திருவிருத்தம்

நம்மாழ்வார்

2548: செவிலி வெறுத்தலைத் தலைவி தோழியர்க்கு உரைத்தல்

ஊழிக ளாயுல கேழுமுண் டானென் றிலம்,பழங்கண்டு
ஆழிக ளாம்பழ வண்ணமென் றேற்க்கு,அஃ தேகொண்டன்னை
நாழிவ ளோவெனும் ஞாலமுண் டான்வண்ணம் சொல்லிற்றென்னும்
தோழிக ளோ.உரை யீர்,எம்மை அம்மனை சூழ்கின்றவே. 71

2549: இருளுக்கு ஆற்றாத தலைவி இளம்பிறைகண்டு தளர்ந்து உரைத்தல்

சூழ்க்கின்ற கங்குல் சுருங்கா இருளின் கருந்திணிம்பை,
போழ்கின்ற திங்களம் பிள்ளையும் போழ்க, துழாய்மலர்க்கே
தாழ்கின்ற நெஞ்சத் தொருதமி யாட்டியேன் மாமைக்கின்று
வாழ்கின்ற வாறிது வோ,வந்து தோன்றிறு வாலியதே. 72

2550: பிறையுடை மாலைக்கு ஆற்றாத தலைவியின் தளர்ச்சிக்கு பாங்கி இரங்கல்

வால்வெண் ணிலவுல காரச் சுரக்கும்வெண் திங்களென்னும்,
பால்விண் சுரவி சுரமுதிர் மாலை, பரிதிவட்டம்
போலும் சுடரட லாழிப்பி ரான்பொழில் ஏழளிக்கும்
சால்பின் தகைமைகொ லாம்,தமி யாடி தளர்ந்ததுவே? 73

2551: தலைவனது தார்மணம் கொண்டுவரும் தென்றலைத் தலைவி மகிழ்ந்துரைத்தல்

தளர்ந்தும் முறிந்தும் வருதிரைப பாயல், திருநெடுங்கண்
வளர்ந்தும் அறிவுற்றும் வையம் விழுங்கியும், மால்வரையைக்
கிளர்ந்தும் அறிதரக் கீண்டெடுத் தான்முடி சூடுதுழாய்
அளைந்துண் சிறுபசுந் தென்றல்,அந் தோவந் துலாகின்றதே. 74

2552: மதியுடம்படுக்கலுற்ற தலைவன் தலைவி தோழியரைப் பதிவினாதல்

உலாகின்ற கெண்டை ஒளியம்பு,எம் ஆவியை ஊடுருவக்
குலாகின்ற வெஞ்சிலை வாண்முகத் தீர்,குனி சங்கிடறிப்
புலாகின்ற வேலைப் புணரியம் பள்ளியம் மானடியார்
நிலாகின்ற வைகுந்த மோ,வைய மோநும் நிலையிடமே? 75

2553: மாலை பெறாது வருந்தும் தலைவி மதிக்கு வருந்தி நெஞ்சொடு கூறல்

இடம்போய் விரிந்திவ் வுலகளந் தானெழி லார்தண்டுழாய்,
வடம்போ தினையும் மடநெஞ்ச மே,நங்கள் வெள்வளைக்கே
விடம்போல் விரித லிதுவியப் பேவியன் தாமரையின்
தடம்போ தொடுங்க,மெல் லாம்பல் அலர்விக்கும் வெண்திங்களே. 76

2554: தலைவி மாலைப் பொழிது கண்டு வருந்தல்

திங்களம் பிள்ளை புலம்பத்தன் செங்கோ லரசுபட்ட
செங்களம் பற்றிநின் றெள்குபுன் மாலை,தென் பாலிலங்கை
வெங்களம் செய்தனம் விண்ணோர் பிரானார் துழாய்துணையா
நங்களை மாமைகொள் வான்,வந்து தோன்றி நலிகின்றதே. 77

2555: பிரிவாற்றாத தலைவி தலைவன் ஆற்றலைக் கருதி நெஞ்சழிந்து இரங்கல்

நலியும் நரகனை வீட்டிற்றும், வாணன்திண் டோ ள்துணித்த
வலியும் பெருமையும் யாஞ்சொல்லும் நீர்த்தல்ல, மைவரைபோல்
பொலியும் உருவில் பிரானார் புனைபூந் துழாய்மலர்க்கே
மெலியும் மடநெஞ்சி நார்,தந்து போயின வேதனையே. 78

2556: தலைவனைப் பிரியாத மகளிரது சிறப்பைக் கூறி தலைவி இரங்கல்

வேதனை வெண்புரி நுலனை, விண்ணோர் பரவநின்ற
நாதனை ஞாலம் விழுங்கும் அநாதனை, ஞாலம்தத்தும்
பாதனைப் பாற்கடல் பாம்பணை மேல்பள்ளி கொண்டருளும்
சீதனை யேதொழு வார்,விண்ணு ளாரிலும் சேரியரே. 79

2557: பிரிவாற்றாத தலைவி மாலைப் பொழுது கண்டு இரங்கல்

சீரர சாண்டுதன் செங்கோல் சிலநள் செலீஇக்கழிந்த,
பாரர சொத்து மறைந்தது நாயிறு, பாரளந்த
பேரர சே.எம் விசும்பர சே.எம்மை நீத்துவஞ்சித்த
ஓரர சே.அரு ளாய்,இரு ளாய்வந் துறுகின்றதே. 80

Leave a Reply