style="text-align: center;">9ஆம் பத்து 7ஆம் திருவாய்மொழி
3739
எங்கானல் அகங்கழிவாய் இரைத்தேர்ந்திங் கினிதமரும்,
செங்கால மடநாராய். திருமூழிக் களத்துறையும்,
கொங்கார்பூந் துழாய்முடியெங் குடக்கூத்தர்க் கென்fதூதாய்,
நுங்கால்க ளென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே. (2) 9.7.1
3740
நுமரோடும் பிரியாதே நீரும்நும் சேவலுமாய்,
அமர்காதல் குருகினங்காள். அணிமூழிக் களத்துறையும்,
எமராலும் பழிப்புண்டிங் கென்?தம்மால் இழிப்புண்டு,
தமரோடங் குறைவார்க்குத் தக்கிலமே. கேளீரே. 9.7.2
3741
தக்கிலமே கேளீர்கள் தடம்புனல்வாய் இரைதேரும்,
கொக்கினங்காள். குருகினங்காள். குளிர்மூழிக் களத்துறையும்,
செக்கமலத் தலர்போலும் கண்கைகால் செங்கனிவாய்,
அக்கமலத் திலைபோலும் திருமேனி யடிகளுக்கே. 9.7.3
3742
திருமேனி யடிகளுக்கு தீவினையேன் விடுதூதாய்
திருமூழிக் களமென்னும் செழுநகர்வாய் அணிமுகில்காள்,
திருமேனி யவட்கருளீர் என்றக்கால், உம்மைத்தன்
திருமேனி யொளியகற்றித் தெளிவிசும்பு கடியுமே? 9.7.4
3743
தெளிவிசும்பு கடிதோடித் தீவளைத்து மின்னிலகும்,
ஒளிமுகில்காள். திருமூழிக் களத்துறையும் ஒண்சுடர்க்கு,
தெளிவிசும்பு திருநாடாத் தீவினையேன் மனத்துறையும்,
துளிவார்கட் குழலார்க்கென் தூதுரைத்தல் செப்பமினே. 9.7.5
3744
தூதுரைத்தல் செப்புமின்கள் தூமொழியாய் வண்டினங்காள்,
போதிரைத்து மதுநுகரும் பொழில்மூழிக் களத்துறையும்,
மாதரைத்தம் மார்வகத்தே வைத்தார்க்கென் வாய்மாற்றம்,
தூதுரைத்தல் செப்புதிரேல் சுடர்வளையும் கலையுமே. 9.7.6
3745
சுடர்வளுயும் கலையுங்கொண்டு அருவினையேன் தோள்துறந்த,
படர்புகழான் திருமூழிக் களத்துறையும் பங்கயக்கட்,
சுடர்பவள வாயனைக்கடு ஒருநாளோர் தூய்மாற்றம்,
படர்பொழில்வாய்க் குருகினங்காள். எனக்கொன்று பணியீரே. 9.7.7
3746
எனக்கொன்று பணியீர்கள் இரும்பொழில்வாய் இரைதேர்ந்து,
மனக்கின்பம் படமேவும் வண்டினங்காள். தும்பிகாள்,
கனக்கொள்திண் மதிள்புடைசூழ் திருமூழிக் களத்துறையும்,
புனல்கொள்கா யாமேனிப் பூந்துழாய் முடியார்க்கே. 9.7.8
3747
பூந்துழாய் முடியார்க்குப் பொன்னாழி கையார்க்கு,
ஏந்துநீ ரிளங்குருகே. திருமூழிக் களத்தார்க்கு,
ஏந்துபூண் முலைப்பயந்தென் இணைமலர்க்கண் ணீர்ததும்ப,
தாம்தம்மைக் கொண்டகல்தல் தகவன்றென் றுரையீரே. 9.7.9
3748
தகவன்றென் றுரையீர்கள் தடம்புனல்வாய் இரைதேர்ந்து,
மிகவின்பம் படமேவும் மென்னடைய அன்னங்காள்,
மிகமேனி மெலிவெய்தி மேகலையும் ஈடழிந்து,என்
அகமேனி யொழியாமே திருமூழிக் களத்தார்க்கே. 9.7.10
3749
ஒழிவின்றித் திருமூழிக் களத்துறையும் ஒண்சுடரை,
ஒழிவில்லா அணிமழலைக் கிளிமொழியாள் அலற்றியசொல்,
வழுவில்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துரைத்த,
அழிவில்லா ஆயிரத்திப் பத்தும்நோய் அறுக்குமே. (2) 9.7.11


