ஏழாம் திருமொழி – ஐயபுழுதி
(திருமாலினிடத்து ஈடுபட்ட தலைமகள் இளமை கண்டு
நற்றாய் இரங்கும் பாசுரம்)
அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
286:
ஐயபுழுதிஉடம்பளைந்து இவள்பேச்சுமலந்தலையாய்
செய்யநூலின்சிற்றாடை செப்பனடுக்கவும்வல்லளல்லள்
கையினில்சிறுதூதையோடு இவள்முற்றில்பிரிந்துமிலள்
பையரவணைப்பள்ளியானோடு கைவைத்துஇவள்வருமே. (2) 1.
287:
வாயில்பல்லும்எழுந்தில மயிரும்முடிகூடிற்றில
சாய்விலாதகுறுந்தலைச் சிலபிள்ளைகளோடிணங்கி
தீயிணக்கிணங்காடிவந்து இவள்தன்னன்னசெம்மைசொல்லி
மாயன்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 2.
288:
பொங்குவெண்மணல்கொண்டு சிற்றிலும்முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம்தண்டுவாள் வில்லுமல்லதுஇழைக்கலுறால்
கொங்கைஇன்னம்குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகிஎன்னுள்ளம் நாள்தொறும்தட்டுளுப்பாகின்றதே. 3.
289:
ஏழைபேதைஓர்பாலகன்வந்து என்பெண்மகளையெள்கி
தோழிமார்பலர்கொண்டுபோய்ச்செய்த சூழ்ச்சியையார்க்குரைக்கேன்?
ஆழியானென்னுமாழமோழையில் பாய்ச்சிஅகப்படுத்தி
மூழையுப்பறியாததென்னும் மூதுரையுமிலளே. 4.
290:
நாடும்ஊரும்அறியவேபோய் நல்லதுழாயலங்கள்
சூடி நாரணன்போமிடமெல்லாம் சோதித்துழிதருகின்றாள்
கேடுவேண்டுகின்றார்பலருளர் கேசவனோடுஇவளை
பாடுகாவலிடுமினென்றென்று பார்தடுமாறினதே. 5.
291:
பட்டம்கட்டிப்பொற்றோடுபெய்து இவள்பாடகமும்சிலம்பும்
இட்டமாகவளர்த்தெடுத்தேனுக்கு என்னோடுஇருக்கலுறாள்
பொட்டப்போய்ப்புறப்பட்டுநின்று இவள்பூவைப்பூவண்ணாவென்னும்
வட்டவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 6.
292:
பேசவும் தரியாதபெண்மையின் பேதையேன்பேதைஇவள்
கூசமின்றிநின்றார்கள்தம்மெதிர் கோல்கழிந்தான்மூழையாய்
கேசவாவென்றும்கேடிலீயென்றும் கிஞ்சுகவாய்மொழியாள்
வாசவார்குழல்மங்கைமீர். இவள்மாலுறுகின்றாளே. 7.
293:
காறைபூணும்கண்ணாடிகாணும் தன்கையில்வளைகுலுக்கும்
கூறையுடுக்கும்அயர்க்கும் தங்கொவ்வைச்செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்தேவன்திறம்பிதற்றும்
மாறில்மாமணிவண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே. 8.
294:
கைத்தலத்துள்ளமாடழியக் கண்ணாலங்கள்செய்து இவளை
வைத்துவைத்துக்கொண்டுஎன்னவாணியம்? நம்மைவடுப்படுத்தும்
செய்த்தலையெழுநாற்றுப்போல் அவன்செய்வனசெய்துகொள்ள
மைத்தடமுகில்வண்ணன்பக்கல் வளரவிடுமின்களே. 9.
295:
பெருப்பெருத்தகண்ணாலங்கள்செய்து பேணிநம்மில்லத்துள்ளே
இருத்துவானெண்ணிநாமிருக்க இவளும்ஒன்றெண்ணுகின்றாள்
மருத்துவப்பதம்நீங்கினாளென்னும்வார்த்தை படுவதன்முன்
ஒருப்படுத்திடுமின்இவளை உலகளந்தானிடைக்கே. 10.
296:
ஞாலமுற்றும்உண்டுஆலிலைத்துயில் நாராயணனுக்கு இவள்
மாலதாகிமகிழ்ந்தனளென்று தாயுரைசெய்ததனை
கோலமார்பொழில்சூழ்புதுவையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலைபத்தும்வல்லவர்கட்கு இல்லைவருதுயரே. (2) 11.