682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பகவத் ராமானுஜரின் உத்தரவுப்படி திருமலை திருப்பதியில் நந்தவனம் அமைத்து, புஷ்ப கைங்கர்யம் செய்தவர் சுவாமி அனந்தாழ்வான். பிரம்மோத்ஸவ விழா முடிந்த மறுநாள் திருமலையப்ப சுவாமி, அங்குள்ள அனந்தாழ்வான் தோட்டத்துக்கு எழுந்தருள்வது வழக்கம். அங்கே மகிழ மரமாக அனந்தாழ்வான் திருவரசு அமைந்த இடத்தில் தன்னுடைய பக்தனுக்கு சடாரி மரியாதை அளித்துவிட்டு, இடவலமாக அதாவது பின் சுற்றாக புறப்பட்டு ஆஸ்தானத்தை அடைவார்.
‘செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்தேன்’ என்பது பாசுரம். திருமலைக்கு புஷ்ப மண்டபம் என்று பெயர் உண்டு. ஒவ்வோர் ஆண்டும் பிரமோத்ஸவம் நடந்து முடிந்த பின்னர், உத்ஸவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடத்துவது ஐதீகம்.
உத்ஸவர்களான ஸ்ரீ தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு திருக்கல்யாண மண்டபத்தில் புஷ்ப யாக நிகழ்ச்சிகள் நடைபெறும். டன் கணக்கில் மலர்கள் கொண்டு வரப்படும். ரோஜா, முல்லை, மல்லி, சம்பங்கி, சாமந்தி மற்றும் துளசி, தவனம் போன்ற 14 வகை புஷ்பங்களால் உத்ஸவ மூர்த்திகளுக்கு அர்ச்சனை செய்யப்படும்.இந்த யாகத்தோடு பிரம்மோத்ஸவம் நிறைவுபெறும். இவை யாவும் புதன் கிழமை நடைபெற்றன.
தொடர்ந்து, திருமலை ஸ்ரீ பெரிய ஜீயர் சுவாமி மற்றும் ஸ்ரீ சின்ன ஜீயர் ஸ்வாமி ஆகியோர் இணைந்து ‘தி இந்து பதிப்பகம்’ வெளியிட்ட ‘ஸ்ரீ அனந்தாழ்வானின் தெய்வீக வரலாறு’ என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூலை திருமலையில் புதன்கிழமை வெளியிட்டார்கள்.
விழாவில் பேசிய திருமலையின் மூத்த மடாதிபதி, 1053 – 1138 காலகட்டத்தில் திருமலை மலையில் வாழ்ந்த மகத்தான ஸ்ரீ வைணவ ஆசார்யர் அனந்தாழ்வானின் வரலாற்றை இந்த புத்தகம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என்றார்.
மலர்த் தோட்டம் அமைத்து திருமலை சந்நிதிக்கு புஷ்ப கைங்கர்யத்தை முன்னின்று நடத்திய அனந்தாழ்வான், தினமும் மாலை கட்டி, திருமலையப்பனுக்கு புஷ்ப கைங்கரியம் செய்தார். இன்று இந்தப் புத்தகம் அனந்தாழ்வான் தோட்டத்தில் அனுசரிக்கப்படும் பாக் சவாரி என்ற புனித நாளில் வெளியிடப்படுகிறது பொருத்தமானது” என்று குறிப்பிட்டார்.
குருவின் மீதுள்ள பக்தியின் சக்தியைப் புரிந்துகொள்ள இந்த நூலைப் படிக்குமாறு அவர் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தார். விஜயவாடாவைச் சேர்ந்த பக்தரான பி.வி.ராமி ரெட்டி என்பவரால் தெலுங்கில் எழுதப்பட்ட இந்த நூலை ஹைதராபாத்தைச் சேர்ந்த திருமதி ராஜி ரகுநாதன் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்த நூலை தி ஹிந்து பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூலைப் பற்றி…
ஸ்ரீமான் அனந்தாழ்வான் திவ்ய சரிதம் என்ற இந்த நூல், உண்மைச் சம்பவங்களால் ஆனது. குரு பக்தியையும் தெய்வ பக்தியையும் விளக்குகிறது. இதனைப் படிப்பதன் மூலம் வாசகர்களுக்கு குரு பக்தி என்றால் என்ன என்பது புரிவதோடு தெய்வ பக்தி கட்டாயம் ஏற்படும்.
ஏனென்றால் இதனை எழுதிய ராமிரெட்டி, சாட்சாத் திருமலை ஸ்ரீ வேங்கடேஸ்வர பெருமாளால் தூண்டப்பட்டு அவர் கூறியதை எழுதியிருப்பதாகக் கூறுகிறார். இதைப் படிக்கும் நமக்கும் அது நூற்றுக்கு நூறு உண்மை என்பது புரிய வரும்.
திருமலைக்கு எத்தனையோ முறை சென்று வரும் பக்தர்களுக்குக் கூட அனந்தாழ்வான் தோட்டத்தை பற்றி தெரியாமல் போவது துரதிருஷ்டமே. இதைப் படித்த பின்பாவது அந்த தவறை திருத்திக் கொள்வதற்கு நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். நூலாசிரியர் எத்தனை பணிவோடு திருமலைக்கு வரும் பக்தர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறார் என்று படிக்கும்போது, நம் உடன் பிறந்த சகோதரனாக நம்மை நல்வழிப்படுத்த அவர் நினைப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
திருமலை ஸ்ரீனிவாச பெருமாளின் தரிசனம் முடிந்ததும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிவரும் நமக்கு அவருடைய வேண்டுகோளைப் படிக்கும்போது இத்தனை நாள் அவ்விதம் செய்யவில்லையே என்ற வெட்கம் மேலிடுகிறது. இது ஆச்சார்ய பக்தியையும் தெய்வபக்தியையும் எடுத்துரைக்கும் ஆன்மீக நூலானாலும், சற்றும் தொய்வின்றி ஒரு நாவலைப் படிப்பது போல, எடுத்தால் கீழே வைக்க முடியவில்லை. அத்தனை ஆத்மார்த்தமாக எழுதியுள்ளார் ஆசிரியர்.
இதனைத் தமிழில் மொழிபெயர்த்தவரும், மொழிபெயர்ப்பு என்ற எண்ணம் துளியும் ஏற்படாத விதமாக மூல நூலே தமிழ்தானோ என்பது போல மொழிபெயர்த்து இருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆன்மீக அன்பர்கள் இந்த நூலை வாங்கிப் படித்து, ஸ்ரீமான் அனந்தாழ்வானின் தெய்வ பக்தியையும் குரு பக்தியையும் அறிந்து கொண்டு தாமும் அவ்வழியில் முன்னேறலாம்..