பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்து

பெரியாழ்வார்

எட்டாம் திருமொழி – நல்லதோர் தாமரை

(தலைமகனுடன் சென்ற தலைமகளைக் குறித்து தாய்

பலபடி வருந்திக்கூறும் பாசுரம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

297:

நல்லதோர்தாமரைப்பொய்கை நாண்மலர்மேல்பனிசோர

அல்லியும்தாதும்உதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்ததாலோ

இல்லம்வெறியோடிற்றாலோ என்மகளைஎங்கும்காணேன்

மல்லரையட்டவன்பின்போய் மதுரைப்புறம்புக்காள்கொலோ? (2) 1.

 

298:

ஒன்றுமறிவொன்றில்லாத உருவறைக்கோபாலர்தங்கள்

கன்றுகால்மாறுமாபோலே கன்னியிருந்தாளைக்கொண்டு

நன்றும்கிறிசெய்துபோனான் நாராயணன்செய்ததீமை

என்றும்எமர்கள்குடிக்கு ஓரேச்சுக்கொலாயிடுங்கொலோ? 2.

 

299:

குமரிமணம்செய்துகொண்டு கோலம்செய்துஇல்லத்திருத்தி

தமரும்பிறரும்அறியத் தாமோதரற்கென்றுசாற்றி

அமரர்பதியுடைத்தேவி அரசாணியை வழிபட்டு

துமிலமெழப்பறைகொட்டித் தோரணம்நாட்டிடுங்கொலோ? 3 .

 

300:

ஒருமகள்தன்னையுடையேன் உலகம்நிறைந்தபுகழால்

திருமகள்போலவளர்த்தேன் செங்கண்மால்தான்கொண்டுபோனான்

பெருமகளாய்க்குடிவாழ்ந்து பெரும்பிள்ளைபெற்றஅசோதை

மருமகளைக்கண்டுகந்து மணாட்டுப்புறம்செய்யுங்கொலோ? 4.

 

301:

தம்மாமன்நந்தகோபாலன் தழீஇக்கொண்டுஎன்மகள்தன்னை

செம்மாந்திரேயென்றுசொல்லிச் செழுங்கயற்கண்ணும்செவ்வாயும்

கொம்மைமுலையும்இடையும் கொழும்பணைத்தோள்களும்கண்டிட்டு

இம்மகளைப்பெற்றதாயர் இனித்தரியாரென்னுங்கொலோ? 5.

 

302:

வேடர்மறக்குலம்போலே வேண்டிற்றுச்செய்துஎன்மகளை

கூடியகூட்டமேயாகக் கொண்டுகுடிவாழுங்கொலோ?

நாடும்நகரும்அறிய நல்லதோர்கண்ணாலம்செய்து

சாடிறப்பாய்ந்தபெருமான் தக்கவாகைப்பற்றுங்கொலோ? 6.

 

303:

அண்டத்தமரர்பெருமான் ஆழியான்இன்றுஎன்மகளை

பண்டப்பழிப்புக்கள்சொல்லிப் பரிசறஆண்டிடுங்கொலோ?

கொண்டுகுடிவாழ்க்கைவாழ்ந்து கோவலப்பட்டம்கவித்து

பண்டைமணாட்டிமார்முன்னே பாதுகாவல்வைக்குங்கொலோ? 7.

 

304:

குடியில்பிறந்தவர்செய்யும் குணமொன்றும்செய்திலன்அந்தோ.

நடையொன்றும்செய்திலன்நங்காய். நந்தகோபன்மகன்கண்ணன்

இடையிருபாலும்வணங்க இளைத்திளைத்துஎன்மகள்ஏங்கி

கடைகயிறேபற்றிவாங்கிக் கைதழும்பேறிடுங்கொலோ? 8.

 

305:

வெண்ணிறத்தோய்தயிர்தன்னை வெள்வரைப்பின்முன்எழுந்து

கண்ணுறங்காதேயிருந்து கடையவும்தான்வல்லள்கொலோ?

ஒண்ணிறத்தாமரைச்செங்கண் உலகளந்தான்என்மகளை

பண்ணறையாப்பணிகொண்டு பரிசறஆண்டிடுங்கொலோ? 9.

 

306:

மாயவன்பின்வழிசென்று வழியிடைமாற்றங்கள்கேட்டு

ஆயர்கள்சேரியிலும்புக்கு அங்குத்தைமாற்றமுமெல்லாம்

தாயவள்சொல்லியசொல்லைத் தண்புதுவைப்பட்டன்சொன்ன

தூயதமிழ்ப்பத்தும்வல்லார் தூமணிவண்ணனுக்காளரே. (2) 10.

Leave a Reply