பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

ஒன்பதாம் திருமொழி – வெண்ணெய்விழுங்கி

(வெண்ணெய் களவாடல் முதலிய பாலக்ரீடை வர்ணனம்)

எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

202:

வெண்ணெய்விழுங்கிவெறுங்கலத்தை

வெற்பிடையிட்டு அதனோசைகேட்கும்

கண்ணபிரான்கற்றகல்விதன்னைக்

காக்ககில்லோம்உன்மகனைக்காவாய்

புண்ணில்புளிப்பெய்தாலொக்கும்தீமை

புரைபுரையால்இவைசெய்யவல்ல

அண்ணற்கண்ணானோர்மகனைப்பெற்ற

அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். (2) 1.

 

203 :

வருகவருகவருகஇங்கே

வாமனநம்பீ. வருகஇங்கே

கரியகுழல்செய்யவாய்முகத்துக்

காகுத்தநம்பீ. வருகஇங்கே

அரியனிவன்எனக்குஇன்றுநங்காய்.

அஞ்சனவண்ணா. அசலகத்தார்

பரிபவம்பேசத்தரிக்ககில்லேன்

பாவியேனுக்குஇங்கேபோதராயே. 2.

 

204:

திருவுடைப்பிள்ளைதான்தீயவாறு

தேக்கமொன்றுமிலன்தேசுடையன்

உருகவைத்தகுடத்தொடுவெண்ணெய்

உறிஞ்சியுடைத்திட்டுப்போந்துநின்றான்

அருகிருந்தார்தம்மைஅநியாயம்செய்வது

தான் வழக்கோ? அசோதாய்.

வருகவென்றுஉன்மகன்தன்னைக்கூவாய்

வாழவொட்டான்மதுசூதனனே. 3.

 

205:

கொண்டல்வண்ணா. இங்கேபோதராயே

கோயிற்பிள்ளாய். இங்கேபோதராயே

தெண்திரைசூழ்திருப்பேர்க்கிடந்த

திருநாரணா. இங்கேபோதராயே

உண்டுவந்தேன்அம்மனென்றுசொல்லி

ஓடிஅகம்புகஆய்ச்சிதானும்

கண்டெதிரேசென்றெடுத்துக்கொள்ளக்

கண்ணபிரான்கற்றகல்விதானே. 4.

 

206:

பாலைக்கறந்துஅடுப்பேறவைத்துப்

பல்வளையாள்என்மகளிருப்ப

மேலையகத்தேநெருப்புவேண்டிச்சென்று

இறைப்பொழுதுஅங்கேபேசிநின்றேன்

சாளக்கிராமமுடையநம்பி

சாய்த்துப்பருகிட்டுப்போந்துநின்றான்

ஆலைக்கரும்பின்மொழியனைய

அசோதைநங்காய். உன்மகனைக்கூவாய். 5.

 

207:

போதர்கண்டாய்இங்கேபோதர்கண்டாய்

போதரேனென்னாதேபோதர்கண்டாய்

ஏதேனும்சொல்லிஅசலகத்தார்

ஏதேனும்பேசநான்கேட்கமட்டேன்

கோதுகலமுடைக்குட்டனேயா.

குன்றெடுத்தாய். குடமாடுகூத்தா.

வேதப்பொருளே. என்வேங்கடவா.

வித்தகனே. இங்கேபோதராயே. 6.

 

208:

செந்நெலரிசிசிறுபருப்புச்

செய்த அக்காரம்நறுநெய்பாலால்

பன்னிரண்டுதிருவோணம்அட்டேன்

பண்டும்இப்பிள்ளைபரிசறிவன்

இன்னமுகப்பன்நானென்றுசொல்லி

எல்லாம்விழுங்கிட்டுப்போந்துநின்றான்

உன்மகன்தன்னையசோதைநங்காய்.

கூவிக்கொள்ளாய்இவையும்சிலவே. 7.

 

209:

கேசவனே. இங்கேபோதராயே

கில்லேனென்னாதுஇங்கேபோதராயே

நேசமிலாதாரகத்திருந்து

நீவிளையாடாதேபோதராயே

தூசனம்சொல்லும்தொழுத்தைமாரும்

தொண்டரும்நின்றவிடத்தில்நின்று

தாய்சொல்லுக்கொள்வதுதன்மம்கண்டாய்

தாமோதரா. இங்கேபோதராயே. 8.

 

210:

கன்னலிலட்டுவத்தோடுசீடை

காரெள்ளினுண்டைகலத்திலிட்டு

என்னகமென்றுநான்வைத்துப்போந்தேன்

இவன்புக்குஅவற்றைப்பெறுத்திப்போந்தான்

பின்னும்அகம்புக்குஉறியைநோக்கிப்

பிறங்கொளிவெண்ணெயும்சோதிக்கின்றான்

உன்மகன்தன்னையசோதைநங்காய்.

கூவிக்கொள்ளாய் இவையும்சிலவே. 9.

 

211:

சொல்லிலரசிப்படுதிநங்காய்.

சுழலுடையன்உன்பிள்ளைதானே

இல்லம்புகுந்துஎன்மகளைக்கூவிக்

கையில்வளையைக்கழற்றிக்கொண்டு

கொல்லையில்நின்றும்கொணர்ந்துவிற்ற

அங்கொருத்திக்குஅவ்வளைகொடுத்து

நல்லனநாவற்பழங்கள்கொண்டு

நானல்லேனென்றுசிரிக்கின்றானே. 10.

 

212:

வண்டுகளித்திரைக்கும்பொழில்சூழ்

வருபுனல்காவிரித்தென்னரங்கன்

பண்டவன்செய்தகிரீடையெல்லாம்

பட்டர்பிரான்விட்டுசித்தன்பாடல்

கொண்டிவைபாடிக்குனிக்கவல்லார்

கோவிந்தன்தன்அடியார்களாகி

எண்திசைக்கும்விளக்காகிநிற்பார்

இணையடிஎன்தலைமேலனவே. (2) 11.

 

 

Leave a Reply