பெரியாழ்வார் திருமொழி இரண்டாம் பத்து

பெரியாழ்வார்

ஐந்தாம் திருமொழி – பின்னைமணாளனை

(கண்ணன்குழல் வாரக் காக்கையை வாவெனல்)

கலித்தாழிசை

 

162:

பின்னைமணாளனைப் பேரில்கிடந்தானை

முன்னையமரர் முதல்தனிவித்தினை

என்னையும் எங்கள்குடிமுழுதுஆட்கொண்ட

மன்னனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.

மாதவன்தன்குழல்வாராய்அக்காக்காய். (2) 1.

 

163 :

பேயின்முலையுண்ட பிள்ளைஇவன்முன்னம்

மாயச்சகடும் மருதும்இறுத்தவன்

காயாமலர்வண்ணன் கண்ணன்கருங்குழல்

தூய்தாகவந்துகுழல்வாராய்அக்காக்காய்.

தூமணிவண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 2.

 

164:

திண்ணக்கலத்தில் திரையுறிமேல்வைத்த

வெண்ணெய்விழுங்கி விரையஉறங்கிடும்

அண்ணல் அமரர்பெருமானை ஆயர்தம்

கண்ணனைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.

கார்முகில்வண்ணன்குழல்வாராய்அக்காக்காய். 3.

 

165:

பள்ளத்தில்மேயும் பறவையுருக்கொண்டு

கள்ளவசுரன்வருவானைத் தான்கண்டு

புள்ளிதுவென்று பொதுக்கோவாய்கீண்டிட்ட

பிள்ளையைவந்துகுழல்வாராய்அக்காக்காய்.

பேய்முலையுண்டான்குழல்வாராய்அக்காக்காய். 4.

 

166:

கற்றினம்மேய்த்துக் கனிக்குஒருகன்றினை

பற்றியெறிந்த பரமன்திருமுடி

உற்றனபேசி நீஓடித்திரியாதே

அற்றைக்கும்வந்துகுழல்வாராய்அக்காக்காய்.

ஆழியான்தன்குழல்வாராய்அக்காக்காய். 5.

 

167:

கிழக்கில்குடிமன்னர் கேடிலாதாரை

அழிப்பான்நினைந்திட்டு அவ்வாழியதனால்

விழிக்குமளவிலே வேரறுத்தானை

குழற்குஅணியாகக்குழல்வாராய்அக்காக்காய்.

கோவிந்தன்தன்குழல்வாராய்அக்காக்காய். 6.

 

168:

பிண்டத்திரளையும் பேய்க்குஇட்டநீர்ச்சோறும்

உண்டற்குவேண்டி நீஓடித்திரியாதே

அண்டத்துஅமரர்பெருமான் அழகமர்

வண்டொத்திருண்டகுழல்வாராய்அக்காக்காய்.

மாயவன்தன்குழல்வாராய்அக்காக்காய். 7.

 

169:

உந்தியெழுந்த உருவமலர்தன்னில்

சந்தச்சதுமுகன்தன்னைப் படைத்தவன்

கொந்தக்குழலைக் குறந்துபுளியட்டி

தந்தத்தின்சீப்பால்குழல்வாராய்அக்காக்காய்.

தாமோதரன்தன்குழல்வாராய்அக்காக்காய். 8.

 

170:

மன்னன்தன்தேவிமார் கண்டுமகிழ்வெய்த

முன்இவ்வுலகினை முற்றும்அளந்தவன்

பொன்னின்முடியினைப் பூவணைமேல்வைத்து

பின்னேயிருந்துகுழல்வாராய்அக்காக்காய்.

பேராயிரத்தான்குழல்வாராய்அக்காக்காய். 9.

 

தரவு கொச்சகக்கலிப்பா

 

171:

கண்டார்பழியாமே அக்காக்காய். கார்வண்ணன்

வண்டார்குழல்வார வாவென்றஆய்ச்சிசொல்

விண்தோய்மதிள் வில்லிபுத்தூர்க்கோன்பட்டன்சொல்

கொண்டாடிப்பாடக் குறுகாவினைதாமே. (2) 10.

Leave a Reply