style="text-align: center;">4ஆம் பத்து 8 ஆம் திருவாய்மொழி
3200
ஏறாளும் இறையோனும் திசைமுகனும் திருமகளும்
கூறாளும் தனியுடம்பன் குலங்குலமா அசுரர்களை
நீறாகும் படியாக நிருமித்துப் படைதொட்ட
மாறாளன் கவராத மணிமாமை குறைவிலமே. (2) 4.8.1
3201
மணிமாமை குறைவில்லா மலர்மாதர் உறைமார்வன்
அணிமானத் தடவரைத்தோள் அடலாழித் தடக்கையன்
பணிமானம் பிழையாமே யடியேனைப் பணிகொண்ட
மணிமாயன் கவராத மடநெஞ்சால் குறைவிலமே. 4.8.2
3202
மடநெஞ்சால் குறைவில்லா மகள்தாய்செய் தொருபேய்ச்சி
விடநஞ்ச முலைசுவைத்த மிகுஞானச் சிறுகுழவி
படநாகத் தணைக்கிடந்த பருவரைத்தோள் பரம்புருடன்
நெடுமாயன் கவராத நிறையினால் குறைவிலமே. 4.8.3
3203
நிறையினாற் குறைவில்லா நெடும்பணைத்தோள் மடப்பின்னை
பொறையினால் முலையணைவான்பொருவிடைஏழ் அடர்த்துகந்த
கறையினார் துவருடுக்கைகடையாவின் கழிகோல்கை
சறையினார் கவராததளிர்நிறத்தால் குறைவிலமே. 4.8.4
3204
தளிர்நிறத்தால் குறைவில்லாத் தனிச்சிறையில் விளப்புற்ற
கிளிமொழியாள் காரணமாக்கி ளரரக்கன் நகரெரித்த
களிமலர்த் துழாயலங்கல் கமழ்முடியன் கடல்ஞாலத்து
அளிமிக்கான் கவராதஅறிவினால் குறைவிலமே. 4.8.5
3205
அறிவினால் குறைவில்லா அகல்ஞாலத் தவரறிய
நெறியெல்ல மெடுத்துரைத்த நிறைஞானத் தொருமூர்த்தி
குறியமாண் உருவாகிக் கொடுங்கோளால் நிலங்கொண்ட
கிறியம்மான் கவராத கிளரொளியால் குறைவிலமே. 4.8.6
3206
கிளரொளியால் குறைவில்லா அரியுருவாய்க் கிளர்ந்தெழுந்து
கிளரொளிய இரணியன தகல்மார்பம் கிழிந்துகந்த
வளரொளிய கனலாழி வலம்புரியன் மணிநீல
வளரொளியான் கவராத வரிவளையால் குறைவிலமே. 4.8.7
3207
வரிவளையால் குறைவில்லாப் பெருமுழக்கால் அடங்காரை
எரியழலம் புகவூதி யிருநிலமுன் துயர்தவிர்த்த
தெரிவரிய சிவன்பிரமன் அமரர் கோன் பணிந்தேத்தும்
விரிபுகழான் கவராத மேகலையால் குறைவிலமே. 4.8.8
3208
மேகலையால் குறைவில்லா மெலிவுற்ற அகலல்குல்
போகமகள் புகழ்த்தந்தை விறல்வாணன் புயம்துணித்து
நாகமிசைத் துயில்வான்போல் உலகெல்லாம் நன்கொடுங்க
யோகணைவான் கவராத வுடம்பினால் குறைவிலமே. 4.8.9
3209
உடம்பினால் குறைவில்லா உயிர்பிரிந்த மலைத்துண்டம்
கிடந்தனபோல் துணிபலவா அசுரர் குழாம் துணித்துகந்த
தடம்புனல சடைமுடியன் தனியொருகூ றமர்ந்துறையும்
உடம்புடையான் கவராத உயிரினால் குறைவிலமே. 4.8.10
3210
உயிரினால் குறைவில்லா உலகேழ்தன் உள்ளொடுக்கி
தயிர்வெண்ணெ யுண்டானைத் தடங்குருகூர்ச் சடகோபன்
செயிரில்சொல் லிசைமாலை யாயிரத்து ளிப்பத்தால்
வயிரம்சேர் பிறப்பறுத்து வைகுந்தம் நண்ணுவரே. (2) 4.8.11