந்தன கொள்க அரும்பொருள் ஆதல்,
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி,
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே. 9.3.3
3698
மருந்தே நங்கள் போகம கிழ்ச்சிக்கென்று,
பெருந்தே வர்குழாங் கள்பிதற் றும்பிரான்
கருந்தேவ னெம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும்தே வலைசோ ரேல்கண்டாய் மனமே. 9.3.4
3699
மனமே. உன்னைவல் வினையேன் இரந்து,
கனமே சொல்லினேன் இதுசோ ரேல்கண்டாய்,
புனமே வியபூந் தண்டுழாய் அலங்கல்,
இனமே துமிலா னையடை வதுமே. 9.3.5
3700
அடைவ துமணி யார்மலர் மங்கைதோள்,
மிடைவ துமசு ரர்க்குவெம் போர்களே,
கடைவ தும்கட லுள் அமுது, என்மனம்
உடைவ தும் அவற் கேயொருங் காகவே. 9.3.6
3701
ஆகம் சேர்நர சிங்கம தாகி,ஓர்
ஆகங் வள்ளுகி ரால்பிளந் தானுறை,
மாக வைகுந்தம் காண்பதற்கு, என்மனம்
ஏக மெண்ணும் இராப்பக லின்றியே. 9.3.7
3702
இன்றிப் போக இருவினை யும்கெடுத்து,
ஒன்றி யாக்கை புகாமையுய் யக்கொள்வான்,
நின்ற வேங்கடம் நீணிலத் துள்ளது,
சென்று தேவர்கள் கைதொழு வார்களே. 9.3.8
3703
தொழுது மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு,
எழுது மென்னும் இதுமிகை யாதலில்,
பழுதில் தொல்புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய்,
தழுவு மாறறி யேனுன தாள்களே. 9.3.9
3704
தாள தாமரை யானுன துந்தியான்,
வாள்கொள் நீள்மழு வாளியுன் ஆகத்தான்,
ஆள ராய்த்தொழு வாரும் அமரர்கள்,
நாளும் என்புகழ் கோவுன சீலமே? 9.3.10
3705
சீல மெல்லையி லானடி மேல்,அணி
கோல நீள்குரு கூர்ச்சட கோபன்fசொல்,
மாலை யாயிரத் துள்ளிவை பத்தினின்
பாலர், வைகுந்த மேறுதல் பான்மையே. (2) 9.3.11