style="text-align: center;">4ஆம் பத்து 9 ஆம் திருவாய்மொழி
3211
நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்தேங்க
எண்ணாராத் துயர்விளைக்கும் இவையென்ன உலகியற்கை?
கண்ணாளா. கடல்கடைந்தாய். உனகழற்கே வரும்பரிசு
தண்ணாவா தடியேனைப் பணிகண்டாய் சாமாறே. (2) 4.9.1
3212
சாமாறும் கெடுமாறும் தமருற்றார் தலைத்தலைப்பெய்து
ஏமாறிக் கிடந்தலற்றும் இவையென்ன உலகியற்கை?
ஆமாறொன் றறியேன்நான் அரவணையாய். அம்மானே
கூமாறே விரைகண்டாய் அடியேனைக் குறிக்கொண்டே. 4.9.2
3213
கொண்டாட்டும் குலம்புனைவும் தமருற்றார் விழுநிதியும்
வண்டார்பூங் குழலாளும் மனையொழிய வுயிர்மாய்தல்
கண்டாற்றேன் உலகியற்கை கடல்வண்ணா. அடியேனைப்
பண்டேபோல் கருதாதுன் அடிக்கேகூய்ப் பணிகொள்ளே. 4.9.3
3214
கொள்ளென்று கிளர்ந்தெழுந்த பெருஞ்செல்வம் நெருப்பாக
கொள்ளென்று தமம்மூடும் இவையென்ன உலகியற்கை?
வள்ளலே. மணிவண்ணா. உனகழற்கே வரும்பரிசு
வள்ளல்செய் தடியேனை உனதருளால் வாங்காயே. 4.9.4
3215
வாங்குநீர் மலருலகில் நிற்பனவுமீ திரிவனவும்
ஆங்குயிர்கள் பிறப்பிறப்புப் பிணிமூப்பால் தகர்ப்புண்ணும்
ஈங்கிதன்மேல் வெந்நரகம் இவையென்ன உலகியற்கை?
வாங்கெனைநீ மணிவண்ணா அடியேனை மறுக்கேலே. 4.9.5
3216
மறுக்கிவல் வலைப்படுத்திக் குமைத்திட்டுக் கொன்றுண்பர்
அறப்பொருளை யறிந்தோரார் இவையென்ன உலகியற்கை?
வெறித்துளவ முடியானே. வினையேனை யுனக்கடிமை
அறக்கொண்டாய் இனியென்னா ரமுதே.கூய் அருளாயே. 4.9.6
3217
ஆயே.இவ் வுலகத்து நிற்பனவும் திரிவனவும்
நீயேமற் றொருபொருளும் இன்றிநீ நின்றமையால்
நோயேமூப் பிறப்பிறப்புப் பிணியேயென் றிவையொழியக்
கூயேகொள் அடியேனைக் கொடுவுலகம் காட்டேலே. 4.9.7
3218
காட்டிநீ கரந்துமிழும் நிலநீர்தீ விசும்புகால்
ஈட்டீநீ வைத்தமைத்த இமையோர்வாழ் தனிமுட்டைக்
கோட்டையினில் கழித்தெனையுன் கொழுஞ்சோதி யுயரத்து
கூட்டரிய திருவடிக்க ளெஞ்ஞான்று கூட்டுதியே? 4.9.8
3219
கூட்டுதிநின் குரைகழல்கள் இமையோரும் தொழாவகை செய்து
ஆட்டுதிநீ யரவணையாய் அடியேனும் அஃதறிவன்
வேட்கையெல்லாம் விடுத்தெனையுன் திருவடியே சுமந்துழல
கூட்டரிய திருவடிக்கள் கூட்டினைநான் கண்டேனே. 4.9.9
3220
கண்டுகேட் டுற்றுமோந்துண்டுழலும் ஐங்கருவி
கண்டவின்பம் தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம்
ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலாநிற்பக்
கண்டசதிர் கண்டொழிந்தேன் அடைந்தேனுன் திருவடியே. 4.9.10
3221
திருவடியை நாரணனைக்கேசவனைப் பரஞ்சுடரை
திருவடிசேர் வதுகருதிச் செழுங்குருகூர்ச் சடகோபன்
திருவடிமே லுரைத்ததமிழ் ஆயிரத்து ளிப்பத்தும்
திருவடியே அடைவிக்கும் திருவடிசேர்ந் தொன்றுமினே. (2) 4.9.11