திருவிருத்தம்

நம்மாழ்வார்

2538: தோழி தலைவனது நீர்மையைத் தலைவிக்குக் கூறல்

வாசகம் செய்வது நம்பர மே?, தொல்லை வானவர்தம்
நாயகன் நாயக ரெல்லாம் தொழுமவன், ஞாலமுற்றும்
வேயக மாயினும் சோரா வகையிரண் டேயடியால்
தாயவன், ஆய்க்குல மாய்வந்து தோன்றிற்று நம்மிறையே. 61

2539: தலைவியின் ஆற்றாமையைத் தோழி தலைவனுக்குக் கூறல்

இறையோ இரக்கினும் ஈங்கோர்பெண் டால்,என வும்மிரங்காது,
அறையோ. எனநின் றதிரும் கருங்கடல், ஈங்க்கிவள்தன்
நிறையோ இனியுன் திருவரு ளாலன்றிக் காப்பரிதால்
முறையோ, அரவணை மேல்பள்ளி கொண்ட முகில்வண்ணனே. 62

2540: தலைவனை இயற்பழித்த தோழிக்குத் தலைவி இயற்பட மொழிதல்

வண்ணம் சிவந்துள வானா டமரும் குளிர்விழிய,
தண்மென் கமலத் தடம்போல் பொலிந்தன, தாமிவையோ
கண்ணன் திருமால் திருமுகந் தன்னொடும் காதல்செய்தேற்
கெண்ணம் புகுந்து,அடி யேனொடிக் கால மிருகின்றதே. 63

2541: தலைவன் பேர்கூறித் தரித்திருத்தலைத் தலைவி தோழிக்குக் கூறி இரங்கல்

இருக்கார் மொழியால் நெறியிழுக் காமை, உலகளந்த
திருத்தா ளிணைநிலத் தேவர் வணங்குவர், யாமும் அவா
ஒருக்கா வினையொடும் எம்மொடும் நொந்து கனியின்மையின்
கருக்காய் கடிப்பவர் போல்,திரு நாமச்சொல் கற்றனமே. 64

2542: தலைவி நோக்கின் வாசி கண்டு தலைவன் குறிப்பு அறிந்து உரைத்தல்

கற்றுப் பிணைமலர்க் கண்ணின் குலம்வென்று,ஓ ரோகருமம்
உற்றுப் பயின்று செவியொடு சாவி, உலகமெல்லாம்
முற்றும் விழுங்க்கி யுமிழ்ந்த பிரானார் திருவடிக்கீழ்
உற்றும் உறாதும், மிளீர்ந்தகண் ணாயெம்மை உண்கின்றவே. 65

2543: தலைவன் பாங்கனுக்குக் கழற்றெதிர் மறுத்தல்

உண்ணா துறங்கா துணர்வுறும் எத்தனை யோகியர்க்கும்
எண்ணாய் மிளிரும் இயல்பின வாம்,எரி நீர்வளிவான்
மண்ணா கியவெம் பெருமான் றனதுவை குந்தமன்னாள்
கண்ணாய் அருவினை யேன்,உயி ராயின காவிகளே. 66

2544: தலைவன் பாங்கனுக்குத் தன் வலியழிவு உரைத்தல்

காவியும் நீலமும் வேலும் கயலும் பலபலவென்று,
ஆவியின் தன்மை அளவல்ல பாரிப்பு, அசுரர்செற்ற
மாவியம் புள்வல்ல மாதவன் கோவிந்தன் வேங்கடம்சேர்
தூவியம் பேடையன் னாள்,கண்க ளாய துணைமலரே. 67

2545: காலமயக்கு

மலர்ந்தே யொழிலிந்தில மாலையும் மாலைபொன் வாசிகையும்
புலந்தோய் தழைப்பந்தர் தண்டுற நாற்றி, பொருகடல்சூழ்
நிலந்தா வியவெம் பெருமான் தனதுவை குந்தமன்னாய்.
கலந்தார் வரவெதிர் கொண்டு,வன் கொன்றைகள் கார்த்தனவே. 68

2546: மாலைக்கு இரங்கிய தலைவியைத் தோழி ஆற்றுதல்

காரேற் றிருள்செகி லேற்றின் சுடருக் குளைந்து, வெல்வான்
போரேற் றெதிர்ந்தது புன்தலை மாலை, புவனியெல்லாம்
நீரேற் றளந்த நெடிய பிரானரு ளாவிடுமே?
வாரேற் றிளமுலை யாய்,வருந் தேலுன் வளைத்திறமே. 69

2547: தலைவி இரவின் நெடுமைக்கு இரங்கல்

வளைவாய்த் திருச்சக் கரத்தெங்கள் வானவ னார்முடிமேல்,
தளைவாய் நறுங்கண்ணித் தண்ணந் துழாய்க்குவண் ணம்பயலை,
விளைவான் மிகவந்து நாள்திங்க ளாண்டூழி நிற்கவெம்மை
உளைவான் புகுந்து,இது வோர்கங்குல் ஆயிரம் ஊழிகளே. 70

Leave a Reply