682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
ஆண்டாள் – பூரம் – வில்லிபுத்தூர் – திரு இன்றி இவை முழுமைபெறாது!
<
p class=”has-text-align-center has-luminous-vivid-amber-background-color has-background”>கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலைமகள்
தமிழகத்தில் உள்ள விருதுநகரில் இருந்து 45 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். பன்னிரு ஆழ்வார்களில், பெரியாழ்வார் அவதரித்த ஸ்தலம் ஆகும் இது. ஆனி மாதத்தின் வளர்பிறை ஏகாதசியில், ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தார் பெரியாழ்வார். ஆடி மாத வளர்பிறை சதுர்த்தியில் பூரம் நட்சத்திரத்தில் அவதரித்தார் ஸ்ரீ ஆண்டாள். எனவே ஆடிப்பூரம் விசேஷமானது!!
ஸ்ரீ ரங்கமன்னாருக்காக, நந்தவனத்தில் பூக்களைப் பறித்து வந்து தொடுத்துச் சார்த்துவார் பெரியாழ்வார். அப்படி ஒருநாள், நந்தவனத்துக்கு அவர் வந்த வேளையில், துளசி மாடத்துக்கு அருகில், சர்வ தேஜஸ் பொருந்திய குழந்தையைக் கண்டார். ஆசை ஆசையாய் குழந்தையைத் தூக்கி வளர்த்தார். குழந்தைக்கு பெரியாழ்வார் இட்ட பெயர் கோதை என விவரிக்கிறது புராணம்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வாருடைய துளசித் தோட்டத்தில்( குழந்தைப்பேறு இல்லாத பெரியாழ்வாரால்) கண்டு எடுக்கப்பட்டவருக்கு கோதை எனத் திருநாமம் சூட்டிவளர்த்து வந்தார்.
Read also: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேரோட்டம் நாளை..
பெரியாழ்வார் இறைவனுக்கு வைத்த மாலையைத் தம் பெண் அணிந்து கொண்டது உகந்தது அன்று என வருந்தம் அடைந்தார்.
வடபெருங்கோயிலுடையான் கனவில் தோன்றி, “அம்மாலை தமக்கு உகந்தது என்றும் இனி, கோதை சூடிக் களைந்த மாலையையே தனக்கு சூட்ட வேண்டும்” எனவும் பணித்தார். எனவே, அவர் தம் மகளை எம்பெருமானின் தேவிகளில் ஒருத்தி என எண்ணி ‘ஆண்டாள்’ எனவும் திருநாமம் சூட்டினார்.
ஆண்டாள் அவதாரம் செய்த நாள் நளவருடம், ஆடிமாதம் கூடிய பூர நட்சத்திரத்தில், இக்குறிப்பின்படி ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்கிறார்கள்.
பெருமாளின் 108 திருப்பதிகளில் ஆண்டாள் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்தே மொத்தம் 10 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார்.
வைணவ சமய வழிபாட்டில் ஒன்றறக் கலந்து விட்ட ஒன்று திருப்பாவையாகும். திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் ஆண்டாள் அருளியவை.
மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. இதற்கு முக்கிய காரண கர்த்தாவாக விளங்கியவர் ஸ்ரீ காஞ்சி பெரியவர். சிவன் கோவில்களில் மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடவும் ஏற்பாடு செய்தார் பெரியவர் என்பார்கள்!!
தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர்கள் அரியணை ஏறும்போது பாடப்படுகிறது.
பாவைப் பிரபந்தம் ஒரு முத்தமிழ் நூல் வகை. எப்படியெனில் வெண்பாவுக்குரிய வெண்தளை கொண்டு எட்டடித் தரவுக் கொச்சகக் கலிப்பாவாகப் பாடப்படுகிறது. எனவே இதில் இயற்றமிழ்ப் பாங்கு காணப்படுகிறது.
கன்னிப் பெண்கள் இசையுடன் பாடியாடும் பல்வரிக் கூத்தாக சிலப்பதிகார உரையில் அடியார்க்கு நல்லார் அம்மானை, தோள்நோக்கம், சாழல் கூறும் முதலியவற்றோடு பேராசிரியர் வெள்ளவாரணர் பாவைப் பாட்டைச் சேர்த்துத் தமது பன்னிரு திருமுறை வரலாற்றில் எழுதுவார். அப்படியாக இசைத் தமிழ்க் கூறும் நாடகத் தமிழ்க் கூறும் பாவைப் பிரபந்தத்தில் அமைந்திருக்கக் காணலாம் என்கிறார்கள் தமிழ் ஆய்வாளர்கள்.
‘பாவை’ என்னும் சொல்லுக்குப் பொம்மை என்ற பொருளும் உண்டு! பஞ்சாய்க்கோரையால் பொம்மை செய்து இளம் பெண்கள் விளையாடுதல் பண்டைய வழக்கம். எனவே இளம் பெண்களைப் பாவையர் என்று அழைப்பதும் உண்டு
‘இது என்பாவை, பாவை இது என’ இது ஐங்குறுநூற்றுப் பாடல் தொடரில் வரும் வரியாகும். ‘பாவை’ என்பது இளம் பெண்ணையும், பொம்மையையும் முறையே குறிப்பதை அறிய முடிகிறது.
ஆண்டாள் அருளிய ‘நாச்சியார் திருமொழி’ பாடல்களைப் படிக்கும் போது, சாதாரண ஆண் – பெண் உறவை மனதில் கொண்டு படித்தல் கூடாது. திருப்பாவையை நிறைவு செய்யும்போது, “மற்ற காமங்களை நீக்கி விடு” என்று ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானிடம் பிரார்த்திக்கிறாள் என்பதையும் மறந்து விடக்கூடாது!!
அதே நினைவோடு நம் மனதில் உள்ள மனித இன்பங்களை அறவே ஒழித்து, ஓர் ஆன்மா, பரமாத்மா மீது கொண்ட காதலையும், பரமாத்மாவை நினைத்து ஏங்குவதையும், பரமாத்மாவை அல்லாது வேறு எதனுடனும் தனக்கு உறவு கூடாது என்பதையும், பரமாத்மாவுடன் அது திளைக்கும் இன்பத்தையும் மட்டுமே மனதில் திடமாகக் கொண்டு படிக்க வேண்டும். ஜீவாத்மா பரமாத்மா உறவை புரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நாச்சியார் திருமொழி பாடல்களின் மிக உயர்ந்த கருத்துக்கள் புலப்படும்.
ஸ்ரீஆண்டாள் சுகப்பிரம்மம் என்ற ரிஷியை கிளி ரூபத்தில் ரங்கநாதரிடம் அனுப்பியதாகவும், தூது சென்று வந்த கிளியிடம், என்ன வரம் வேண்டும்? என்று ஆண்டாள் கேட்க, சுகப்பிரம்மம், இதே கிளி ரூபத்தில் உங்கள் கையில் தினமும் இருக்க அருள் புரிய வேண்டும்! என்று வேண்டிக் கொண்டார் என்றும், அதனால் ஆண்டாளின் கையில் கிளி இடம் பெற்றிருப்பதாகவும் புராணம் கூறுகிறது.
ஆண்டாளின் இடத்தோளில் கிளி இருக்கும். ஆனால் மதுரை மீனாட்சி அம்மையிடம் கிளியானது வலத்தோளில் அமர்ந்திருக்கும். கிளிகள் வேதங்களை உலா வரும் பொழுது உச்சரிக்கும் என்கிற நம்பிக்கையும் இறை பக்தர்களிடம் உண்டு!! எனவேதான் அலங்காரம் செய்து அம்மன் உலா வரும் பொழுதும் ஆண்டாள் உலா வரும் பொழுதும் கிளியே பத்திரமாக சொருகுகி அழகு பார்க்கிறார்கள்.
ஆண்டாள் கோவில் கிளி தினமும் புதிதாகச் செய்யப்படுகிறது. கிளி மூக்கு – மாதுளம் பூ, மரவல்லி இலை – கிளியின் உடல்; இறக்கைகள் – நந்தியாவட்டை இலையும் பனை ஓலையும்;, கிளியின் வால் பகுதிக்கு வெள்ளை அரளி மற்றும் செவ்வரளி மொட்டுகள்; கிளியின் கண்களுக்கு காக்காய்ப் பொன் என்று சொல்லப்படும் பொருளைப் பயன்படுத்துவார்கள். இவற்றை பயன்படுத்தி கிளியை உருவாக்குகின்றனர்.
சாதாரண மனிதர்களைக்காட்டிலும் முனிவர்கள் உயர்ந்தவர்கள். அவர்களை விட ஆழ்வார்கள் உயர்ந்தவர்கள்.அவர்களுள்ளும் பெரியாழ்வார் மிகவும் உயர்ந்தவர். பெரியாழ்வாரையும் விஞ்சி உயர்ந்து நிற்பவர் ஆண்டாள் என்பது ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை கருத்து.
வலது கையில் கிளி ஏந்திய மீனாட்சி யையும் இடது கையில் கிளி ஏந்திய ஆண்டாளையும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டத்தையும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அழகையும் கீழே புகைப்படமாகக் காண்கிறீர்கள்..