திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

4ஆம் பத்து 7 ஆம் திருவாய்மொழி

3189

சீலம் இல்லாச் சிறிய னேலும் செய்வினை யோபெரிதால்

ஞாலம் உண்டாய் ஞானமூர்த்தி நாராய ணா. என்றென்று

காலந் தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால்

கோல மேனி காண வாராய் கூவியும் கொள்ளாயே. (2) 4.7.1

 

3190

கொள்ள மாளா இன்பவெள்ளம் கொதில தந்திடும்என்

வள்ள லேயோ. வையங் கொண்டவாமனா வோ. என்றென்று

நள்ளி ராவும் நண்பகலும் நானிருந் தோலமிட்டால்

கள்ள மாயா. உன்னையென் கண் காணவந் தீயாயே. 4.7.2

 

3191

ஈவி லாத தீவினைகள் எத்தனை செய்த னன்கொல்?

தாவி வையம் கொண்ட எந்தாய். தாமோதரா. என்றென்று

கூவிக் கூவி நெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால்

பாவி நீயென் றொன்று சொல்லாய் பாவியேன் காணவந்தே. 4.7.3

 

3192

காண வந்தென கண்முகப்பே தாமரைக் கண்பிறழ

ஆணி செம்பொன் மேனியெந்தாய். நின்றருளாய் என்றென்று

நாண மில்லாச் சிறுதகையேன் நானிங் கலற்றுவதென்

பேணி வானோர் காணமாட்டாப் பீடுடை யப்பனையே? 4.7.4

 

3193

அப்ப னே.அட லாழியானே ஆழ்கட லைக்கடைந்த

துப்ப னேஉன் தோள்கள் நான்கும் கண்டிடக்கூடுங் கொலென்று

எப்பொ ழுதும் கண்ண நீர்கொண் டாவி துவர்ந்துவர்ந்து

இப்போ ழுதே வந்தி டாயென் றேழையேன் நோக்குவனே. 4.7.5

 

3194

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யானென தாவியுள்ளே

நாக்கு நீள்வன் ஞான மில்லை நாடோ று மென்னுடைய

ஆக்கை யுள்ளூ மாவி யுள்ளும் அல்லபு றத்தினுள்ளும்

நீக்க மின்றி யெங்கும் நின்றாய். நின்னை யறிந்தறிந்தே. 4.7.6

 

3195

அறிந்த றிந்து தேறித் தேறி யானென தாவியுள்ளே

நிறைந்த ஞான மூர்த்தியாயை நின்மல மாகவைத்து

பிறந்தும் செத்தும் நின்றிடறும் பேதைமை தீர்ந்தொ ழிந்தேன்

நறுந்து ழாயின் கண்ணியம்மா. நானுன்னைக் கண்டுகொண்டே. 4.7.7

 

3196

கண்டு கொண்டென் கைகளார நின்திருப் பாதங்கள்மேல்

எண்டி சையு முள்ள பூக்கொண் டேத்தி யுகந்துகந்து

தொண்ட ரோங்கள் பாடியாடச் சூழ்கடல் ஞாலத்துள்ளே

வண்டு ழாயின் கண்ணிவேந்தே. வந்திட கில்லாயே. 4.7.8

 

3197

இடகி லேனோன் றட்டகில்லேன் ஐம்புலன் வெல்லகில்லேன்

கடவ னாகிக் காலந்தோறும் பூப்பறித் தேத்தகில்லேன்

மடவன் நெஞ்சம் காதல்கூர வல்வினை யேன்அயர்ப்பாய்

தடவு கின்றே னெங்குக்காண்பன் சக்கரத் தண்ணலையே? 4.7.9

 

3198

சக்க ரத்தண் ணலேயென்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப

பக்கம் நோக்கி நின்றலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன்

மிக்க ஞான மூர்த்தியாய வேத விளக்கினைஎன்

தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே. 4.7.10

 

3199

தழுவி நின்ற காதல்தன்னால் தாமரைக் கண்ணன்தன்னை

குழுவு மாடத் தென்குரு கூர்மா றன்சட கோபன்சொல்

வழுவி லாத வொண்தமிழ்கள் ஆயிரத்து ளிப்பத்தும்

தழுவப் பாடி யாட வல்லார் வைகுந்த மேறுவரே. (2) 4.7.11

Leave a Reply