இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…
தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ள ஆழ்வார் திருநகரியில் சுவாமி நம்மாழ்வார் வைகாசி மாதம் விசாக நட்சத்திர நாளில் அவதரித்தார்.
ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வார் தாமிரபரணித் தண்ணீரைக் காய்ச்சியபோது விக்ரகமாக ஆழ்வார் அவதரித்தது மாசி மாதம் விசாக நட்சத்திரநாளில்.தற்போது ஆழ்வார்திருநகரியில் மாசி உற்சவம் துவங்கி நடந்து வருகிறது.இன்று இரவு கருட சேவை கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருக்குருகூர் எனப்படும் ஆழ்வார் திருநகரியில், காரி மன்னனுக்கும் – உடையநங்கைக்கும் மகனாக, கலியுகம் தொடங்கி சில நாட்களிலே நம்மாழ்வார் பிறந்தார். இப்பூவுலகில் 32 வருடங்கள் வாழ்ந்தார், இவ்வுலக வாழ்க்கையில் பற்றில்லாமல் எம்பெருமானையே எப்பொழுதும் தியானித்தபடி, ஆழ்வார்திருநகரியில் ஒரு புளியமரத்தடியிலேயே வாழ்ந்தார்.
எப்பொழுதெல்லாம் நாம் குருகூர் என்ற வார்த்தையைக் கேட்கிறோமோ, எப்பொழுதெல்லாம் குருகூர் என்று உச்சரிக்கிறோமோ, அப்பொழுதெல்லாம் தென்திசையில் உள்ள ஆழ்வார்திருநகரியை நோக்கி வணங்க வேண்டும் என்பது நமது ஆசார்யர்களின் வாக்கு.
சுவாமி நம்மாழ்வாரை வைஷ்ணவ குல அதிபதி என்றும், வைஷ்ணவர்களுக்கு முதல்வர் என்றும் சுவாமி ஆளவந்தார் போற்றுகிறார். தன்னுடைய ஸ்தோத்ர ரத்னம் என்ற நூலில் 5-வது ஸ்லோகத்தில் தனக்கும், தன்னுடைய சீடர்களுக்கும், குலத்தவருக்கும் தந்தை, தாய், பிள்ளை, செல்வம் மற்றும் எல்லாருக்கும் வகுளாபரணனே (நம்மாழ்வார்) முதல்வர் என்று ஆளவந்தார் வணங்குகிறார்.
சுவாமி நம்மாழ்வார் அவதார விழா ஆண்டுதோறும் இரண்டு முறை 13 நாள் திருவிழாவாக ஆழ்வார்திருநகரியில் கொண்டாடப்படுகிறது.
தற்போது மாசி அவதார உற்சவம் கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 5- ம் தேதி 5-ம் திருநாள். இரவில் சுவாமி பொலிந்து நின்ற பிரான் கருட வாகனத்திலும், சுவாமி நம்மாழ்வார் ஹம்ச வாகனத்திலும் எழுந்தருள்கின்றனர். 9-ம் தேதி திருத்தேர், 10 மற்றும் 11-ம் தேதிகளில் தெப்ப உற்சவம், 12-ம் தேதி விசாக நட்சத்திரத்தன்று தாமிரபரணியில் தீர்த்தவாரி, 13-ம் தேதி இரட்டைத் திருப்பதிக்கு நம்மாழ்வார் எழுந்தருளல் நடைபெறும்.