பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

 

பத்தாம் திருமொழி – நெறிந்தகருங்குழல்

(இலங்கைக்கு தூதுசென்ற திருவடி பிராட்டியைக் கண்டு,

சக்கரவர்த்தித்திருமகன் கூறிய சில அடையாளங்களைக்

கூறிக் கணையாழிகொடுத்துக் களிப்பித்தல்)

கலிவிருத்தம்

318:

நெறிந்தகருங்குழல்மடவாய். நின்னடியேன்விண்ணப்பம்

செறிந்தமணிமுடிச்சனகன் சிலையிறுத்துநினைக்கொணர்ந்தது

அறிந்து அரசுகளைகட்ட அருந்தவத்தோன்இடைவிலங்க

செறிந்தசிலைகொடுதவத்தைச் சிதைத்ததும்ஓரடையாளம். (2) 1.

 

319:

அல்லியம்பூமலர்க்கோதாய். அடிபணிந்தேன்விண்ணப்பம்

சொல்லுகேன்கேட்டருளாய் துணைமலர்க்கண்மடமானே.

எல்லியம்போதினிதிருத்தல் இருந்ததோரிடவகையில்

மல்லிகைமாமாலைகொண்டு அங்குஆர்த்ததும்ஓரடையாளம். 2.

 

320:

கலக்கியமாமனத்தனளாய்க் கைகேசிவரம்வேண்ட

மலக்கியமாமனத்தனனாய் மன்னவனுமறாதொழிய

குலக்குமரா. காடுறையப்போ என்றுவிடைகொடுப்ப

இலக்குமணன்தன்னொடும் அங்குஏகியதுஓரடையாளம். 3.

 

321:

வாரணிந்தமுலைமடவாய். வைதேவீ. விண்ணப்பம்

தேரணிந்தஅயோத்தியர்கோன் பெருந்தேவீ. கேட்டருளாய்

கூரணிந்தவேல்வலவன் குகனோடும்கங்கைதன்னில்

சீரணிந்ததோழமை கொண்டதும்ஓரடையாளம். 4.

 

322:

மானமருமெல்நோக்கி. வைதேவீ. விண்ணப்பம்

கானமரும்கல்லதர்போய்க் காடுறைந்தகாலத்து

தேனமரும்பொழிற்சாரல் சித்திரகூடத்துஇருப்ப

பால்மொழியாய். பரதநம்பி பணிந்ததும்ஓரடையாளம். 5.

 

323:

சித்திரகூடத்துஇருப்பச் சிறுகாக்கைமுலைதீண்ட

அத்திரமேகொண்டெறிய அனைத்துலகும்திரிந்தோடி

வித்தகனே. இராமாவோ. நின்னபயம்என்றுஅழைப்ப

அத்திரமேஅதன்கண்ணை அறுத்ததும்ஓரடையாளம். 6.

 

324:

மின்னொத்த_ண்ணிடையாய். மெய்யடியேன்விண்ணப்பம்

பொன்னொத்தமானொன்று புகுந்துஇனிதுவிளையாட

நின்னன்பின்வழிநின்று சிலைபிடித்துஎம்பிரான்ஏக

பின்னேஅங்குஇலக்குமணன் பிரிந்ததும்ஓரடையாளம். 7.

 

325:

மைத்தகுமாமலர்க்குழலாய். வைதேவீ. விண்ணப்பம்

ஒத்தபுகழ்வானரக்கோன் உடனிருந்துநினைத்தேட

அத்தகுசீரயோத்தியர்கோன் அடையாளமிவைமொழிந்தான்

இத்தகையால்அடையாளம் ஈதுஅவன்கைமோதிரமே. 8.

 

326:

திக்குநிறைபுகழாளன் தீவேள்விச்சென்றநாள்

மிக்கபெருஞ்சபைநடுவே வில்லிறுத்தான்மோதிரம்கண்டு

ஒக்குமால்அடையாளம் அனுமான். என்றுஉச்சிமேல்

வைத்துக்கொண்டு உகந்தனளால் மலர்க்குழலாள்சீதையுமே. (2) 9.

 

327:

வாராரும்முலைமடவாள் வைதேவிதனைக்கண்டு

சீராரும்திறலனுமன் தெரிந்துரைத்தஅடையாளம்

பாராரும்புகழ்ப்புதுவைப் பட்டர்பிரான்பாடல்வல்லார்

ஏராரும்வைகுந்தத்து இமையவரோடுஇருப்பாரே. (2) 10.