திருவாய்மொழி எட்டாம் பத்து

நம்மாழ்வார்

திருவாய்மொழி எட்டாம் பத்து

8ஆம் பத்து 1ஆம் திருவாய்மொழி

3563

தேவிமா ராவார் திருமகள் பூமி யேவமற் றமரராட் செய்வார்,

மேவிய வுலகம் மூன்றவை யாட்சி வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,

பாவியேன் தன்னை யடுகின்ற கமலக் கண்ணதோர் பவளவாய் மணியே,

ஆவியே. அமுதே. அலைகடல் கடைந்த அப்பனே. காணுமா றருளாய். 8.1.1

 

3564

காணுமா றருளாய் என்றென்றே கலங்கிக் கண்ணநீர் அலமர வினையேன்

பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே பிதற்றுமா றருளெனக் கந்தோ,

காணுமா றருளாய் காகுத்தா. கண்ணா. தொண்டனேன் கற்பகக் கனியே,

பேணுவார் அமுதே. பெரியதண் புனல்சூழ் பெருநிலம் எடுத்தபே ராளா. 8.1.2

 

3565

எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன் இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்

கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே. அடியனேன் பெரியவம் மானே,

கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக் கையுகி ராண்டவெங் கடலே,

அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய் எங்ஙனம் தேறுவர் உமரே? 8.1.3

 

3566

உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம் ஆகியுன் தனக்கன்ப ரானார்

அவர்,உகந் தமர்ந்த செய்கையுன் மாயை அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,

அமரது பண்ணி அகலிடம் புடைசூழ் அடுபடை அவித்தாம் மானே,

அமரர்தம் அமுதே. அசுரர்கள் நஞ்சே. என்னுடை ஆருயி ரேயோ. 8.1.4

 

3567

ஆருயி ரேயோ. அகலிடம் முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த, பேருயி ரேயோ.

பெரியநீர் படைத்தங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த,

சீரிய ரேயோ.மனிசர்க்குத் தேவர் போலத்தே வர்க்கும்தே வாவோ,

ஓருயி ரேயோ. உலகங்கட் கெல்லாம் உன்னைநான் எங்குவந் துறுகோ? 8.1.5

 

3568

எங்குவந் துறுகோ என்னையாள் வானே. ஏழுல கங்களும் நீயே,

அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே அவற்றவை கருமமும் நீயே,

பொங்கிய புறம்பால் பொருளுள வேலும் அவையுமோ நீயின்னே யானால்

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே வான்புலம் இறந்ததும் நீயே. 8.1.6

 

3569

இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே நிகழ்வதோ நீயின்னே யானால்,

சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென் றறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,

கறந்தபால் நெய்யே. நெய்யின் சுவையே. கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே. சுவையது பயனே. பின்னைதோள் மணந்தபே ராயா. 8.1.7

3570

மணந்தபே ராயா. மாயத்தால் முழுதும் வல்வினை யேனையீர் கின்ற,

குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,

பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய். பாற்கடல் சேர்ப்பா,

வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே. 8.1.8

3571

யானும்நீ தானே யாவதோ மெய்யே அருநர கவையும் நீயானால்,

வானுய ரின்பம் எய்திலென் மற்றை நரகமே யெய்திலென்? எனிலும்,

யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும் அஞ்சுவன் நரகம்நா னடைதல்,

வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய். அருளுநின் தாள்களை யெனக்கே. 8.1.9

 

3572

தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத் தந்தபே ருதவிக்கைம் மாறா,

தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை அறவிலை செய்தனன் சோதீ,

தோள்களா யிரத்தாய். முடிகளா யிரத்தாய். துணைமலர்க் கண்களா யிரத்தாய்,

தாள்களா யிரத்தாய். பேர்களா யிரத்தாய். தமியனேன் பெரிய அப்பனே. 8.1.10

 

3573

பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை உருத்திரன் அப்பனை, முனிவர்க்

குரிய அப்பனை அமரர் அப்பனை உலகுக்கோர் தனியப்பன் தன்னை,

பெரியவண் குருகூர் வண்சட கோபன் பேணின ஆயிரத் துள்ளும்,

உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால் உய்யலாம் தொண்டீர்நங் கட்கே. (2) 8.1.11

Leave a Reply