திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

9ஆம் பத்து 8ஆம் திருவாய்மொழி

3750

அறுக்கும் வினையா யின ஆகத்தவனை,

நிறுத்தம் மனத்தொன் றியசிந் தையினார்க்கு,

வெறித்தண் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,

குறுக்கும் வகையுண்டு கொலொகொடி யேற்கே? (2) 9.8.1

 

3751

கொடியே ரிடைக்கோ கனகத் தவள்கேள்வன்,

வடிவேல் தடங்கண் மடப்பின்னை மணாளன்,

நெடியா னுறைசோ லைகள்சூழ் திருநாவாய்,

அடியேன் அணுகப் பெறு நாள் எவைகொலொ. 9.8.2

 

3752

எவைகொல் அணுகப் பெறுநாள்? என் றெப்போதும்,

கவையில் மனமின்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்,

நவையில் திருநாரணன்fசேர் திருநாவாய்,

அவையுள் புகலாவ தோர்நாள் அறியேனே. 9.8.3

 

3753

நாளெல் அறியேன் எனக்குள் ளன,நானும்

மீளா அடிமைப் பணிசெய்யப் புகுந்தேன்,

நீளார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,

வாளேய் தடங்கண் மடப்பின்னை மணாளா. 9.8.4

 

3754

மணாளன் மலர்மங் கைக்கும்மண் மடந்தைக்கும்,

கண்ணாளன் உலகத் துயிர்தேவர் கட்கெல்லாம்,

விண்ணாளன் விரும்பி யுறையும் திருநாவாய்,

கண்ணாரக் களிக்கின்ற திங்கென்று கொல்கண்டே? 9.8.5

 

3755

கண்டே களிக்கின்ற திங்கென்று கொல்கண்கள்,

தொண்டே யுனக்கா யொழிந்தான் துரிசின்றி,

வண்டார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,

கொண்டே யுறைகின்ற எங்கோ வலர்கோவே. 9.8.6

 

3756

கோவா கியமா வலியை நிலங்கொண்டாய்,

தேவா சுரம்செற் றவனே. திருமாலே,

நாவா யுறைகின்ற என்நா ரணநம்பீ,

ஆவா அடியா னிவன் என் றருளாயே. 9.8.7

 

3757

அருளா தொழிவாய் அருள்செய்து, அடியேனைப்

பொருளாக்கி யுன்பொன் னடிக்கீழ்ப் புகவைப்பாய்,

மருளே யின்றியுன்னை என்னெஞ்சத் திருத்தும்,

தெருளே தருதென் திருநாவாய் என்தேவே. 9.8.8

 

3758

தேவர் முனிவர்க் கென்றும்காண் டற்கரியன்,

மூவர் முதல்வன் ஒருமூ வுலகாளி,

தேவன் விரும்பி யுறையும் திருநாவாய்,

யாவர் அணுகப் பெறுவார் இனியந்தோ. 9.8.9

 

3759

அந்தோ. அணுகப் பெறுநாளென் றெப்போதும்,

சிந்தை கலங்கித் திருமாலென் றழைப்பன்,

கொந்தார் மலர்சோ லைகள்சுழ் திருநாவாய்,

வந்தே யுறைகின்ற எம்மா மணிவண்ணா. 9.8.10

 

3760

வண்ணம் மணிமாட நன்னாவாய் உள்ளனை,

திண்ணம் மதிள்தென் குருகூர்ச் சடகோபன்,

பண்ணர் தமிழா யிரத்திப்பத் தும்வல்லார்,

மண்ணாண்டு மணம்கமழ் வர்மல்லிகையே. (2) 9.8.11

Leave a Reply