4ஆம் பத்து 6 ஆம் திருவாய்மொழி
3178
தீர்ப்பாரை யாமினி யெங்ஙனம் நாடுதும் அன்னைமீர்
ஓர்ப்பாலிவ் வொண்ணுதல் உற்றநன்னோயிது தேறினோம்
போர்ப்பாகு தான்செய்தன் றைவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப்பாக னார்க்கிவள் சிந்தை துழாய்த்திசைக் கின்றதே. 4.6.1
3179
திசைக்கின்ற தேயிவள் நோயிது மிக்க பெருந்தெய்வம்
இசைப்பின்றி நீரணங் காடும் இளந்தெய்வம் அன்றிது
திசைப்பின்றி யேசங்கு சக்கர மென்றிவள் கேட்கநீர்
இசைக்கிற்றி ராகில்நன் றேயில் பெறுமிது காண்மினே. 4.6.2
3180
இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டுநீர்
எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்
மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்
அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந் தாகுமே. 4.6.3
3181
மருந்தாகும் என்றங்கோர் மாயவலவைசொற் கொண்டுநீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களனிழைத் தென்பயன்?
ஒருங்காக வேயுல கேழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தெவன் பேர்சொல்ல கிற்கில் இவளைப் பெறுதிரே. 4.6.4
3182
இவளைப் பெறும்பரி சிவ்வணங் காடுதல் அன்றந்தோ
குவளைத் தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும் பயந்தனள்
கவளக் கடாக்களி றட்டபிரான்திரு நாமத்தால்
தவளப் பொடிக்கொண்டு நீரிட்டிடுமின் தணியுமே. 4.6.5
3183
தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர் அன்னைமீர்
பிணியும் ஒழிகின்ற தில்லை பெருகு மிதுவல்லால்
மணியின் அணிநிற மாயன் தமரடி நீறுகொண்டு
அணிய முயலின்மற் றில்லைகண்டீரிவ் வணங்குக்கே. 4.6.6
3184
அணங்குக் கருமருந் தென்றங்கோர் ஆடும்கள் ளும்பராய்
துணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே. 4.6.7
3185
வேதம்வல் லார்களைக் கொண்டுவிண்ணோர்பெரு மான்திருப்
பாதம் பணிந்துஇவள் நோயிது தீர்த்துக்கொள் ளாதுபோய்
ஏதம் பறைந்தல்ல செய்துகள்ளூடு கலாய்த்தூய்
கீத முழவிட்டு நீர் அணங் காடுதல் கீழ்மையே. 4.6.8
3186
கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்
நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து
ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே. 4.6.9
3187
உன்னித்து மற்றொரு தெய்வம்தொழாளவ னையல்லால்
நும்மிச்சை சொல்லிநும் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்
மன்னப் படும்மறை வாணனை வண்துவ ராபதி
மன்னனை ஏத்துமின் ஏத்துதலும்தொழு தாடுமே. 4.6.10
3188
தொழுதாடி தூமணி வண்ணனுக்காட்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச்சட கோபன் சொல்
வழுவாத ஆயிரத் துள்ளிவை பத்து வெறிகளும்
தொழுதாடிப் பாடவல் லார்துக்க சீலம் இலர்களே. 4.6.11