திருவாய்மொழி நான்காம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

4ஆம் பத்து 5 ஆம் திருவாய்மொழி

3167

வீற்றிருந் தேழுலகும் தனிக்கோல் செல்ல வீவில்சீர்

ஆற்றல்மிக் காளும் அம்மானைவெம்மா பிளந்தான்தன்னை

போற்றி யென்றே கைகளாரத் தொழுது சொல்மாலைகள்

ஏற்ற நோற்றேற் கினியென்னகுறை யெழுமையுமே? (2) 4.5.1

 

3168

மைய கண்ணாள் மலர்மேலுறைவா ளுறைமார்பினன்

செய்ய கொலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை

மொய்ய சொல்லா லிசைமாலைகளேத்தி யுள்ளப் பெற்றேன்

வெய்ய நோய்கள் முழுதும் வியன்ஞாலத்து வீயவே. 4.5.2

 

3169

வீவி லின்ப மிகஎல்லை நிகழ்ந்தநம் அச்சுதன்

வீவில் சீரன் மலர்க்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை

வீவில் காலம் இசைமாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்

வீவி லின்பமிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே. 4.5.3

 

3170

மேவி நின்று தொழுவார் வினைபோக மேவும்பிரான்

தூவியம் புள்ளு டையான் அடலாழியம் மான்றன்னை

நாவிய லாலிசை மாலைக ளேத்திநண் ணப்பெற்றேன்

ஆவியென் னாவியை யானறியேன்செய்த வாற்றையே. 4.5.4

 

3171

ஆற்ற நல்ல வகைகாட்டும் அம்மானை அமரர்தம்

ஏற்றை யெல்லாப் பொருளும் விரித்தானை எம்மான்தன்னை

மாற்ற மாலை புனைந்தேத்தி நாளும் மகிழ்வெய்தினேன்

காற்றின் முன்னம் கடுகி வினைநோய்கள் கரியவே. 4.5.5

 

3172

கரிய மேனிமிசை வெளிய நீறுசிறி தேயிடும்

பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான்தன்னை

உரிய சொல்லா லிசைமாலைகள் ஏத்தியுள்ளப் பெற்றேற்கு

அரிய துண்டோ எனக்கின்று தொட்டுமினி யென்றுமே? 4.5.6

 

3173

என்றும் ஒன்றாகி யொத்தாரும்மிக்கார்களும் தன்றனக்

கின்றி நின்றானை யெல்லாவுலகும் உடையான் தன்னை

குன்ற மொன்றால் மழைகாத்தபிரானைச்சொன் மாலைகள்

நன்று சூட்டும் விதியெய்தினம் என்ன குறைநமக்கே? 4.5.7

 

3174

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்

தமக்கும் வானத் தவர்க்கும் பெருமானை தண்டாமரை

சுமக்கும் பாதப் பெருமானைச் சொன்மாலைகள் சொல்லுமா

றமைக்க வல்லேற் கினியாவர் நிகரகல் வானத்தே? 4.5.8

 

3175

வானத்தும் வானத்துள் ளும்பரும் மண்ணுள்ளும் மண்ணின்கீழ்த்

தானத்தும் எண்டிசை யும்தவிராதுநின் றான்தன்னை

கூனற்சங் கத்தடக் கையவனைக்குடமாடியை வானக்

கோனைக் கவிசொல்ல வல்லேற்கினிமா றுண்டோ ? 4.5.9

 

3176

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும்இடந்தும் கிடந்தும்நின்றும்

கொண்ட கோலத் தொடுவீற்றிருந்தும் மணங்கூடியும்

கண்ட வாற்றால் தனக்கேயுலகென நின்றான்தன்னை

வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க் கின்பமாரியே. 4.5.10

 

3177

மாரி மாறாத தண்ணம்மலை வேங்கடத் தண்ணலை

வாரி வாறாத பைம்பூம் பொழில்சூழ் குருகூர்நகர்

காரி மாறன் சடகோபன் சொல்லாயிரத் திப்பத்தால்

வேரி மாறாத பூமேலிருப்பாள் வினைதீர்க்குமே. (2) 4.5.11

Leave a Reply