திருவாய்மொழி இரண்டாம் பத்து
இரண்டாம் பத்து முதல் திருவாய்மொழி
2901
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே. 2.1.1
2902
கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாய அன்றிலே
சேட்பட்ட யாமங்கள் சேரா திரங்குதியால்
ஆட்பட்ட எம்மேபோல் நீயும் அரவணையான்
தாட்பட்ட தண்டுழாய்த் தாமம்கா முற்றாயே. 2.1.2
2903
காமுற்ற கையறவோ டெல்லே இராப்பகல்
நீமுற்றக் கண்டுயிலாய் நெஞ்சுருகி யேங்குதியால்
தீமுற்றத் தென்னிலங்கை யூட்டினான் தாள்நயந்த
யாமுற்ற துற்றாயோ வாழி கனைகடலே. 2.1.3
2904
கடலும்மலையும்விசும்பும் துழாயெம்போல்
சுடர்க்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ
உடலம்நோயுற்றாயோ வூழிதோறூழியே. 2.1.4
2905
ஊழிதோறூழி யுலகுக்குநீர்க்கொண்டு
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற
வாழியவானமே நீயும fமதுசூதன்
பாழிமையிற் பட்டவன்கட்பாசத்தால்நைவாயே. 2.1.5
2906
நைவாய எம்மேபோல் நாண்மதியே நீயிந்நாள்
மைவான் இருளகற்றாய் மாழாந்துதேம்புதியால்
ஐவாய் அரவணைமே லாழிப்பெருமானார்
மெய்வாசகம்கேட்டுன் மெய்ந்நீர்மைதோற்றாயே. 2.1.6
2907
தோற்றோம்மடநெஞ்ச மெம்பெருமான்நாரணற்குஎம்
ஆற்றாமைசொல்லி யழுவோமை நீநடுவே
வேற்றோர்வகையில் கொடிதாயெனையூழி
மாற்றாண்மைநிற்றியோ வாழிகனையிருளே. 2.1.7
2908
இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய்
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால்
உருளும்சகடம் உதைத்தபெருமானார்
அருளின்பெருநசையா லாழாந்துநொந்தாயே. 2.1.8
2909
நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த
நந்தாவிளக்கமே நீயுமளியத்தாய்
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான்
அந்தாமத்தண்டுழா யாசையால்வேவாயே. 2.1.9
2910
வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த
ஓவாதிராப்பக லுன்பாலேவீழ்த்தொழிந்தாய்
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த
மூவா முதல்வா இனியெம்மைச்சோரேலே. 2.1.10
2911
சோராதவெப்பொருட்கு ஆதியாம் சோதிக்கே
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன்
ஓராயிரம்சொன்ன அவற்றுளிவைப்பத்தும்
சோரார்விடார்க்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. 2.1.11