ஐந்தாம் திருமொழி – அட்டுக்குவி
(கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் ஆநிரையையும் பாதுகாத்தல்)
எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்
264:
அட்டுக்குவிசோற்றுப்பருப்பதமும்
தயிர்வாவியும்நெய்யளறும்அடங்கப்
பொட்டத்துற்றி மாரிப்பகைபுணர்த்த
பொருமாகடல்வண்ணன்பொறுத்தமலை
வட்டத்தடங்கண்மடமான்கன்றினை
வலைவாய்ப்பற்றிக்கொண்டு குறமகளிர்
கொட்டைத்தலைப்பால்கொடுத்துவளர்க்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. (2) 1.
265:
வழுவொன்றுமிலாச்செய்கை வானவர்கோன்
வலிப்பட்டுமுனிந்துவிடுக்கப்பட்டு
மழைவந்துஎழுநாள்பெய்துமாத்தடுப்ப
மதுசூதன்எடுத்துமறித்தமலை
இழவுதரியாததோரீற்றுப்பிடி
இளஞ்சீயம்தொடர்ந்துமுடுகுதலும்
குழவியிடைக்காலிட்டெதிர்ந்துபொரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 2.
266:
அம்மைத்தடங்கண்மடவாய்ச்சியரும்
ஆனாயரும்ஆநிரையும்அலறி
எம்மைச்சரணேன்றுகொள்ளென்றிரப்ப
இலங்காழிக்கையெந்தைஎடுத்தமலை
தம்மைச்சரணென்றதம்பாவையரைப்
புனமேய்கின்றமானினம்காண்மினென்று
கொம்மைப்புயக்குன்றர்சிலைகுனிக்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 3.
267:
கடுவாய்ச்சினவெங்கண்களிற்றினுக்குக்
கவளமெடுத்துக்கொடுப்பானவன்போல்
அடிவாயுறக்கையிட்டுஎழப்பறித்திட்டு
அமரர்பெருமான்கொண்டுநின்றமலை
கடல்வாய்ச்சென்றுமேகம்கவிழ்ந்திறங்கிக்
கதுவாய்ப்படநீர்முகந்தேறி எங்கும்
குடவாய்ப்படநின்றுமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 4.
268:
வானத்திலுல்லீர். வலியீர்உள்ளீரேல்
அறையோ. வந்துவாங்குமினென்பவன்போல்
ஏனத்துருவாகியஈசன்எந்தை
இடவனெழவாங்கியெடுத்தமலை
கானக்களியானைதன்கொம்பிழந்து
கதுவாய்மதம்சோரத்தன்கையெடுத்து
கூனல்பிறைவேண்டிஅண்ணாந்துநிற்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 5.
269:
செப்பாடுடையதிருமாலவன் தன்
செந்தாமரைக்கைவிரலைந்தினையும்
கப்பாகமடுத்துமணிநெடுந்தோள்
காம்பாகக்கொடுத்துக்கவித்தமலை
எப்பாடும்பரந்திழிதெள்ளருவி
இலங்குமணிமுத்துவடம்பிறழ
குப்பாயமெனநின்றுகாட்சிதரும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 6.
270:
படங்கள்பலவுமுடைப்பாம்பரையன்
படர்பூமியைத்தாங்கிக்கிடப்பவன்போல்
தடங்கைவிரலைந்தும்மலரவைத்துத்
தாமோதரன்தாங்குதடவரைதான்
அடங்கச்சென்றுஇலங்கையையீடழித்த
அனுமன்புகழ்பாடித்தம்குட்டன்களை
குடங்கைக்கொண்டுமந்திகள்கண்வளர்த்தும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 7.
271:
சலமாமுகில்பல்கணப்போர்க்களத்துச்
சரமாரிபொழிந்துஎங்கும்பூசலிட்டு
நலிவானுறக்கேடகம்கோப்பவன்போல்
நாராயணன்முன்முகம்காத்தமலை
இலைவேய்குரம்பைத்தவமாமுனிவர்
இருந்தார்நடுவேசென்றுஅணார்சொறிய
கொலைவாய்ச்சினவேங்கைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 8.
272:
வன்பேய்முலையுண்டதோர்வாயுடையன்
வன்தூணெனநின்றதோர்வன்பரத்தை
தன்பேரிட்டுக்கொண்டுதரணிதன்னில்
தாமோதரன்தாங்குதடவரைதான்
முன்பேவழிகாட்டமுசுக்கணங்கள்
முதுகில்பெய்துதம்முடைக்குட்டன்களை
கொம்பேற்றியிருந்துகுதிபயிற்றும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 9.
273:
கொடியேறுசெந்தாமரைக்கைவிரல்கள்
கோலமும்அழிந்திலவாடிற்றில
வடிவேறுதிருவுகிர்நொந்துமில
மணிவண்ணன்மலையுமோர்சம்பிரதம்
முடியேறியமாமுகிற்பல்கணங்கள்
முன்னெற்றிநரைத்தனபோல எங்கும்
குடியேறியிருந்துமழைபொழியும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடையே. 10.
274:
அரவில்பள்ளிகொண்டுஅரவம்துரந்திட்டு
அரவப்பகையூர்தியவனுடைய
குரவிற்கொடிமுல்லைகள்நின்றுறங்கும்
கோவர்த்தனமென்னும்கொற்றக்குடைமேல்
திருவிற்பொலிமறைவாணர்புத்தூர்த்
திகழ்பட்டர்பிரான்சொன்னமாலைபத்தும்
பரவுமனநன்குடைப்பத்தருள்ளார்
பரமானவைகுந்தம்நண்ணுவரே. (2) 11.