e0af8d-e0ae95e0af8ae0aeaee0af8d.jpg" style="display: block; margin: 1em auto">
திருப்புகழ் கதைகள் பகுதி 94
கொம்பனையார் – திருச்செந்தூர்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
அருணகிரிநாதர் அருளியுள்ள கொம்பனையார் எனத் தொடங்கும் திருச்செந்தூர் தலத்துத் திருப்புகழ் ஐம்பத்திநான்காவது திருப்புகழ் ஆகும். முருகப் பெருமானை அன்புடனும் ஆசாரத்துடனும் பூசித்து, இத்திருப்புகழில் வீணாள் படாமல் உய்ந்திடத் திருவருள் புரிய அருணகிரியார் வேண்டுகிறார். இனிப் பாடலைக் காணலாம்
கொம்பனை யார்காது மோதிரு
கண்களி லாமோத சீதள
குங்கும பாடீர பூஷண …… நகமேவு
கொங்கையி னீராவி மேல்வளர்
செங்கழு நீர்மாலை சூடிய
கொண்டையி லாதார சோபையில் …மருளாதே
உம்பர்கள் ஸ்வாமிந மோநம
எம்பெரு மானேந மோநம
ஒண்டொடி மோகாந மோநம …… எனநாளும்
உன்புக ழேபாடி நானினி
அன்புட னாசார பூசைசெய்
துய்ந்திட வீணாள்ப டாதருள் …… புரிவாயே
பம்பர மேபோல ஆடிய
சங்கரி வேதாள நாயகி
பங்கய சீபாத நூபுரி …… கரசூலி
பங்கமி லாநீலி மோடிப
யங்கரி மாகாளி யோகினி
பண்டுசு ராபான சூரனொ …… டெதிர்போர்கண்
டெம்புதல் வாவாழி வாழியெ
னும்படி வீறான வேல்தர
என்றுமு ளானேம நோகர …… வயலூரா
இன்சொல்வி சாகாக்ரு பாகர
செந்திலில் வாழ்வாகி யேயடி
யென்றனை யீடேற வாழ்வருள் …… பெருமாளே.
இப்பாடலின் பொருளாவது -சிவபெருமான் சிற்றம்பலத்தில் இன்ப நடனம் புரியுங்கால் அந்நடனத்திற்கிசைய பம்பரத்தைப்போல் திருநடனம் புரிந்த சங்கரி வாழ்த்தித் தந்த வெற்றி பொருந்திய வேற்படையைத் தரித்தவரே, பெண்கள் அழகில் அடியேன் மனத்தை வைத்து மயக்கத்தை யடையாமல், தினந்தோறும் தேவரீரது திருப்புகழ்ப் பாமாலைகளையே பாடி, அடியேன் இனியாவது அன்புடனும் ஆசாரத்துடனும் தேவரீரது திருவடிக் கமலங்களைப் பூசித்து, வீண் நாள் படாது உய்யுமாறு திருவருள் புரிவீர் – என்பதாகும்.
இந்தத் திருப்புகழில் அம்பலத்தினில் இறைவன் நர்த்தனஞ் செய்யுங்கால் பம்பரத்தைப் போலவே சுழன்று ஆடிய சங்கரி, வேதாள பூத கணங்களுக்குத் தலைவி, தாமரைக்கு நிகரானதும் சிறப்பு வாய்ந்ததுமான திருவடிகளில் சிலம்புகளை யணிந்து கொண்டிருப்பவள், சூலத்தைக் கரத்திலே தாங்கிக்கொண்டு இருப்பவள், குற்றமில்லாத நீலநிறத்தை உடையவள், துர்க்கை, அடியார்களது பயத்தை அகற்றும் பயங்கரி, மகாகாளி, யோகினி என்னும் தேவதையாக இருப்பவருமாகிய உமாதேவியார், முன்னாளில் கள்ளருந்தும் அசுரகுலத்திற் பிறந்த சூரபன்மனொடு, எதிர்த்துப் போர் செய்வதைக் கண்டு, “எனது குமாரனே! நீ நீடுழி வாழ்வாயாக” என்று உன்னை வாழ்த்தும்படி, வெற்றியை யுடைய வேலாயுதத்தை அளித்தார் என்று உமாதேவியாரை போற்றுகிறார் அருணகிரியார்.
நமது கடவுளர்கள் ஆடும் ஆட்டங்கள் பற்றி சிலப்பதிகாரம் மிக அழகாக எடுத்துரைக்கிறது. இது குறித்த ஒரு வெண்பா பாடலில்
கடையமயி ராணிமரக் கால்விந்தை கந்தன்
குடைகுடிமால் அல்லியமற்கும்பம்—சுடற்விழியாற்
பட்டமதன் பேடுதிருப் பாவையரன் பாண்டரங்கம்
கொட்டியிவை காண்பதினோர் கூத்து
என்று கூறப்படுகிறது.
சிலப்பதிகாரக் காவியத்தில் கண்ணகிக்கு அடுத்தபடியாக வரும் பெண் கதாபாத்திரம் மாதவி. அவள் பேரழகி. சித்திராபதியின் மகள். பூம்புகாரில் அவளை அறியாதோர் இல்லை. காவிரிபூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகாரில் இந்திரவிழா கோலாகலமாக நடந்தது. அதில் மாதவியின் நாட்டிய அரங்கேற்றம் சீரும் சிறப்புமாக நடந்தது. சோழ மன்னன், மனம் மகிழ்ந்து மாதவிக்கு 1008 பொற்காசுகளையும் தலைக்கோல் பட்டத்தையும் தந்து கவுரவித்தான். ஐந்து வயது முதல் நாட்டியம் கற்ற மாதவி அத்துறையில் கரை கண்டு 12ஆம் வயதில் அரங்கேறினாள்.
இசையிலும் நடனத்திலும் பெரும் ஈடுபாடு கொண்ட கோவலன், மாதவியின் கலைகளில் மயங்கினான். அவனது மனைவி கண்ணகியை விட்டுப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்தான். பின்னர் கண்ணகியை அடைகிறான். பொய்க் குற்றச் சாட்டின்பேரில் மதுரையில் கொலைத் தண்டணை பெறுகிறான். பொங்கி எழுந்த கண்ணகி மதுரையை எரித்து சேரநாடு சென்று பத்தினித் தெய்வமாகிறாள்.
மாதவி ‘கடல் ஆடு காதை’இல் ஆடிய பதினோரு வகை நடனங்கள் பற்றி நாளைக் காணலாம்.
திருப்புகழ் கதைகள்: கொம்பனையர்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.