திருவாய்மொழி மூன்றாம் பத்து

நம்மாழ்வார்

திருவாய்மொழி மூன்றாம் பத்து

 

style="text-align: center;">3ம் பத்து 1ஆம் திருவாய்மொழி

3013

முடிச்சோதி யாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ

அடிச்சோதி நீநின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ

படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்

கடிச்சோதி கலந்ததுவோ? திருமாலே கட்டுரையே! (2) 3.1.1.

 

3014

கட்டுரைக்கில் தாமரைநின் கண்பாதம் கையொவ்வா

கட்டுரைத்த நன் பொன்னுள் திருமேனி ஒளி ஒவ்வாது

ஒட்டுரைத்திவ் வுலகுன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்

பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதீ. 3.1.2.

 

3015

பரஞ்சோதி. நீபரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்

பரஞ்சோதி யின்மையில் படியோவி நிகழ்கின்ற

பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்தஎம்

பரஞ்சோதி கோவிந்தா. பண்புரைக்க மாட்டேனே. 3.1.3.

 

3016

மாட்டாதே யாகிலுமிம் மலர்தலைமா ஞாலம்நின்

மாட்டாய மலர்ப்புரையும் திருவுருவும் மனம்வைக்க

மாட்டாத பலசமய மதிகொடுத்தாய் மலர்த்துழாய்

மாட்டேநீ மனம்வைத்தாய் மாஞாலம் வருந்தாதே? 3.1.4.

 

3017

வருந்தாத அருந்தவத்த மலர்க்கதிரின் சுடருடம்பாய்

வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்

வருங்காலம் நிகழ்காலம் கழிகால மாய்உலகை

ஒருங்காக அளிப்பாய்சீர் எங்குலக்க ஓதுவனே? 3.1.5.

 

3018

ஓதுவார் ஓத்தெல்லாம் எவ்வுலகத் தெவ்வெவையும்

சாதுவாய் நின்புகழின் தகையல்லால் பிறிதில்லை

போதுவாழ் புனந்துழாய் முடியினாய் பூவின்மேல்

மாதுவாழ் மார்ப்பினாய். என்சொல்லியான் வாழ்த்துவனே? 3.1.6.

 

3019

வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை

மூழ்த்தநீ ருலகெல்லாம் படையென்று முதல்படைத்தாய்

கேழ்த்தசீ ரரன்முதலாக் கிளர்தெய்வ மாய்க்கிளர்ந்து

சூழ்த்தமரர் துதித்தாலுன் தொல்புகழ்மா சூணாதே? 3.1.7.

 

3020

மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது

மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்

மாசூணா வான்கோலத் தமரர்க்கோன் வழிபட்டால்

மாசூணா உன்பாத மலர்சோதி மழுங்காதே? 3.1.8.

 

3021

மழுங்காத வைந்நுதிய சக்கரநல் வலத்தையாய்

தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே

மழுங்காத ஞானமே படையாக மலருலகில்

தொழும்பாயார்க் களித்தாலுன் சுடர்ச்சோதி மறையாதே? 3.1.9.

 

3022

மறையாய நால்வேதத் துள்நின்ற மலர்சுடரே

முறையாலிவ் வுலகெல்லாம் படைத்திடந்துண் டுமிழ்ந்தளந்தாய்

பிறையேறு சடையானும் நான்முகனும் இந்திரனும்

இறையாதல் அறிந்தேத்த வீற்றிருத்தல் இதுவியப்பே? 3.1.10.

 

3023

வியப்பாய வியப்பில்லா மெய்ஞ்ஞான வேதியனை

சயப்புகழார் பலர்வாழும் தடங்குருகூர் சடகோபன்

துயக்கின்றித் தொழுதுரைத்த ஆயிரத்து ளிப்பத்தும்

உயக்கொண்டு பிறப்பறுக்கும் ஒலிமுந்நீர் ஞாலத்தே. (2) 3.1.11

Leave a Reply