திருவாய்மொழி பத்தாம் பத்து

நம்மாழ்வார்

திருவாய் மொழி பத்தாம் பத்து

10ஆம் பத்து 1ஆம் திருவாய்மொழி

3783

தாள தாமரைத் தடமணி வயல் திரு மோகூர்

நாளும் மேவிநன் கமர்ந்துநின் றசுரரைத் தகர்க்கும்

தோளும் நான்குடைச் சுரிகுழல் கமலக்கண் கனிவாய்

காள மேகத்தை யன் றிமற் றொன் றிலம் கதியே. (2) 10.1.1

 

3784

இலங்கதி மற்றொன் றெம்மைக்கும் ஈன்தண் துழாயின்

அலங்கலங் கண்ணி ஆயிரம் பேருடை அம்மான்

நலங்கொள் நான்மறை வாணர்கள் வாழ்திரு மோகூர்

நலங்க ழலவன் அடிநிழல் தடமன்றி யாமே. 10.1.2

 

3785

அன்றி யாமொரு புகலிடம் இலம் என்றென் றலற்றி

நின்று நான்முகன் அரனொடு தேவர்கள் நாட

வென்றிம் மூவுல களித்துழல் வான்திரு மோகூர்

நன்று நாமினி நணுகுதும் நமதிடர் கெடவே. 10.1.3

 

3786

இடர்கெட எம்மைப் போந்தளி யாய் என்றென் றேத்தி

சுடர்கொள் சோதியைத் தேவரும் முனிவரும் தொடர

படர்கொள் பாம்பணைப் பள்ளிகொள் வான்திரு மோகூர்

இடர்கெ டவடி பரவுதும் தொண்டீர். வம்மினே. 10.1.4

 

3787

தொண்டீர். வம்மின்நம் சுடரொளி யொருதனி முதல்வன்

அண்ட மூவுல களந்தவன் அணிதிரு மோகூர்

எண்டி சையுமீன் கரும்பொடு பொருஞ்செந்நெல் விளைய

கொண்ட கோயிலை வலஞ்செய்திங் காடுதும் கூத்தே. 10.1.5

 

3888

கூத்தன் கோவலன் குதற்றுவல் லசுரர்கள் கூற்றம்

ஏத்தும் நங்கடகும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்

வாய்த்த தண்பணை வளவயல் சூழ்திரு மோகூர்

ஆத்தன் தாமரை யடியன்றி மற்றிலம் அரணே. 10.1.6

 

3789

மற்றி லமரண் வான்பெரும் பாழ்தனி முதலா

சுற்று நீர்படைத் ததன்வழித் தொன்முனி முதலா

முற்றும் தேவரோ டுலகுசெய் வான்திரு மோகூர்

சுற்றி நாம்வலஞ் செய்யநம் துயர்கெடும் கடிதெ. 10.1.7

 

3790

துயர்கெ டும்கடி தடைந்துவன் தடியவர் தொழுமின்

உயர்கொள் சோலையொண் தடமணி யொளிதிரு மோகூர்

பெயர்கள் ஆயிர முடையவல் லரக்கர்புக் கழுந்த

தயரதன் பெற்ற மரதக மணித்தடத் தினையே. 10.1.8

 

3791

மணித்த டத்தடி மலர்க்கண்கள் பவளச் செவ்வாய்

அணிககொள் நால்தடந் தோள்தெய்வம் அசுரரை யென்றும்

துணிக்கும் வல்லரட் டனுறை பொழில்திரு மோகூர்

நணித்து நம்முடை நல்லரண் நாமடைந் தனமே. 10.1.9

 

3792

நாம டைந்தநல் லரண்தமக் கென்றுநல் லமரர்

தீமை செய்யும்வல் லசுரரை யஞ்சிச்சென் றடைந்தால்

காம ரூபம்கொண் டெழுந்தளிப் பான்திரு மோகூர்

நாம மேநவின் றெண்ணுமின் ஏத்துமின் நமர்காள். 10.1.10.

 

3793

ஏத்து மின்நமர் காள் என்று தான்குட மாடு

கூத்தனை குரு கூர்ச்சட கோபன்குற் றேவல்

வாய்த்த ஆயிரத் துள்ளிவை வண்திரு மோகூர்க்கு

ஈத்த பத்திவை யேத்தவல் லார்க்கிடர் கெடுமே. (2) 10.1.11

Leave a Reply