திருப்பல்லாண்டு

பெரியாழ்வார்

திருப்பல்லாண்டு


பெரியாழ்வார் திருமொழிகளின் தனியன்கள்
நாதமுனிகள் அருளிச் செய்தது


குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக |
ச்வசுரமமரவந்த்யம் ரங்கநாதச்ய சாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி ||

ஸ்ரீவிஷ்ணுசித்தராகிய பெரியாழ்வார், குருவினைச் சார்ந்து பயின்ற கல்விப் பயன் இல்லாதவர். இருந்தாலும், மதுரை பாண்டிய மன்னன் வல்லபதேவன் ஏற்படுத்திய பொற்கிழியைப் பெற விரும்பினார். இறைவனின் அருளால் வேத வாக்கியங்களை எடுத்துரைத்து, நாராயண பரத்துவத்தை நிலை நிறுத்தினார். அரங்கநாதனுக்கு தன் இன்னுயிர் மகளைத் தாரை வார்த்து மாமனார் ஆனார். அவர் அமரர்களால் வணங்கப் பெறுபவர். அந்தணர் குலத் திலகமான அந்த விஷ்ணுசித்தரை அடியேன் வணங்குகிறேன்.

 

பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை
இருவிகற்ப நேரிசை வெண்பா


மின்னார் தடமதிள்சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் – முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம், கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து.

ஒளிவீசும் மதிள்கள் சூழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் என்று ஒருமுறை சொல்பவர்களுடைய திருவடித் தாமரைகளை நம் தலை மேலே சூடுவோம். முன்பொருநாள் பாண்டியன் பரிசிலாக வைத்த பொற்கிழியை அறுத்து எடுத்துக் கொண்ட பெரியாழ்வாரின் திருநாமம் சொல்லி மகிழ்வோம். வில்லிபுத்தூர் என்றும் பெரியாழ்வார் என்றும் திருநாமங்களைக் கூறூவதால் நாம் கீழான நரக வாசல் புகும் பாவத்தை அறுத்து விட்டோம். நெஞ்சமே உன்னால் யாம் இப்படியோர் பயன் பெற்றோம்.


பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று.

பரத்துவத்தை நிறுவி நம்மைத் தெளிவிக்க பட்டர்பிரான் வந்தான் என்று பாண்டிய மன்னன் புகழ்ந்து கொண்டாடினான். அரசவையில் பலரும் சங்குகளை முழங்கி கூட்டமாக வந்து வரவேற்றனர். அந்தணர் தலைவரான பெரியாழ்வார், தமக்கு வேண்டிய வேத வாக்கியங்களை முழங்கி ஸ்ரீமந் நாராயணனே முழு முதற் தத்துவம் என்று நிறுவினார். அதனால் பரிசிலாகத் தொங்கிய பொற்கிழியை அறுத்து எடுத்துக் கொண்டார். இத்தகு பெருமை படைத்த பெரியாழ்வாரின் பாதங்களே நமக்குப் புகலிடம்!


பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
பெரியாழ்வார் அருளிச் செய்த

திருப்பல்லாண்டு

காப்பு
குறள்வெண்செந்துறை

1:

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன்
செவ்வடி செவ்வி திருக்காப்பு (2) 

முஷ்டிகன் சாணூரன் ஆகிய மல்லர்களைக் கொன்று உனது திருத்தோள் பலத்தை நிறுவியவனே! பகவானே உனக்கு மங்களம் உண்டாகட்டும்! உன் சிவந்த திருவடியின் அழகுக்கு பல்லாண்டு! மனிதக் கணக்கின்படியான பல்லாண்டுகளும் பல பிரம்மாக்களின் பல நூறாயிரம் வருடங்களும் நீ குறைவில்லாமல் வாழ்வாய்!


அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்


2:
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே. (2)

அடியோங்களுக்கும் உனக்கும் உள்ள பிரிவில்லாத தொடர்பு, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கட்டும். உன் வலது திருமார்பில் வாழுகின்ற மகாலட்சுமித் தாய், உன்னுடன் நித்தியமாகக் கூடியிருக்கட்டும். உன் வலது கரத்தினில் ஒளி வீசி விளங்கும் சக்கரம் பல்லாண்டுகள் நிலைத்திருக்கட்டும். போரினில் பகைவர் அஞ்ச முழங்கும் பாஞ்ச சன்னியச் சங்கும் பல்லாண்டு நிலைத்திருக்கட்டும் பகவானே!


3 :
வாழாட்பட்டு நின்றீர் உள்ளீரேல் வந்து மண்ணும் மணமும் கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட்காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ் இலங்கை
பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

கைங்கரியமே உறுதிப் பொருள் என்னும் நோக்கம் உடையவர்கள் என்றால், நீங்கள் திருமுளைத் திருநாளில் புழுதி மண் சுமக்க வாருங்கள். சோற்று வாழ்வுக்காக பிறருக்கு அடிமைப் பட்டவர்கள் என்றால் உங்களை எங்கள் திருக்கூட்டத்தில் நாங்கள் சேர அனுமதிக்க மாட்டோம். நாங்கள் மூவேழு தலைமுறைகளிலும் எவ்விதக் குற்றமும் இல்லாது உள்ளோம். இலங்கையையும் அங்கே இருந்த அரக்கரையும் அழித்த பிரானுக்கு இன்று நாங்கள் திருப்பல்லாண்டு பாடுகிறோம்

4:
ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து
கூடுமனம் உடையீர்கள் வரம்பொழி வந்து ஒல்லைக் கூடுமினோ
நாடும் நகரமும் நன்கறிய நமோநாராயணாய வென்று
பாடுமனமுடைப் பத்தர் உள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே.

சுடுகாட்டுக்கு உங்கள் உடம்புகளைச் சேர்ப்பதற்கு முன்னமே எங்களுடன் வந்து சேர்ந்து விடுங்கள். கைமேல் எளிதாகக் கிட்டும் இன்ப எல்லையை விட்டுவிட்டு, விரைவாக எங்களுடன் வந்து கூடுங்கள். நாட்டு மக்களும் நகர அறிஞர்களும் நன்றாக அறியும்படி, எட்டெழுத்து மந்திரமாகிய ஓம் நமோ நாராயணாய என்ற அந்த மந்திரத்தை வாய் விட்டு நன்றாகப் பாடுவீர்கள். அப்படி என்றால் நீங்கள் எங்களுடன் கலந்து எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடுங்கள்!

5:
அண்டக் குலத்துக்கு அதிபதியாகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடீகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண் டென்மினே.

உலகங்களின் கூட்டங்களுக்குத் தலைவனாக, அவற்றை நியமிக்கும் பகவான், புதர்கள் போல் நெருங்கிய அசுரர், அரக்கர்களை வேரோடு அழித்தான். இந்திரியங்களுக்குத்  தலைவனாய் இருக்கும் இருடீகேசனுக்கு அடிமை செய்யும் குலத்திலே நீங்கள் இருப்பீர்கள் என்றால் எங்கள் கூட்டத்திலே வந்து சேருங்கள். இறைவன் திருவடிகளைத் தொழுது வாயார அவன் ஆயிரம் திருநாமங்களையும் கூறுங்கள். பயனை எதிர்பார்த்துச் செய்யும் பழைய வாழ்க்கையை விட்டு நீங்கி, நீங்கள், குலப் பெருமையை விட்டுவிட்டு இறைவனுக்கு பல்லாண்டு பாடுங்கள்.

6:
எந்தை தந்தை தந்தைதந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதிலரியுருவாகி அரியை யழித்தவனை
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டென்று பாடுதுமே.

நாங்களும் எங்கள் தகப்பன்மார்களும் பாட்டனார்களும் முப்பாட்டனார்களும் அவர்கள் தந்தைகளும் பாட்டனார்களும் என்று இப்படி ஏழு தலைமுறைகள் தொடங்கி முறையாக அடிமை செய்கிறோம். உங்களுடன் சேர்ந்து திருவோணத் திருவிழாவில் அவனுக்கு பல்லாண்டு பாடுவோம். அந்தி நேரத்தில் நரசிம்ம வடிவம் எடுத்துக் கொண்டு இரணியனை அழித்தவனுக்கு, களைப்புத் தீரும்படியாக மனம் குளிர அவனை மங்களாசாசனம் செய்து பல்லாண்டு பாடுவோம்.

7:
தீயிற்பொலிகின்ற செஞ்சுடராழி திகழ் திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந்தோளும் பொழி குருதி
பாய சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.

நெருப்பு, சூரியன் இவற்றைவிடவும் சிவந்து விளங்கும் திருச் சக்கரப் பொறியாலே நாங்கள் அடையாளம் இட்டுக் கொண்டுள்ளோம். தலைமுறை தலைமுறையாக திருமால் அடிமை செய்கின்றோம். வஞ்சனையாகப் போர் செய்த பாணாசுரனின் ஆயிரம் தோள்களை வெட்டி, ரத்தத்தில் வீழ்த்திய பெருமை உடையவன் திருவாழி ஆழ்வான். சக்கரத்தாழ்வான். அத்தகைய பெருமை மிகு சக்கரத்தை ஏந்திய வல்லவனுக்குப் பல்லாண்டு பாடுவோம்.

8:
நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப் பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே.

இறைவன் படங்களை உடைய பாம்புக்குப் பகைவனான கருடனைத் தன் கொடியாகக் கொண்டவன். அவன் அடியேனுக்கு நெய்ச் சோற்றையும் பிரிவற்ற தொண்டு செய்யும் வாய்ப்பையும் வெற்றிலைப் பாக்கையும், கழுத்தாரமும் காதுக்குக் குண்டலமும், உடம்பிலே பூசிக் கொள்ள சந்தனத்தையும் தந்து ஆட்கொண்டான். அடியேனை, தூய ஸத்வ குணம் உடையவனாய் மாற்றி விட்டான். அந்த அருளாளனுக்கு நான் திருப்பல்லாண்டு பாடுகிறேன்.

9:

உடுத்துக் களைந்த நின்பீதகவாடை உடுத்துக் கலத்ததுண்டு
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக்கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந் நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. 

இறைவனே… நீ திரு அரையில் உடுத்திக் களைந்த பீதாம்பரத்தை நாங்கள் உடுத்திக் கொள்வோம். நீ உண்ட பாத்திரத்தில் மீதம் உள்ளதை உண்போம். நீ சூடிக் களைந்த திருத்துழாய் மாலைகளை நாங்கள் பிரசாதமாக சூடிக் கொள்வோம். தொண்டர்களான நாங்கள், திருவோணத்  திருவிழாவில் பல திசைகளிலும் ஏவப்பட்ட தொண்டுகளை நன்றாகச் செய்வோம். படங்களை உடைய ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டவனே உனக்குப் பல்லாண்டு பாடுவோம்.


10:
எந்நாள் எம்பெருமான் உன்தனக்கு அடியோம் என்றெழுத்துப்பட்ட
அந்நாளே அடியோங்கள் அடிக்குடில் வீடுபெற்று உய்ந்ததுகாண்
செந்நாள்தோற்றித் திருமதுரையுள் சிலைகுனித்து ஐந்தலைய
பைந்நாகத் தலைபாய்ந்தவனே உன்னைப் பல்லாண்டு கூறுதுமே. 

அடியோங்கள் தலைவனே… உனக்கு அடிமைப் பட்டோலை எழுதிய அந்த நாளிலே, எங்கள் இல்லத்தில் யாவரும் அடிமைப் பட்டு உய்வு அடைந்தார்கள். கைவல்யத்தில் இருந்ஹ்டு மீண்டு கைங்கரியத்தையே உறுதிப் பொருளாகப் பெற்றார்கள். திருவோண நன்னாளில் அவதாரம் செய்த நீ, வடமதுரை சென்று வில்லை முறித்தனயே! ஐந்து தலைகளைப் பெற்ற காளிங்க நாகத்தின் தலை மீது ஆடினயே! உனக்கு யாம் திருப்பல்லாண்டு பாடுகிறோம்.


11:
அல்வழக்கு ஒன்றுமில்லா அணிகோட்டியர் கோன் அபிமான துங்கன்
செல்வனைப் போலத் திருமாலே நானும் உனக்குப் பழவடியேன்
நல்வகையால் நமோ நாராயணாவென்று நாமம் பலபரவி
பல்வகையாலும் பவித்திரனே உன்னைப் பல்லாண்டு கூறுவனே. (2)

திருமகள் கேள்வனே! திருக்கோட்டியூருக்கு தலைவராக விளங்கும் செல்வன் எனும் செல்வநம்பி தவறான வழக்குகள் எதுவும் இல்லாதவர். பகவான் அடிமைத் திறத்தில் விரும்பம் கொண்டவர். அவரைப் போலவே அடியேனும் பழங்காலம் தொட்டு உன் அடியவன் ஆவேன். பலவகைகளிலும் தூய்மையானவனே! அடியேன் நமோ நாராயணாய என்னும் திருமந்திரத்துடன் உன் பல திருநாமங்களையும் உச்சரித்து பல்லாண்டு பாடுவேன்.


12:
பல்லாண்டென்று பவித்திரனைப் பரமேட்டியை சார்ங்க மென்னும்
வில்லாண்டான் தன்னை வில்லிபுத்தூர் விட்டுசித்தன் விரும்பியசொல்
நல்லாண்டென்று நவின்றுரைப்பார் நமோ நாராயணாயவென்று
பல்லாண்டும் பரமாத்மனை சூழ்ந்திருந்து ஏத்துவர் பல்லாண்டே. (2)

எம்பெருமான் தூய இயல்பினனாய் ஸ்ரீவைகுண்டத்திலே எழுந்தருளி உள்ளான். சார்ங்கம் என்னும் வில்லை ஆளும் வன்மை உடையவன். ஸ்ரீவில்லிபுத்தூரிலே தோன்றிய விஷ்ணுசித்தர் ஆசையுடன் இந்தத் திருப்பல்லாண்டைப் பாடினார். இதனால் மகிழ்பவர்கள், நமோ நாராயணாய என்னும் திருமந்திரத்தைக் கூறித் துதிப்பவர்கள், பரமாத்மாவான ஸ்ரீமந் நாராயணனைக் கணக்கற்ற பல்லாண்டுகள் சுற்றியிருந்து திருப்பல்லாண்டு பாடுவார்கள்.

 

பெரியாழ்வார் திருவடிகளே சரணம்!

Leave a Reply