9ஆம் பத்து 9ஆம் திருவாய்மொழி
3761
மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ. வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,
செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ. செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,
அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான் ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. (2) 9.9.1
3762
புகலிடம் அறிகிலம் தமிய மாலோ. புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,
பகலடு மாலைவண் சாந்த மாலோ. பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,
அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,
இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான் இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்? 9.9.2
3763
இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென் இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,
துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,
தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான் தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்
பனியிருங் குழல்களும் நான்கு தோளும் பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. 9.9.3
3764
பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ. வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,
மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ. மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,
தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு துதைந்த எம் பெண்மையம் பூவி தாலோ,
ஆவியிம் பரமல்ல வகைக ளாலோ. யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. 9.9.4
3765
யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ. ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,
யாமுடை ஆயன்தன் மனம்கல் லாலோ. அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,
யாமுடை துணையென்னும் தோழி மாரும் எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,
யாமுடை ஆருயிர் காக்கு மாறென்? அவனுடை யருள்பெ றும்போது அரிதே. 9.9.5
3766
அவனுடை யருள்பெ றும்போ தரிதால் அவ்வருள் அல்லன அருளும் அல்ல,
அவனருள் பெறுமள வாவி நில்லாது அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனொடு பிரமன்வண் திரும டந்தை சேர்திரு வாகமெம் மாவி யீரும்,
எவனினிப் புகுமிடம்? எவஞ்செய் கேனோ? ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். 9.9.6
3767
ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள். ஆருயிர் அளவு அன்று இக்கூர்தண் வாடை,
காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம் கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்fக ணஃதே,
சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,
போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப் புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. 9.9.7
3768
புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ. பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,
அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம் கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,
மதுமன மல்லிகை மந்தக் கோவை வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,
அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். 9.9.8
3769
ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான். அதுமொழிந் திடையிடைத் தஞ்செய் கோலத்,
தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித் தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,
பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,
யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம. மாலையும் வந்தது மாயன் வாரான். 9.9.9
3770
மாலையும் வந்தது மாயன் வாரான் மாமணி புலம்பல் லேற ணைந்த,
கோலநன் னாகுகள் உகளு மாலோ. கொடியென குழல்களும் குழறுமாலோ,
வாலொளி வளர்முல்லை கருமு கைகள் மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,
வேலையும் விசம்பில்விண் டலறு மாலோ. என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே? 9.9.10
3771
அவனைவிட் டகன்றுயிர் ஆற்ற கில்லா அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,
அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,
அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,
அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர். அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே. (2) 9.9.11