திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

9ஆம் பத்து 10ஆம் திருவாய்மொழி

3772

மாலைநண் ணித்தொழு தெழுமினோ வினைகெட,

காலைமா லைகம லமலர் இட்டுநீர்,

வேலைமோ தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரத்து,

ஆலின்மே லாலமர்ந் தானடி யிணைகளே. (2) 9.10.1

 

3773

கள்ளவி ழும்மலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,

நள்ளிசே ரும்வயல் சூழ்கிடங் கின்புடை,

வெள்ளீயேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்

உள்ளி,நா ளும்தொழு தெழுமினோ தொண்டரே. 9.10.2

 

3774

தொண்டர்.நுந் தந்துயர் போகநீர் ஏகமாய்,

விண்டுவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,

வண்டுபா டும்பொழில் சூழ்திருக் கண்புரத்

தண்டவா ணன்,அம ரர்பெரு மானையே. 9.10.3

 

3775

மானைநோக் கிமடப் பின்னைதன் கேள்வனை,

தேனைவா டாமலர் இட்டுநீ ரிறைஞ்சுமின்,

வானையுந் தும்மதிள் சூழ்திருக் கண்ணபுரம்,

தான் நயந் தபெரு மான் சர ணாகுமே. 9.10.4

 

3776

சரணமா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

மரணமா னால்வைகுந் தம்கொடுக் கும்பிரான்,

அரணமைந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரம்,

தரணியா ளன்,தன தன்பர்க்கன் பாகுமே. 9.10.5

 

3777

அன்பனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

செம்பொனா கத்தவு ணனுடல் கீண்டவன்,

நன்பொனேய்ந் தமதிள் சூழ்திருக் கண்ணபுரத்

தன்பன்,நா ளும்தன் மெய்யர்க்கு மெய்யனே. 9.10.6

 

3778

மெய்யனா கும்விரும் பித்தொழு வார்க்கெலாம்,

பொய்யனா கும்புற மேதொழு வார்க்கெலாம்,

செய்யில்வா ளையுக ளும்திருக் கண்ணபுரத்து

ஐயன்,ஆகத்தணைப் பார்கட் கணியனே. 9.10.7

 

3779

அணியனா கும்தன தாளடைந் தார்க்கெலாம்,

பிணியும் சாரா பிறவி கெடுத்தாளும்,

மணிபொனேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்

பணிமின்,நா ளும்பர மேட்டிதன் பாதமே. 9.10.8

 

3780

பாதநா ளும்பணி யத்தணி யும்பிணி,

ஏதம்சா ராஎனக் கேலினி யென்குறை?,

வேதநா வர்விரும் பும்திருக் கணபுரத்து

ஆதியா னை,அடைந் தார்க்கல்லல் இல்லையே. 9.10.9

 

3781

இல்லையல் லலெனக் கேலினி யென்குறை?,

அல்லிமா தரம ரும்திரு மார்பினன்,

கல்லிலேய்ந் தமதிள் சூழ்திருக் கணபுரம்

சொல்ல,நா ளும்துயர் பாடுசா ராவே. 9.10.10

 

3782

பாடுசா ராவினை பற்றற வேண்டுவீர்,

மாடநீ டுகுரு கூர்ச்சட கோபஞ்சொல்,

பாடலா னதமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்

பாடியா டிப்,பணி மினவன் தாள்களே. (2) 9.10.11

 

Leave a Reply