style="text-align: center;">4ஆம் பத்து 3 ஆம் திருவாய்மொழி
3145
கோவை வாயாள் பொருட்டேற்றின்எருத்தம் இறுத்தாய் மதிளிலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய் குலநல் யானை மருப்பொசித்தாய்
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கே னேலும்நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்தென் னெஞ்சமே. (2) 4.3.1
3146
பூசும் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாச கம்செய் மாலையே வான்பட் டாடை யுமஃதே
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே
ஈசன் ஞால முண்டுமிழ்ந்த எந்தை யேக மூர்த்திக்கே. 4.3.2
3147
ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாரா யணனேஉன்
ஆகம் முற்றும் அகத்தடக்கி ஆவி யல்லல் மாய்த்ததே. 4.3.3
3148
மாய்த்தல் எண்ணி வாய்முலை தந்த மாயப் பேயுயிர்
மாய்த்த ஆய மாயனே வாம னனே மாதவா
பூத்தண் மாலை கொண்டுன்னைப் போதால் வணங்கே னேலும்நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே. 4.3.4
3149
கண்ணி யெனதுயிர் காதல் கனகச் சோதி முடிமுதலா
எண்ணில் பல்க லன்களும் ஏலு மாடை யுமஃதே
நண்ணி மூவு லகும்நவிற்றும் கீர்த்தி யுமஃதே
கண்ண னெம்பி ரானெம்மான் கால சக்கரத் தானுக்கே. 4.3.5
3150
கால சக்க ரத்தோடு வெண்சங் கம்கை யேந்தினாய்
ஞால முற்று முண்டுமிழ்ந்த நாரா யணனே. என்றென்று
ஓல மிட்டு நானழைத்தால் ஒன்றும் வாரா யாகிலும்
கோல மாமென் சென்னிக்குன் கமலம் அன்ன குரைகழலே. 4.3.6
3151
குரைக ழல்கள் நீட்டிமண் கொண்ட கோல வாமனா
குரைக ழல்கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே
விரைகொள் பூவும் நீரும்கொண்டேத்த மாட்டே னேலும்உன்
உரைகொள் சோதித் திருவுருவம் என்ன தாவி மேலதே. 4.3.7
3152
என்ன தாவி மேலையாய் ஏர்கொள் ஏழு லகமும்
துன்னி முற்று மாகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்
உன்ன தென்ன தாவியும் என்ன துன்ன தாவியும்
இன்ன வண்ண மேநின்றாய் என்று ரைக்க வல்லேனே? 4.3.8
3153
உரைக்க வல்லேன் அல்லேனுன்உலப்பில் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன்நான்?காதல் மையல் ஏறினேன்
புரைப்பி லாத பரம்பரனே. பொய்யி லாத பரஞ்சுடரே
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த யானும் ஏத்தினேன். 4.3.9
3154
யானும் ஏத்தி ஏழுலகும் முற்றும் ஏத்தி பின்னையும்
தானும் ஏத்தி லும்தன்னை ஏத்த ஏத்த எங்கெய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாகித் தித்திப்ப
யானு மெம்பி ரானையே ஏத்தி னேன்யா னுய்வானே. 4.3.10
3155
உய்வு பாயம் மற்றின்மை தேறிக் கண்ணன் ஒண்கழல்கள்மேல்
செய்ய தாம ரைப்பழனத் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே. (2) 4.3.11